‘வேட்பாலர்’ பணி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் அரண்மனையில் இப்படி ஒரு பணியிடம் இருக்கிறது. அதிகாலையில் வேட்டு போட்டு மன்னரை எழுப்புவதுதான் இவரது பிரதான பணி.
இது மட்டுமின்றி, மன்னர் சொன்ன இடத்தில் நிற்க வேண்டும். மக்களை சந்திக்கும் மன்னருடன் கூடவே போகவேண்டும். மன்னர் பேசி முடிக்கும் வரை, மக்களை நோக்கி ‘ஈ..’ என்று சிரித்தபடியே கைகூப்பிக்கொண்டு நிற்க வேண்டும். முதுகு சொறிவதற்குக்கூட கையை இறக்கக் கூடாது.
இப்படி பல நிபந்தனைகள் இருந்தாலும், வருமானம் தாராள மாக கிடைக்கும் என்பதால், பலரும் இந்த பணிக்கு போட்டி போடுவார்கள். என்ன ஒரு கொடுமை என்றால், கடந்த நான்கு நாட்களுக்குள் நாப்பத்தெட்டு வேட்பாலரை மாற்றிவிட்டார் மன்னர்.
எதற்காக இவ்ளோ மாற்றம்? மன்னரிடமே கேட்போம் வாருங்கள்.
‘‘நாப்பத்தெட்டு பேரையும் மாத்தின கதையச் சொன்னா நாக்கு தள்ளிரும். சாம்பிளுக்கு ரெண்டு மட்டும் சொல்றேன். கடைசியா இருந்த வேட்பாலர்கிட்ட அஞ்சு ரூவாய கொடுத்து ‘ஒரு ஆடி காரு வாங்கிட்டு வா’ன்னேன். நாள்பூரா சுத்திப்புட்டு, ‘இன்னிக்கு நாத்திக்கெழம கடை லீவு’ன்னான். வந்திச்சே கோபம்.. கடாசிட்டேன்.’’
‘‘அடுத்த ஆளு?’’
‘‘நான் அந்தப்புரத்துல இருக்கேனான்னு பார்த்துட்டு வா’ன்னு சொல்லி ஆட்டோவுக்கு இருபது ரூபா கொடுத்தேன்.’’
‘‘வாங்கிட்டுப் போனானா?’’
‘‘போனாத்தான் பரவால்லயே. ‘என்ன மன்னா லூசு மாதிரி பேசுறீங்க. செல்போன்ல பேசி கேளுங்க’ன்னான். அவனையும் துரத்திட்டேன்.’’
மனம் தளராத விக்கிரமாதித் தன்போல வேட்பாலரை மாற்றிக் கொண்டே இருக்கிறார் மன்னர்.