வலைஞர் பக்கம்

திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?

எல்.ரேணுகா தேவி

# குடும்ப அட்டையில் இருந்து ஒருவரது பெயரை நீக்குவது எப்படி?

குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் நடந்து அவர் தனிக்குடித்தனம் செல்லும் பட்சத்தில் அவரது பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கிவிட்டு, அவரது தனி குடும்பத்துக்கு புதிதாக குடும்ப அட்டை வாங்க வேண்டும். பெயரை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் 3 நாட்களுக்குள் பெயர் நீக்கல் சான்றிதழ் வழங்கப்படும். இவர்களுக்குப் புதிய குடும்ப அட்டை ஏற்கெனவே சொல்லியிருந்த நடைமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

# இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வருபவர்கள் குடும்ப அட்டை பெற முடியுமா?

தற்காலிகமாக சென்று திரும்புபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் வெளிநாட்டில் தங்கச் செல்பவர்கள் குடும்ப அட்டையை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்றிதழ் வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு, ஒப்படைப்பு சான்றிதழைக் காண்பித்து குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

# எதற்காக இந்த நடைமுறை?

ஒருவருக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வேறு எவரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதால் இந்த நடைமுறை.

# ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் இருந்தால் அதே முகவரியில் குடும்ப அட்டை பெற முடியுமா?

முடியும். ஆனால், ஒவ்வொரு குடித்தனத்துக்கும் தனித்தனியே சமையல் அறை இருக்க வேண்டும்.

# திருமணம் ஆகாதவர்கள் குடும்ப அட்டை பெற முடியுமா?

ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் தனியாக தங்கி வேலை பார்க்கும் பட்சத்தில் அவரது பெயர், சொந்த ஊரில் குடும்ப அட்டையில் இருக்கும். அவருக்குத் தனியாக குடும்ப அட்டை வழங்க இயலாது. ஆனால், ஒருவருக்கு வேறு எங்கும் குடும்ப அட்டை இல்லை என்னும் பட்சத்தில் அவர் தனியாக சமைத்து உண்கிறார் என்றால் அவருக்கு குடும்ப அட்டை வழங்க முடியும்.

# போலி குடும்ப அட்டை என்றால் என்ன?

போலி முகவரி கொடுத்துப் பெற்றாலோ, வேறு ஒருவரது குடும்ப அட்டையை தவறாகப் பயன்படுத்தினாலோ அவை போலி குடும்ப அட்டையாக கருதப்படும்.

# போலி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்றிரண்டு போலி அட்டைகள் வைத்திருப்பவர்கள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் சட்டவிரோத தொழில்முறையாக அதைப் பயன்படுத்துவது இல்லை. அதே நேரம், ஒரு குழுவாக செயல்பட்டோ அல்லது ஒருவரே 10-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வைத்திருந்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகபட்சம் குண்டர் சட்டம் வரை பாய சட்டத்தில் வழி உண்டு.(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT