வலைஞர் பக்கம்

சுப்பிரமணியன் சந்திரசேகர் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற வானியல் அறிஞர்

நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் (Subrahmanyan Chandrasekhar) பிறந்த தினம் (அக்டோபர் 19) இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*பாகிஸ்தானின் லாகூர் நகரில் (1910) பிறந்தார். தந்தை அரசு அதிகாரி. லாகூரில் 5 ஆண்டுகள், லக்னோவில் 2 ஆண்டுகள் வசித்த பிறகு, குடும்பம் சென்னையில் குடியேறியது. சகோதர, சகோதரிகளுடன் வீட்டிலேயே ஆரம்பக் கல்வி பயின்றார்.

*திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி அர்னால்டு சோமர்ஃபெல்டு இந்தியா வந்திருந்தார். அவரைச் சந்தித்து இயற்பியலில் புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்துகொண்டார்.

*பல நூல்களைப் படித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தனது ஆராய்ச்சிகள் குறித்த முதல் கட்டுரையை 1929-ல் வெளியிட்டார். சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் தன் கட்டுரை அடிப்படையில் உரை நிகழ்த்தினார். அடுத்த ஆண்டில் மேலும் 2 கட்டுரைகள் வெளியிட்டார்.

*மேற்படிப்புக்கான உதவித் தொகை கிடைத்தது. 1930-ல் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து, 1933-ல் முனைவர் பட்டம் பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டியின் இதழ்களில் இவரது கட்டுரைகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, உலகம் போற்றும் வானியல் அறிஞரானார்.

*ட்ரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியராகச் சேர்ந்தார். இயற்பியலில் பல துறைகளிலும், வானியல் இயற்பியலிலும் பல்வேறு களங்களில் திறமைகளை வளர்த்துக்கொண்டார். மீண்டும் ஆய்வுகளைத் தொடர்ந்தார்.

*நட்சத்திரங்களின் கட்டமைப்பு குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டார். தனது ஆராய்ச்சிகள் குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றினார். 1937-ல் சிகாகோ பல்கலைக்கழக வானியல் ஆய்வாளராகப் பதவியேற்று, அங்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இங்கு 27 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

*ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு ‘சந்திரசேகர் லிமிட்’ எனப்படுகிறது.

*ஆராய்ச்சிகள் சம்பந்தமாக துல்லியமான விவரங்களை வழங்கியவர். அனைவருக்கும் புரியுமாறு எளிதில் விளக்கக்கூடியவர். இவரது ஆராய்ச்சிகளின் அடிப்படைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, மறைதல் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு இப்போதும் வழிகாட்டியாக உள்ளது. பல நூல்களை எழுதியுள்ளார்.

*தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்ற நூலாக வெளியிட்டார். 1953-ல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகப் பணியாற்றினார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ‘ஆடம் பரிசு’, ராயல் சொசைட்டியின் காப்ளே பதக்கம் உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றார்.

*நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் ஏ.ஃபவுலருடன் இணைந்து இவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற உலகப் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சி.வி.ராமன் இவரது சித்தப்பா. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 85-வது வயதில் (1995) மறைந்தார்.

SCROLL FOR NEXT