லக்கி லூக். ஐரோப்பாவில் ஆஸ்ட்ரிக்ஸ், டின் டின் ஆகிய காமிக்ஸ் ஹீரோக்களுக்கு அடுத்தபடியாக மிகப் பிரபலமான ஹீரோ. மோரிஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டின் படைப்பு. பெல்ஜிய காமிக்ஸ். மோரிஸோடு கோஸ்ஸின்னி என்ற புகழ்பெற்ற கலைஞரும் பிறகு இணைந்து லக்கி லூக்கின் சாகசங்களை மெருகூட்டினார். நம் ஹீரோ பிறந்த வருடம் 1946.
ஜாலி ஜம்பர் என்ற குதிரையைத் தவிர லக்கியின் மற்றொரு அடையாளம், அவரது வேகம். தன் நிழலைவிட வேகமாகச் சுடக்கூடியவர். அதாவது, மனிதர் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டு திரும்ப உறையில் வைத்த பிறகுதான் அவருடைய நிழல் துப்பாக்கியை எடுக்கும். அவ்வளவு வேகம்.
ஏற்கெனவே சொன்னபடி, ஜாலி ஜம்பர் என்ற வெள்ளைக் குதிரைதான் லக்கியின் ஒரே கம்பனி. ஜாலி ஜம்பர் முதன்முதலில், கதையில் வர ஆரம்பித்தபோது, வழக்கமான குதிரையாகத்தான் இருந்தது. ஆனால், இந்தக் கதையில் கோஸ்ஸின்னியும் ஈடுபட ஆரம்பித்ததும், ஜாலி ஜம்பர் மிகுந்த புத்திசாலிக் குதிரையாக மாற ஆரம்பித்தது. லக்கி லூக்கோடு சதுரங்கம் ஆடுவது, பேசுவது என ஜகஜ்ஜாலக் கில்லாடியானது குதிரை. ஒரு கட்டத்தில் தன் நிழலைவிட வேகமாக ஓட ஆரம்பித்தது ஜாலி ஜம்பர். சமயங்களில் சமைப்பது, ஸ்கிப்பிங் ஆடுவது போன்ற காரியங்களையும் செய்யும்.
பெல்ஜிய காமிக்ஸ் ஹீரோவாக இருந்தாலும் லக்கி லூக்கின் களம் என்பது 1860-களின் அமெரிக்கா. ரயில் பாதைகள், தந்திக் கம்பங்கள் அமைக்கப்பட்டுகொண்டிருக்கும் வளர்ச்சியடையாத அமெரிக்கா. நத்திங்கல்ச்தான் பெரும்பாலும் இவர் இருக்கும் நகரம். அந்த நகரத்துக்கோ, போகும் வழியில் இருக்கும் வேறு நகரங்களுக்கோ, சந்திக்கும் மனிதர்களுக்கோ வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பார் லக்கி. அந்தப் பகுதியையே கலக்கிக்கொண்டிருக்கும் டால்டன் சகோதரர்கள் அவ்வப்போது சிறையிலிருந்து தப்பிவிட, அவர்களைப் பிடித்து மீண்டும் சிறையில் தள்ளுவதும் இவரது பணி.
இதில் டால்டன் சகோதரர்களைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். போக்கிரிகளான இந்த நான்கு சகோதரர்களும் வெவ்வேறு உயரம் கொண்டவர்கள். ஆனால், அறிவு அப்படியே உல்டாவாக இருக்கும். குட்டையாக இருக்கும் ஜோ டால்டன் சற்று அறிவாளி. இருப்பதிலேயே உயரமாக இருக்கும் ஆவரெல் டால்டன் படுமுட்டாள்.
அடுத்ததாக, ரான்டன்ப்ளான் என்ற, உலகத்திலேயே முட்டாளான, சோம்பேறி நாயும் சில கதைகளில் வந்து அதகளம் பண்ணிவிட்டுப் போகும் (இந்த நாயை மையமாக வைத்தும் கதைகள் உண்டு).
ஜேன், பில்லி, நீதிபதி ராய் பீன், ஜெஸ்ஸி ஜேம்ஸ் போன்ற அந்தக் காலத்து அமெரிக்காவில் உலாவிய கதாபாத்திரங்கள் லக்கியின் கதைகளில் வந்துபோவார்கள். இவர்களெல்லாம் அந்தக் கால அமெரிக்காவில் வெவ்வேறு காலகட்டத்தில் வசித்தவர்கள் என்றாலும் லக்கி மட்டும் தோற்றம் மாறாமல் இவர்களைச் சந்தித்துவிட்டுப் போவார். ஆரம்பகாலக் கதைகளைத் தவிர, பிறகு வந்த கதைகளில் யாரையும் லக்கி சுட்டுக்கொல்வதில்லை.
அதேபோல, ஆரம்பகாலக் கதைகளில் லக்கியின் வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும். ஆனால், சிகரெட்டின் தீமை உலகம் முழவதும் உணரப்பட ஆரம்பித்ததும், வாயில் சிகரெட்டுக்குப் பதிலாக, புல் ஒன்றை வைத்து மெல்ல ஆரம்பித்தார் லக்கி. இதற்காக மோரிஸுக்கு விருதே கொடுத்தார்கள்.
பிரெஞ்சு மொழியில் பேச ஆரம்பித்த லக்கி லூக் இப்போது தமிழ் உட்பட 23 மொழிகளில் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழில் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் இந்தக் கதைகளை வெளியிடுகிறார்கள்.
-டெக்ஸ், காமிக்ஸ் ஆர்வலர்,
தொடர்புக்கு: texwillerlucky@gmail.com