வலைஞர் பக்கம்

மன்னா.. என்னா?

செய்திப்பிரிவு

‘பூரண மதுவிலக்கு’ என்று மன்னர் அறிவித்தாலும் அறிவித்தார்.. நாடெங்கும் ஒரே உற்சாகம், கொண்டாட்டம். ‘மதுவிலக்கு அறிவித்த மக்கள் தலைவனே..’, ‘மதுவிலக்கு அறிவித்த மகாராஜாவே’ என்று திரும்பிய பக்கமெல்லாம் பேனர், போஸ்டர். ‘மண்ணாங்கட்டியே, மயானமே’ என்றுதான் வைக்கவில்லை.

மன்னர் அறிவித்தது போதாதென்று, மன்னர் குடும்பத்தினர், மந்திரிகள், தளபதிகள்கூட இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்டை தேசத்து அரசன்கூட திடீரென ஒருநாள் படையெடுத்து வந்து, ‘நானும் மதுவிலக்கை அமல்படுத்துவேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்த பஸ்ஸிலேயே கிளம்பி போனான்.

எப்படியோ மதுவிலக்கு வந்தால் சரி என்ற உற்சாகத்தில் இருந்தார்கள் மக்கள். மதுவிலக்கு ஆதரவு சங்கம், மதுவிலக்கால் பொருளாதார ஆதாயம் பெறுவோர் சங்கம் என்பது போன்ற கட்சிகளும் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்தன. அனைத்து மதுவிலக்கு ஆதரவு ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு என்பதையும் தொடங்கிவிட்டார்கள்.

அதன் சார்பில் மன்னருக்கு பாராட்டு விழா ஏற்பாடாகி இருக்கிறது. நடுநாயகமாக அமர்ந்திருக்கும் மன்னரை பாராட்டி கூட்டுக்குழுவின் தலைவர் பேசத் தொடங்குகிறார். ‘‘மதுவிலேயே நமது வருமானம் எல்லாம் செலவானது. செலவுக்கு பணமில்லாமல் நம் குழந்தை குட்டிகள் கஷ்டப்பட்டார்கள். அந்த நிலையை மாற்றிவிட்டார் நமது மாமன்னர்.

நாங்கள்கூட மது ஒழிப்புதான் வரப்போகிறதோ என்று பயந்துவிட்டோம். நல்ல காலம்.. மதுவிலக்குதான் வரப்போகிறது. வருமான வரி விலக்கு வந்தால், வருமானவரி கட்ட வேண்டாம். சுங்கவரி விலக்கு வந்தால் சுங்கவரி கட்ட வேண்டாம். அதேபோல, மதுவிலக்கு வரப்போகிறது. மதுவுக்கு இனி பணம் கொடுக்க வேண்டாம். இலவசமாக குடித்து மகிழலாம். இதற்கு வழிசெய்த மன்னர் வாழ்க’’ என்று அவர் கூற, கூடியிருந்த குடிமக்கள் கூட்டம் ஆரவார கரகோஷம் எழுப்பியது.

‘‘ஆகா.. மதுவிலக்குன்னா என்னன்னு இவுங்களுக்கு எப்புடி புரியவைக்கப் போறேன்’’ என்று மெரசலாகி, மேடையை விட்டு எஸ்ஸாகி அரண்மனைக்கு ஓடிக்கொண்டிருந்தார் மன்னர்.

SCROLL FOR NEXT