வலைஞர் பக்கம்

மனோரமா 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

கின்னஸ் சாதனை படைத்த நடிகை

‘ஆச்சி’ என தமிழ் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை மனோரமா (Manorama) பிறந்த தினம் இன்று (மே 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் வசதியான குடும்பத்தில் (1937) பிறந்தவர். இயற்பெயர் கோபிசாந்தா. தந்தை பிரிந்து சென்ற பிறகு, குழந்தையாக இருந்த மனோரமாவையும் அழைத்துக்கொண்டு, காரைக்குடி அடுத்த பள்ளத்தூருக்கு குடி பெயர்ந்தார் தாய்.

# மூன்று வயதிலேயே மிக அருமை யாக பாடுவாராம். பலகாரக் கடை நடத்தி வந்த தாயின் உடல்நலம் குன்றியதால், 6-ம் வகுப்புடன் இவரது படிப்பு நின்றது. ஒரு வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்தார்.

# எதேச்சையாக நாடகத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அருமையாகப் பாடியதுடன், அற்புதமாக நடித்தும், நடனமாடியும் அனைவரையும் கவர்ந்தார் இந்த 12 வயது சிறுமி. ‘பள்ளத்தூர் பாப்பா’ என அழைக்கப்பட்டார். பின்னர் ‘மனோரமா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வைரம் நாடக சபாவில் சிறு வேடங்களில் நடித்தார்.

# பி.ஏ.குமார் என்பவர் மூலமாக நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எஸ்எஸ்ஆர் நாடக மன்றத்தில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். மொத்தம் 1,000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘நாடக உலகின் ராணி’ எனப் போற்றப்பட்டார்.

# சிங்களத் திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்தார். 1958-ல் கண்ணதாசன் தயாரித்த ‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். நாகேஷ் - மனோரமா ஜோடி மிகவும் பிரபலமடைந்தது.

# தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே, தவறே இல்லாமல் பேசி நடிக்கும் ஆற்றல் பெற்றவர். குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்கினார். 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். 1,000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.

# அதிக எண்ணிக்கையில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர். கதாநாயகி, அண்ணி, வில்லி என இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். நடிப்புலகில் 50 ஆண்டுகளைக் கடந்து பொன்விழா கொண்டாடியவர். நன்கு பாடக்கூடியவர். ‘டில்லிக்கு ராஜான்னாலும்’, ‘வா வாத்யாரே’, ‘மெட்ராச சுத்திப் பாக்க’, ‘மஞ்சக் கயிறு’ ஆகிய பாடல்கள் பிரபலமானவை.

# அறிஞர் அண்ணா, மு.கருணாநிதியுடன் மேடைகளிலும் எம்ஜிஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதாவுடன் திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த பெருமை பெற்றவர்.

# பத்மஸ்ரீ , கலைமாமணி, தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, டத்தோ சாமிவேல் சரித்திர நாயகி விருது, கலா சாகர் விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள் என ஏராளமான விருதுகளை வென்றவர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பத்திரிகையாளர் ‘சோ’இவரை ‘பெண் சிவாஜி’ என புகழ்ந்துள்ளார்.

# வறுமையில் வாடி, எந்தப் பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் மட்டுமே உலக அளவில் புகழ்பெற்ற மனோரமா கடந்த அக்டோபர் மாதம் 78-வது வயதில் மறைந்தார்.

SCROLL FOR NEXT