''கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குடும்பத்தின் நிலையையும் உணரவேண்டும்'' என்கிறது என் பெயர் நீலமேகன் எனும் 13 நிமிடக் குறும்படம்.
கல்லூரி நண்பர்கள் மத்தியில் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ளும் மாணவர்கள் ஏராளம். தினம் தினம் அவர்களது எண்ணங்களும் செயல்களும் ஸ்டைலும் ஆட்டமுமாக மாறிக்கொண்டிருப்பதை நிறையவே பார்க்கமுடிகிறது. தன் வாழ்க்கை நிலையை உணர்ந்து படிப்பே கடமையென உள்ள மாணவர்களும் இதில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை?
துறுதுறுப்பான வயசுப் பருவத்தில் ஒரு இணையும் வேண்டியிருக்கிறது... அது சரி எத்தனை நாளைக்குத்தான் தனியாகச் சுற்றுவது? கல்லூரி நண்பர்கள் மத்தியில் தன்னை ஆடம்பரமாகக் காட்டிக்கொள்ளும் நீலமேகனுக்கு வழியில் ஒரு காதலும் கிடைக்கிறது.
(இதெல்லாம் காதலா சார் என்று தயவு செய்து கேட்டுவிடாதீர்கள்) அப்புறமென்ன? மாணவனின் அதகளம் கட்டுப்பாடு இல்லாத கவுன்ட் டவுணாக ஸ்டார்ட் ஆகத் தொடங்கிவிடுகிறது..
நாலாயிரம் ரூபாய்க்கு ஷூ, விலையுயர்ந்த செல்போன்... போதாதென்று காதலியோடு டேட்டிங் செய்ய சொந்தமாக ஒரு பைக் வாங்க வேண்டுமென்ற உந்துதல் வேறு. பாடத்திட்ட புராஜெக்ட் செய்ய வேண்டுமென நாற்பதாயிரம் ரூபாய்க்கு அப்பாவிடம் பொய் வேறு. இப்படி போகும் கதையில் நிறைய திருப்பங்கள்... விருப்பங்கள்... திருந்தும் முடிவோடு புத்திசாலித்தனமான காய் நகர்த்துதல்கள்...
இக்குறும்படத்தில் அப்பாவின் நிலையைக் கண்டு மாணவன் உருகும் இடம் இருக்கிறது. அது இப்படத்தின் முக்கிய இடம்... அந்த மாணவன் பெயர் நீலமேகன்... அவனை எங்காவது இயக்குநர் சந்தித்திருக்கக் கூடும். அவனுக்குத்தான் இப்படத்தை சமர்ப்பித்துள்ளார்.
நீலமேகனாக நடித்த மரிய செல்வதாஸ் கெத்துகாட்டவிரும்பும் மாணவனாக படுபொறுத்தம். அவரது நடிப்பும் சிறப்பு. தேவப்பிரியா, பாலகிருஷ்ணன், ராம் பிரசாத் சண்முகம், சத்யா ஷா, விதேஷ் உள்ளிட்டோர் நன்றாகவே நடித்துள்ளனர்.
இக்கால இளைஞர்கள் போக்கை, முக்கியமாக தாழ்வு மனப்பான்மையை கடக்கவிரும்பும் மாணவனை மையப்படுத்திய இயக்குநரைப் பாராட்டலாம். குறும்படம் முழுவதும் கலகலப்புதானோ என்று நினைக்கும்போது மனம் புண்படாமல் சில செய்திகளையும் சொல்லிவிடுவது நல்லது என்பதுபோல முயன்றுள்ளார் இயக்குநர் சந்திரசேகன் அஸ்வின் குமார்.
உறுத்தலில்லாத இசை பால் யோகேஷ், நந்தினியின் பாடல் ஒன்று, லாவகமான எடிட்டிங் சரத், இவர்கள் மட்டுமின்றி, சிவபூரணி, திவ்யா, ரோஹித், ஷங்கர் உள்ளிட்ட கிரியோட்டிவ் குழு பின்னிருந்து படத்தை உருவாக்கியுள்ளது. ஷோபா சேகர் புரொடெக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தை நீங்களும் பார்க்கலாமே.
</p>