வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 48: சலபாசனம்

எஸ்.ரவிகுமார்

ஒவ்வொரு காலாக உயர்த்தி ‘அர்த்த சலபாசனம்’ செய்தோம். ஒரே நேரத்தில், இரு கால்களையும் உயர்த்தி ‘சலபாசனம்’ எப்படி செய்வது என இப்போது பார்க்கலாம்.

இந்த ஆசனத்திலும், கை மணிக்கட்டு பகுதியை உடம்புக்கு கீழே வைத்து செய்ய வேண்டி இருப்பதால் வாட்ச், வளையல் போன்றவற்றை கழற்றிவிடுவது நல்லது. ரிலாக்ஸாக குப்புற படுத்துக் கொள்ளவும். ஒரு முறை மூச்சை நன்கு இழுத்து விடவும். அடுத்து, கை கட்டை விரல்களையும் அதன் பிறகு மற்ற விரல்களையும் மூடிக்கொள்ளவும். கைகளை மடக்கி, மணிக்கட்டு பகுதியை தொடைகளுக்கு கீழே வைத்துக் கொள்ளவும். மடக்கியுள்ள கை முட்டி பகுதி தரையிலும், மூடியுள்ள விரல்கள் பகுதி தொடை பக்கமாகவும் இருக்கட்டும். தாடை நன்கு தரையில் பதிந்திருக்கட்டும்.

மூச்சை மெதுவாக இழுத்தபடி, முட்டிகள் மடங்காமல் இரு கால்களையும் தரையில் இருந்து உயர்த்தவும். தலை முதல் இடுப்பு வரை தரையில் நன்கு பதிந்திருக்க, தொடை முதல் கால்கள் வரை உயர்த்தி வைத்திருப்பதுதான்இந்த ஆசனத்தின் இறுதி நிலை. மூச்சை இழுத்துவிடவும். உட்காரும் பகுதி மற்றும் கால் முட்டிகளை இறுக்கி, ‘டைட்’ செய்தால், முட்டி மடங்காமல் கால்களை நன்கு உயர்த்த முடியும். இதே நிலையில் 1-10 எண்ணவும். மூச்சை விட்டபடி கால்களை கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்யவும். சலபாசனம் செய்வதால் முதுகுப் பகுதி உறுதியடைகிறது. தொடை, இடுப்பு, உட்காரும் பகுதியில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைகின்றன. கழுத்து வலி குறைகிறது.

நாளை – வில்வித்தைக்கு ரெடியா?

SCROLL FOR NEXT