டெல்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டின் தூதரகம், சென்னையில் இயங்கிவரும் ஸ்வீடனின் துணைத் தூதரகம் ஆகியன, இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கத்துடன் இணைந்து, மூன்று நாள் ஸ்வீடிஷ் திரைப்படவிழாவைச் சென்னையில் நடத்துகின்றன.
சென்னை சர்வதேசப் படவிழாவை ஆண்டுதோறும் ஒருங்கிணைத்து வரும் இண்டோ சினி அப்ரிசிரியேஷன் பவுண்டேஷன் திரைப்படச் சங்கம், இந்தியாவில் இயங்கிவரும் பல நாடுகளின் தூதரங்களுடன் இணைந்து மாதம் தோறும் ஒவ்வொரு நாட்டுக்குமான திரைப்பட விழாக்களை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில், ஏப்ரல் 21-ம் தேதியான இன்று மாலை தொடங்கி 24-ம் தேதி வரை, 4 நாள் ஸ்வீடிஷ் படவிழாவை, சென்னை, கல்லூரிச் சாலையில் உள்ள பிரெஞ்சு கலாச்சாரத் தூதரகமான அலையான்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடத்துகிறார்கள். இந்தப் படவிழாவின் தொடக்கத் திரைப்படமாக ‘சுனே Vs சுனே’ என்கிற படம் திரையிடப்படுகிறது. கடந்த 2018-ல் வெளியான இந்தப் படம் பல சர்வதேசப் படவிழாக்களில் திரையிடத் தேர்வானது.
நான்காம் வகுப்புக்கு தேர்ச்சி பெரும் சுனே என்கிற சிறுவன், விடுமுறை முடிந்ததும் உற்சாகமாக பள்ளிக்குச் செல்கிறான். புதிய வகுப்பறையில் நுழைந்ததும் அவன் உட்கார வேண்டிய இடத்தில் வேறொரு மாணவன் உட்கார்ந்திருக்கிறான். அவனுடைய பெயரும் சுனே என்பதை அறியும்போது சுனேவுக்கு அது எதிர்பாராத ஆச்சர்யமாக அமைகிறது. சுனே பள்ளியில் என்னமாதிரியான குறும்புகள் செய்ய நினைத்தானோ, அவை அத்தனையையும் இரண்டாவது சுனே செய்கிறான். இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பள்ளி நாட்களில் எப்படி எதிர்கொண்டார்கள். அவர்களின் பொருட்டு பெற்றோர் படும் பாடுகள் என்ன என்பதை சித்தரித்துள்ள இப்படத்தை ஜான் ஹோம்பெர்க் இயக்கியிருக்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு அலையான்ஸ் பிரான்சேஸ் அரங்கில் தொடக்க விழாவுக்குப் பின்னர் கண்டு களிக்கலாம்.
ஏப்ரல் 22-ம் தேதி மாலை 6 மணிக்கு, அறிவியல் புனைவு திரைப்படமான ‘அனியோரா’ திரையிடப்படுகிறது. பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்காக விஷேசமாக வடிவமைக்கப்பட்ட அனியோரா என்கிற விண்வெளிக் கப்பலில் பெரும் எண்ணிக்கையில் மனிதக் குழு ஒன்று செல்கிறது. அவர்கள் செவ்வாய் கிரகத்தை அடையும் பயணம் எப்படி அமைந்தது என்பது கதை. ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விதமாக படமாக்கப்பட்ட படம் இது. 2018-ல் வெளியான இந்தப் படத்தை பெல்லா காகர்மேன் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து இரவு 7.40 மணிக்கு ’லக்கி ஒன்’ என்கிற படம் திரையிடப்படுகிறது. 2019-ல் வெளியான இப்படம், நிழலுலக வாழ்க்கையில் உழலும் விண்செண்டின் வாழ்கையை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறது. நிழலுலகத்தை விட்டு எல்லோரையும்போல் வாழ விரும்பும் விண்செண்ட்டுக்கு அது நடக்கவில்லை. ஆனால், பதின்ம வயதில் இருக்கும் தன்னுடைய மகளைப் பார்த்துகொள்ள வேண்டிய எதிர்பாராத சூழ்நிலை உருவாகும்போது, விண்செண்ட், நிழலுலகத்தைவிட்டு முற்றாக எப்படி விலக முயற்சித்தார் என்பதை உணர்ச்சிக் குவியலாகக் கூறும் படம்.
ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘பிரிட் மேரி இஸ் ஹியர்’ என்கிற 2019-ல் வெளியான படமும் இரவு 7.40 மணிக்கு ‘கிங் ஆஃப் அட்லாண்டிஸ்’ என்கிற படமும் திரையிடப்படுகின்றன. படவிழாவின் இறுதி நாளான ஏப்ரல் 24-ஆம் தேதி, 1986-ல் வெளியான ‘த மொசார்ட் பிரதர்ஸ்’ படம் மாலை 6 மணிக்குத் திரையிடப்படுகிறது. படவிழாவை இலவசமாகக் காணவிரும்பும் உலகப் பட ஆர்வலர்கள் 9840151956 என்கிற எண்ணில் பதிவு செய்துகொண்டு அரங்கத்துக்கு வரலாம்.