இந்திய விடுதலைப் போரில் அதிமான பங்களிப்பை பழங்குடியினர் வழங்கியுள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி வாழும் அவர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடும் துயரங்களை அனுபவித்தனர்.
விடுதலையின் அமுதப் பெருவிழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் தலைவர்களையும் நாம் அறிய வேண்டும். நில உரிமை கிடைக்கும் நாளே பழங்குடிகளுக்கு நிரந்தர வாழ்வு கிடைக்கும் என்பதே பழங்குடியினத் தலைவர்களின் கனவு.
1. டில்கா மாஞ்சி: பிஹாரைச் சேர்ந்த இவர், 1785ல் நடந்த மாஞ்சி புரட்சியால் அறியப்படுகிறார். 1770களில் மிக மோசமான பஞ்சம் ஏற்பட்டது. பிஹாரின் சந்தால் பகுதி அதில் பாதிக்கப்பட்டது. அப்போது தம் மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் தான் இந்த டில்கா மாஞ்சி. சந்தால்களின் போராட்டத்தை அவர் முன்னெடுத்தார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுத்தவர் டில்கா மாஞ்சி. 1784ல் தான் மாஞ்சியை ஆங்கிலேயர்களால் நெருங்க முடிந்தது. அவரை ஆங்கிலேயர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். குதிரையின் வாலில் அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஓர் ஆலமரத்தில் அவரது உடலை தொங்க விட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், அவர் தொங்கவிடப்பட்ட இடத்தில் அவர் நினைவாக சிலை நிறுவப்பட்டது. பாகல்பூர் பல்கலைக்கழகம் அவரது பெயர் டில்கா மாஞ்சி பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிறது.
2. பிர்சா முண்டா: 1890-களில் நாட்டில் பெரும் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. பழங்குடிகள் உயிர் வாழவே போராடிக் கொண்டிருந்த நேரம் அது. இந்தப் பின்னணியில் பழங்குடிகளின் உரிமைகளைக் காக்கத் தலைமை வகித்துச் சோட்டா நாக்பூர் பகுதியில் ஒருங்கிணைத்து, பழங்குடி சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை 1894 அக்டோபர் 1-ம் தேதி பிர்சா நடத்தினார். பழங்குடிகளின் உரிமை காக்க நாட்டில் நடைபெற்ற முதல் போராட்டம் அதுதான்.
ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராட பழங்குடிகளைத் திரட்டிக் கெரில்லா வீரர்கள் கொண்ட படையையும் பிர்சா முண்டா வைத்திருந்தார். 1900-ல் ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டு சிறையில் 25 வயதில் மரித்துப் போனார். பழங்குடியின தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் மிர்சா முண்டா. இவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர். துணிச்சலுடன் போராடிய தலைவரான அவர், ஆங்கிலேயேருடன் ஏற்பட்ட போராட்டத்தில் இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினார். பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15-ம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 1895-லிருந்து 1900 வரை ஆங்கிலேயரை எதிர்த்து பிர்சா முண்டா செய்த கலகம், இன்றும் முந்தாரி கிராமிய பாடல்கள் மற்றும் கதைகளின் வழியாகப் போற்றப்படுகிறது
3. அல்லுரி சீதாராம ராஜு: ஆந்திர மாநிலத்தில் 1897ல் பிறந்தார். மத்திய சிறையில் புகைப்பட ஊழியராகப் பணியாற்றியவர் தந்தை. அவரை சிறு வயதிலேயே இழந்தார். மொகல்லு கிராமத்தில் வளர்ந்தார். 18 வயதில் துறவு மேற்கொண்டு, பல இடங்களுக்கு யாத்திரை சென்றார். இமயமலைக்குச் சென்றபோது, புரட்சி வீரர் பிருத்வி சிங் ஆசாத்தை சந்தித்தார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் புரட்சிப் படை பற்றி அவர் மூலமாக அறிந்தார். விடுதலைப் போராட்டத்துக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட அவர்களுடன் இவரும் இணைந்தார்.
ஆங்கில ஆட்சியில் வதைபடும் மக்களின் துயரம் இவரைக் கொந்தளிக்க வைத்தது. அகிம்சை முறையைக் கைவிட்டார். உள்ளூர் அதிகாரிகளுடன் மோத ஆரம்பித்தார். அடர்ந்த காட்டுக்குள் சென்று பழங்குடியினரைச் சந்தித்தார். படிப்பறிவற்ற அந்த ஏழை மக்கள் ஆங்கிலேயரால் வஞ்சிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் வந்தனர். கள் இறக்குவது, விறகு வெட்டுவது தடுக்கப்பட்டதால், அதை நம்பி வாழ்ந்த ஏராளமானோர் பட்டினி கிடந்தனர். இதை எதிர்த்து, அந்த பழங்குடி மக்களில் ஒருவராக மறுவடிவம் பெற்றார். பல்வேறு இன மக்களை ஒன்றுதிரட்டி, கொரில்லாப் போர் முறையில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
மக்கள் படையின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக 1922-ல் முதல் தாக்குதல் நடத்தினார். மூன்று காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. அங்கிருந்த ஏராளமான துப்பாக்கிகள், ஆயுதங்களைக் கைப்பற்றினர். இந்த படையை எதிர்கொள்ள முடியாமல் ஆங்கில அரசு தடுமாறியது. இது, ‘ராம்பா கலகம்’ எனப்படுகிறது.
காவல் துறை மற்றும் ராணுவத்தை ஏவி, ராஜுவைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. அவர்களை எதிர்த்து மீண்டும் தாக்குதல் நடத்தி வெற்றிகண்டது இவரது படை. அதுமுதல், ஆங்கிலேயருக்கும், இவரது படையினருக்கும் அவ்வப்போது சண்டை மூண்டது. அனைத்திலும் இவரது படையே வெற்றிகண்டது. ஏறக்குறைய 2 ஆண்டுகள் ஆங்கில அரசை ஆட்டிப் படைத்தார்.
பின்னர், பெரும் படையுடன் வந்து ஆங்கிலப் படை தாக்குதல் நடத்தியது. காடு, மலைகளில் ஒளிந்தவாறே கொரில்லாப் போர் முறை மூலம் படைகளை விரட்டி அடித்த இவர், இறுதியில் போலீஸாரிடம் பிடிபட்டார். எந்த சட்ட நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் ஆங்கில அரசு இவரை 1924-ல் சுட்டுக்கொன்றது. அப்போது இவருக்கு வயது 26.