உலகப் புகழ்பெற்ற சமூகவியலாளர்
ஜெர்மனியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சமூகவியலாளரும் அரசியல் பொருளியலாளருமான மாக்ஸ் வெபர் (Max Weber) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிரஷ்யாவில் (இன்றைய ஜெர்மனி) எர்ஃபர்ட் நகரில் பிறந்தார் (1864). மாக்ஸ்மில்லியன் கார்ல் எமில் வெபர் என்பது இவரது முழுப்பெயர். தந்தை பிரபல அரசியல்வாதி. அரசியலில் முன்னேறி வந்த அவர், குடும்பத்துடன் பெர்லின் சென்று குடியேறினார். வெபர், மிகவும் புத்திசாலிக் குழந்தை. எப்போதுமே அவர் வீட்டில் இலக்கியம், அரசியல் குறித்த விவாதங்கள் நடைபெறும்.
l இந்தச் சூழலில் வளர்ந்த இவரும் பல விஷயங்களைக் குறித்து நிறைய சிந்தித்தார். ஏராளமான தொன்மையான நூல்களை வாசித்தார். 14 வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். பள்ளிப் படிப்பு இவருக்கு சலிப்பூட்டியது. ஆனாலும் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ஹெய்டில்பர்க் பல்கலைக்கழகத்தில் சட்டம், வரலாறு, தத்துவம், பொருளாதாரம் பயின்றார்.
l இடையில் படிப்பை நிறுத்தி விட்டு ஓராண்டு காலம் ராணுவத்தில் வேலை பார்த்தார். 1884-ல், பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மீண்டும் படிப்பைத் தொடர்ந்து சட்டக் கல்வியை முடித்தார். ஹெபலைடேஷன்ஷ்ரிஃப்ட் (Habilitationsschrift) என்ற ரோமானிய சட்டம் குறித்த நூலை எழுதினார். 1889-ல் வாழ்விடம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.
l பெர்லின், ஃபிரீபர்க், ஹெய்டில்பர்க், ம்யுனிச் ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்த சந்தர்ப்பங்களில் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டிருந்தார். குறிப்பாக, பொருளாதாரம், சட்டம், வரலாறு குறித்து ஆராய்ந்தார்.
l மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை நோய்களால் அவதிப்பட்டார். இதனால் பேராசிரியர் பணியை சரிவர மேற்கொள்ள முடியவில்லை. அடுத்த 5 ஆண்டுகள் மனநல மருத்துவமனைகளுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். 1903-ல் குணமடைந்த பிறகு பிரபல முன்னணி சமூக அறிவியல் இதழில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
l இந்த இதழில் ஏராளமாக சமூக அறிவியல் கட்டுரைகள் எழுதினார். பல இடங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டார். 1905-ல் இவர் எழுதிய ‘தி ப்ராடஸ்டன்ட் எதிக் அன்ட் தி ஸ்பிரிட் ஆஃப் காபிடலிசம்’ கட்டுரை மிகவும் பிரபலமடைந்தது.
l பின்னாளில் இதுவே புத்தகமாக வெளியிடப்பட்டது. இதில் மேலைநாட்டுப் பண்பாடும், கீழைநாட்டுப் பண்பாடும் வெவ்வேறு வழிகளில் வளர்ச்சி அடைந்ததற்கு மதம் ஒரு முக்கிய காரணம் என்ற தனது வாதத்தை முன்வைத்தார். 1909-ல் ஜெர்மன் சோசியலாஜிகல் அசோசியேஷன் என்ற அமைப்பை தன் சகாக்களுடன் இணைந்து தொடங்கினார்.
l முதல் உலகப் போர் சமயத்தில் சிறிது காலம் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்தார். 1918-ல் மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். எழுத்துப் பணிகளையும் தொடர்ந்தார். சமூகச் சூழலில் மதம் தொடர்பாக மூன்று நூல்களை எழுதினார்.
l இவர் எழுதிய எகானமி அன்ட் சொசைடியின் கையெழுத்துப் பிரதியை இவர் இறந்த பிறகு இவரது மனைவி செம்மைப்படுத்தி 1922-ல் வெளியிட்டார். சமூகவியல் மட்டுமல்லாமல் அரசியல், மதம், சட்டம், விவசாயம் மற்றும் பொருளாதாரம் குறித்து இவர் எழுதிய நூல்கள் அந்தத் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
l சமூகவியல் துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். பொது நிர்வாகத்துறையிலும் சமூகவியலிலும் தற்கால ஆய்வுகளைத் தொடங்கி வைத்தவர் எனப் போற்றப்படும் மாக்ஸ் வெபர், 1920-ம் ஆண்டு ஜுன் மாதம் 56-வது வயதில் காலமானார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்