வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 49: தனுராசனம்

எஸ்.ரவிகுமார்

வானத்தை வில்லாக வளைப்பதாக பலரும் கூற கேட்டிருக்கலாம். அது சாத்தியமோ, இல்லையோ.. நம் உடம்பை வில்லாக வளைக்கலாம் வாருங்கள்.

இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம். விரிப்பில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். கை, கால்கள் ரிலாக்ஸாகவும், சுவாசம் சீராகவும் இருக்கட்டும். இப்போது, நீச்சல் அடிப்பதுபோல கால்களை பொறுமையாக நாலைந்து முறை உதைக்கவும். முதலில், இரு கால்களையும் மாறி மாறியும், பின்னர் இரு கால்களையும் சேர்த்தும் உதைக்கவும்.

முதலில் வலது கையால் வலது கணுக்கால் பகுதியை பிடித்துக் கொள்ளவும். இடது கையை முன்னோக்கி நீட்டவும். நிதானமாக சுவாசித்தபடி 1-5 எண்ணி, ரிலாக்ஸ் செய்யவும். அடுத்து, இடது கையால் இடது கணுக்கால் பகுதியை பிடித்துக்கொண்டு, வலது கையை முன்னோக்கி நீட்டவும். நிதானமாக சுவாசித்தபடி 1-5 எண்ணவும். கை, காலை கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு, இடது கையால் இடது கணுக்காலையும், வலது கையால் வலது கணுக்காலையும் பிடிக்கவும். மார்பு, தலையை நன்கு உயர்த்தவும். கால்களையும் உயர்த்தவும். இப்போது, வயிறு பகுதி தவிர ஒட்டுமொத்த உடம்பும் ஒரு வில் போல வளைந்திருக்கும். இதுவே தனுராசனத்தின் இறுதி நிலை. சுவாசம் சீராக இருக்க 1-10 எண்ணவும். கை, கால்களை மெல்ல விடுவித்துக்கொண்டு குப்புற படுத்து ரிலாக்ஸ் செய்யவும்.

இந்த ஆசனத்தால் கை, கால்கள் உறுதியடைகின்றன. மன அழுத்தம், மன இறுக்கம், முன்கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, மனம் அமைதி பெற உதவுகிறது.

நாளை – முதுகுவலியும்.. முயலும்..

SCROLL FOR NEXT