படித்த இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி அதன்மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன. அத்திட்டங்களின் கீழ் சுய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை (யு.ஒய்.இ.ஜி.பி.) தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான அடிப்படை தகுதி, வங்கிக் கடன் விவரம் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ராசு.
# யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க அடிப்படை கல்வித் தகுதி, வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் நோக்கம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாகும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், சிறப்பு பிரிவினர் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
# எதன் அடிப்படையில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது?
ஆயத்த (ரெடிமேட்) ஆடை தயாரிப்பு போன்ற உற்பத்தி பிரிவு, சர்வீஸ் ஸ்டேஷன், ஜெராக்ஸ் கடை போன்ற சேவைப் பிரிவு, மளிகைப் பொருள் விற்பனை போன்ற வியாபார பிரிவு ஆகிய 3 வகைகளில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
# அனுமதிக்கப்படும் வங்கிக் கடன், தொழிலுக்கு ஏற்ப மாறுமா?
ஆம். உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு ரூ.5 லட்சம், சேவை பிரிவுத் தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரப் பிரிவுத் தொழிலுக்கு ரூ.1 லட்சம் திட்ட முதலீட்டு வங்கிக் கடனாக வழங்கப்படும். அதில் 5 சதவீதம் தொழில் தொடங்குபவரின் முதலீடு இருக்கவேண்டும்.
# திட்ட மதிப்பீட்டில் வங்கி அனுமதிக்கும் கடன் தொகை எவ்வளவு?
நாம் தொடங்கும் தொழிலுக்கு உரிய திட்ட மதிப்பீட்டை வங்கியிடம் வழங்கவேண்டும். அதை வங்கி நிர்வாகத்தினர் பரிசீலனை செய்து 90 - 95 சதவீதம்வரை கடன் வழங்க அனுமதிப்பார்கள்.
# வங்கிக் கடனில் வழங்கப்படும் மானியத்தின் அளவு எவ்வளவு?
திட்ட முதலீட்டில் 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இது உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரப் பிரிவு என அனைத்துக்கும் பொருந்தும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)