அவளை நான் சந்தித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இனி எப்போதுமே அவளை சந்திக்கவே முடியாது. ஆகவே அந்த முதலும் கடைசியும் சந்திப்பு குறித்த பதிவின் மூலம் அவளை இழந்துவாடும் அனைவருக்கும் (என் மனசாட்சிக்கும் சேர்த்து) ஆழ்ந்த அனுதாபங்கள்.
அது ஒரு மதிய வேளை. சென்னை கிரீம்ஸ்வே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரை அழைத்துச் சென்றிருந்தேன். உடன் என் கணவரும் வந்திருந்தார். உறவினரை வழிஅனுப்பிவிட்டு எங்கள் ஸ்கூட்டியை (நம்பர் பிளேட்டிலும், முகப்பிலும் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்) எடுத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானோம்.
அப்போதுதான் அவளை நான் பார்த்தேன். பார்த்தவுடன் கண்களை நிச்சயம் யாராலும் எடுக்க முடியாது. அவ்வளவு நேர்த்தியான அழகு. அவள் சிரிக்கவில்லை ஆனாலும் அவள் உதட்டில் புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது. நான் அவளை பார்ப்பதை அவர் உடன் இருந்த நபர் கவனித்தார். எங்களையும் எங்கள் வண்டியையும் ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்தார். பின்னர் எங்களை நோக்கி வேகமாக வந்தார். என் கணவர் வண்டியை மிதித்துக் கொண்டிருந்தார். வண்டி அடம்பிடித்துக் கொண்டிருந்தது. அதற்குள் எங்களிடமே வந்துவிட்டார் அவர். மலையாளத்தின் இடையே தமிழில் சாரே பிரஸ்ஸா என்றார். நிமிர்ந்து பார்த்த என்னவர், 'இல்ல என் வீட்டம்மா.. இதோ இவங்கதான் பிரஸ்ல இருக்காங்க' என்றார்.
சட்டென என்னை நோக்கி திரும்பியவாறே தூரத்தில் நின்றிருந்த அவரையும் அவருடன் நின்றிருந்த இன்னொரு பெண்ணையும் கையசைத்து அழைத்தார். சிறிது நேரத்தில் எல்லோரும் எங்கள் அருகில். அப்போதும் ஸ்கூட்டி உதை வாங்கிக் கொண்டிருந்தது.
பின்னர் மெதுவாக பேச ஆரம்பித்தார். (அவர் மலையாளம் கலந்த தமிழில் பேசினார் வாசகர் வசதிக்காக முழுமையாக தமிழில் எழுதுகிறேன்) "உங்கள் வண்டியில் பிரஸ் என்ற ஸ்டிக்கரைப் பார்த்தேன். என் பெயர் பஷீர், இவர் என் மனைவி ஷைலா, இவள் எங்கள் மகள் அம்பிலி.. அம்பிலி பாத்திமா. (என் மனதுக்குள் அம்பிலியா? அம்புலியா? மாசற்ற அழகு பொருத்தமான பெயர்).
இவளுக்காகத்தான் மருத்துவமனை வந்திருந்தோம். இவளுக்கு மிகவும் அரிதான இதய பாதிப்பு. அதன் காரணமாக நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. (ASD with Pulmonary Hypertention and Eisnmenger Syndrome) டாக்டர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். குறைந்தது ரூ.40 லட்சம் செலவாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள். மீண்டும்... உங்கள் வண்டியில் பிரஸ் என்ற ஸ்டிக்கரைப் பார்த்தேன். அதான் உங்கள் மீடியா மூலம் ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்று வேகமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தார்.
ஒரு தந்தைக்கு உரித்தான பதற்றத்துடனும், பாசத்துடனும், ஏக்கத்துடனும். அத்தனை விவரிப்புக்கு இடையேயும் அம்பிலி சற்றும் அசரவில்லை. அவள் புன்னகை இம்மியளவும் குறையவில்லை. நான்தான் சற்று அதிகமாகவே பதற்றமாக இருந்தேன். ஸ்கூட்டி உதைபடுவதிலிருந்து தப்பியிருந்தது. அவருக்கும், எனக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அந்த சில விநாடிகளுக்குள் ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை என்னிடம் நீட்டினார். அதை வாங்க மறுத்துவிட்டு வேகமாக அவரது ஃபோன் நம்பரை வாங்கிக்கொண்டேன். நான் எங்கு வேலை பார்க்கிறேன் என்பதையும் சொன்னேன்.
அம்பிலியைப் பார்த்து ஒன்றும் பயப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றேன். பல்வரிசை மின்ன சிரித்தாள். தொடர்ந்து ப்ச்ச் என்ற சத்தத்துட்டன் தோள்களை லேசாக உலுக்கி (ஒன்றுமில்லை என்பதுபோல்) ஒரு சமிக்ஞை.
மீண்டும் பஷீர் சாரிடம் திரும்பி (பஷீர் சார் என்றுதான் என் மொபைலில் அவர் எண்ணை சேமித்திருந்தேன்) சார் என்னால் முடிந்ததை நிச்சயமாக செய்கிறேன் என்றேன். அந்த அம்மாவுக்கு என்ன சொல்ல முடியும் அவர் கைகளில் பற்றிக் கொண்டேன். அத்தனை சோகங்களையும் எங்கு மறைத்து வைத்திருந்தார் எனத் தெரியவில்லை. எங்கள் இருவரையும் பார்த்தார். அந்தப் பார்வை பல கோடி வார்த்தைகள் பேசின. மவுனமாக பிரிந்தோம்.
இப்போது உதைபடாமலேயா ஸ்கூட்டி சட்டென கிளம்பியது. மீண்டும்... மீண்டும் அம்பிலி சென்ற பாதையை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவள் அழகு எனக்கு அப்போது மறைந்து போயிருந்தது. கிரீம்ஸ் ரோட்டிலிருந்து மயிலாப்பூர் வரை இருவரும் எதுவுமே பேசவில்லை.
உள்ளே நுழைந்தவுடன் அம்பிலியைப் பற்றி பேச ஆரம்பித்தோம்.. ஆண்டவனை வசைபாடியபடியே... மகள் குறுக்கிட்ட என்னம்மா? யாரும்மா அம்ப்ளி என்றாள். அம்பிலி அது ஒரு அக்கா என்றேன். அவளும் அதற்கும் மேல் கேட்டுக் கொள்ளவில்லை.
மாலை பஷீர் சார் நம்பருக்கு தொடர்பு கொண்டேன். என் நம்பரை சேமித்திருந்தார் போல... ஹலோ சொல்வதற்கு முன்னரே மேடம் என்றார். சார் கிளம்பிட்டீங்களா? என்றேன். இல்லைம்மா இங்கதான் மெரினா பீச்சில் இருக்கோம். அம்பிலி பார்க்கணும்னு சொன்னாள் என்றார். சார், ஒன்னுமில்ல உங்ககிட்ட அந்த மெடிக்கல் ரெக்கார்ட்ஸ நான் வாங்காமல் வந்துட்டேன். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க அந்த டீட்டெய்ல்ஸ் என் மெயில் ஐ.டி.க்கு அனுப்புங்களேன் என்றேன். மேடம், அம்பிலியிடம் குடுக்குறேன் டீடெய்ல்ஸ் சொல்லுங்க என்றார். இதயம் முழுவதும் ரணமாக வலிக்க அவளிடம் ஹலோ சொன்னேன் அந்த மெல்லிய குரலை முதன்முறையாக கேட்டேன். மேம் என்றாள். அம்பிலி பீச்சில் இருக்கீங்களா எப்படி இருக்கு என்று விசாரித்துவிட்டு பஷீர் சாரிடம் சொன்னதையே திருப்பிச் சொன்னேன். ஆங்கிலத்தில் சரளமாக பேசினாள். என் மெயில் ஐடி கொடுத்தேன். குறித்துக் கொண்டேன் என்றாள். டேக் கேர் என்றேன். சூர் என்றாள்.
சில நிமிடங்களில் அந்த மெயில் வந்தது.
Dear Maam
This is Ambily from Kottayam.I am doing my M.com finals.I am 22 years old.
I am sending my medical details with this mail.....
இன்னும் இருக்கிறது, இங்கு இதுபோதும்.
எனக்குத் தெரிந்த உதவக்கூடிய நிலையில் இருந்த சிலருக்கு அந்த மெயிலை பார்வர்டு செய்தேன். அப்புறம் குலாம் பாய் என் நண்பருக்கும் அந்த இமெயிலை அனுப்பினேன்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பஷீர் சார் பேசினார். மருத்துவத்துக்காக அடிக்கடி சென்னை வரவேண்டியிருக்கும் கிரீம்ஸ் ரோடு சுற்றுவட்டாரத்தில் ஏதாவது வீடு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார். அம்பிலியை விசாரித்தேன். அவளிடம் பேச வேண்டும் என்றேன். அவள் தூங்குவதாக சொன்னார். சிறிது நேரம் பேசினோம். அந்த மெயிலை யாருக்கெல்லாம் அனுப்பியிருக்கிறேன் எனச் சொன்னேன். அவரும் சொன்னார் மேடம் மனோரமா ஆன்லைனிலும் செய்தி வந்திருக்கிறது என்றார்.
அவ்வப்போது குலாம் பாயை தொடர்பு கொண்டு ஜமாத் மூலம் ஏதாவது உதவி கிடைத்ததா என்பதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஓரிரு வாரங்களில் அம்பிலிக்கு சில உதவிகள் கிடைத்ததாக பஷீர் சார் சொன்னார். என் மூலம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய உதவி எதுவும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
ஆனால், அவ்வப்போது மலையாள ஊடகங்களில் அம்பிலிக்கு மஞ்சு வாரியர் உதவினார், கிரவுட் பண்டிங் மூலம் நிதி கிடைத்தது போன்ற செய்திகளை கவனித்தேன்.
ஆனால் ஏனோ பஷீர் சாரிடம் நான் பேசவில்லை. அம்பிலியிடமும்தான். என்னால் பெரிதாக உதவ முடியவில்லை என்ற ஏக்கம் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு நினைவு வரும் போதெல்லாம் அம்பிலிக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வேன்.
அம்பிலியை நான் மறக்கவில்லை ஆனால் அடிக்கடி நினைக்கவில்லை. நேற்று இரவு 10.30 மணிக்கு ஃபேஸ்புக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அம்பிலியின் புகைப்படத்தைப் பார்த்தேன். ஒரு பிரபல இணையதளம் அந்த செய்தியை ஷேர் செய்திருந்தது. அம்பிலி இறந்துவிட்டாள் என்பதுதான் அந்த செய்தி.
படுக்கையில் இருந்து படாரென எழுந்தேன். அந்த செய்தியை கிளிக் செய்து முழுவதுமாக படித்தேன். என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது. இப்போதும் இதை பதிவு செய்யும்போதும் அம்பிலிக்காக அழுகிறேன். என் கணவரை வேகமாக எழுப்பினேன். அந்த செய்தியைக் காட்டினேன். ஐயோ.... என்றார். நெருங்கிய உறவு தவறியதுபோல் இருவரும் கலங்கினோம். இரவு முழுவதும் சங்கடம். என்றுமே தீராத அந்த துயரம். பஷீர் சாருக்கு போன் செய்வோமா? இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். என்ன சொல்லித் தேற்ற முடியும்.
அம்பிலியில் ப்ச்ச் சமிக்ஞையும், மேம்... என்ற மெல்லிய குரலும் என்னை துரத்துகிறது.
காலையில் ஸ்கூட்டியில் இருந்த பிரஸ் ஸ்டிக்கரை பார்த்தபோது அம்பிலிதான் நினைவுக்கு வந்தாள்.
இனி எப்போதும் அம்பிலி என் ஸ்கூட்டியின் பிரஸ் ஸ்டிக்கரில் வாழ்வாள்.
உனக்காக நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையே....
நிம்மதியாக உறங்கு அம்பிலி.
அன்புடன்,
பாரதி ஆனந்த்.