வங்கியில் என் உதவியாளர் நாகுவின் யோசனைப்படி, அப்பிரமுகரை நேரில் சந் தித்து காசோலையைப் பெற்றுவரலாம் என்று காரில் புறப்பட்டோம். நாகு சமீபத்தில்தான் மாற்றலாகி வந்தார். சற்று நேரத்தில் நாகு என்னிடம், “நீங்கள் காரிலேயே இருங்கள். நான் அவர் எங்கிருக் கிறார் என்று விசாரித்து வரு கிறேன்” என்று சொல்லிச் சென்றார். கார் வணிக வளாகத்தின் எதிர் புறம் நின்றது. வளாகத்தின் முன்புறம் பூக்கடை. அது மகாலிங்கத்தினுடையது..
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நான் மேலாளராக பணி யேற்ற போது, மகாலிங்கம் அவரது பூக்கடைக்காக ஒரு சிறிய தொகையை கடனாகக் கேட்டார். வாராக் கடன் அதிகமுள்ள அக் கிளையில் மேலும் அதை அதி கரிக்க வேண்டாமென்று மறுத்து விட்டேன். அவரும் விடாப்பிடியாக கேட்டு சண்டை பிடித்தார். அத னால் இப்போதும் நன்றாக நினைவிலிருக்கிறது.
கடனுக்குப் பிணையாக என்ன கொடுப்பீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், “ஐயா! நாங்கள் பரம்பரை பணக்காரர்கள்தான். பங் காளிச் சண்டையில் என் பங்குக்கு கிடைக்கவேண்டிய சொத்து, நீதி மன்ற வழக்கிலிருக்கிறது” என்றார். நான் “இந்தக் கதையெல்லாம் என் னிடம் வேண்டாம். உன்னைப் போல எத்தனைப் பேரை நான் பார்த் திருக்கிறேன். என் காதிலேயே பூசுற்றுகிறாயா? பூக்கடைக்கு ஏதா வது முதலீடு போட்டிருக்கிறாயா என்ன? நாளையே நீ ஒடிப்போக மாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கண்டபடி திட்டி அனுப்பிவிட்டேன். அவரும் அவமானத்தால் குறுகி என்னிடம் மல்லுக்கட்ட திராணியின்றி சென்றார்.
நாகு விசாரித்துக்கொண்டு வந்தபின் கிளம்பினோம். ஆண்டுக் கணக்கு முடிக்க இன்னும் சில நாட்களே உள்ளன. நிர்வாகம் நிர்ணயித்த சேமிப்பு இலக்குக்கு தற்போதைய இலக்கம் சற்றே குறைவாக உள்ளது. இன்றைய முயற்சி வெற்றிபெற்றால், இலக் கையும் எட்டி விடலாம்; அடுத்து வரவிருக்கும் பதவி உயர்வும் இலகுவாக கிடைத்துவிடும்.
நாகுவிடம் மற்ற விபரங்கள் ஏதாவது தெரியுமா? என்று கேட் டேன். அதற்கு அவர் “ஐயா! அரசுத் துறை அதிகாரிகள் மூலமாக அக்குடும்பத்தினருக்கு இப்பெரும் தொகை, நில ஆர்ஜிதம் தொடர்பாக கொடுக்கப்பட்டது என்பதை மட்டும் அறிவேன். அவர்கள் இன் னும் அந்நிலப்பகுதியிலுள்ள வீட் டில்தான் இருக்கிறார்களாம். கோட்டை வீட்டுக்காரர்கள் என் றால் யார் வேண்டுமானாலும் அடையாளம் காட்டுவார்களாம்” என்றார்.
கார் ஆற்றுப்படுகையைத் தாண்டியது. பரந்த நிலப்பரப்பு. தண்ணீரில்லாமல் வெடிப்பு விட்டிருந்தது. ஒற்றையடிப்பாதை போன்ற குறுகிய மேடுபள்ளமான சாலையில் கார் ஆடிக் கொண்டே ஊர்ந்து சென்றது. ஒருவழியாக பண்ணை வீடு போன்று அமைந்த அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். நாகு வேலியைத் திறந்து உள்ளே நுழைந்து கூப்பிட்டார்.
பின்புற மலர்த் தோட்டத்திலி ருந்து தலையில் முண்டாசுடன் ஒருவர் வந்தார். “வாங்க வாங்க, என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே முண்டாசை அவிழ்த் தார். அது மகாலிங்கம்!
நான் தர்மசங்கடத்தின் உச்சத் தில் என்ன பேசுவது என்றே தெரி யாமல் வாயடைத்து நின்றேன். நாகு எதற்காக வந்தோம் என்ப தைச் சொன்னார். மகாலிங்கம் குறிப்பால் உணர்த்தியத்தை அறிந்து தோட்டக்காரன் எங்க ளுக்கு இளநீர் கொண்டுவந்தான்.
மகாலிங்கம் என்னிடம் “ஐயா! என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களிடம் சொன்னது போல, வழக்கில் எங்களுக்கு ஆதர வாக தீர்ப்பு வந்து இரண்டாண்டு கள் ஆகின்றன. ஆற்றுநீர் அருகி, மழையும் பொய்த்ததால் விவசாயம் பயனற்றதாகி விட்டது. எங்கள் நிலத்தில் பெரும் பகுதியை அரசு ஆர்ஜிதம் செய்யக் கேட்ட போது மறுவார்த்தை பேசாமல் கொடுத்து விட்டோம். காசோலை என் பெயரில்தான் உள்ளது. நேற்றிலிருந்து டவுனில் உள்ள வங்கிக் கிளை மேலாளர்கள் ஒவ் வொருவராக வந்து வட்டி அதிக மாக கொடுக்கிறோம் என்றார்கள். ஆனால் நான் சொல்லிவிட்டேன், எங்கள் ஊர் வங்கியில்தான் போடு வேன் என்று. நானே எடுத்துவர இருந்தேன்; அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள்” என்று இயல் பாக பேசி காசோலையை எடுத்து வந்து கொடுத்தார்.
நானோ குற்றவுணர்வினால் கூசி, கூனிக்குறுகி வாங்கிக் கொண்டேன்!