இடுப்புக்கு மேல் உள்ள பகுதியை உயர்த்தி புஜங்காசனம் செய்தோம். அடுத்து, அதேபோல, இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளை உயர்த்தும் அர்த்த சலபாசனம், சலபாசனத்தை அடுத்தடுத்து பார்க்கலாம். ‘சலப’ என்றால் வெட்டுக்கிளி. ஆசனத்தின் நிறைவு நிலையில், வெட்டுக்கிளி போல நம் உடல் இருப்பதால் இப்பெயர்.
முதலில், அர்த்த சலபாசனம்.
இந்த ஆசனத்தில், கை மணிக்கட்டு பகுதியை உடம்புக்கு கீழே வைத்து செய்ய வேண்டி இருப்பதால் வாட்ச், வளையல், பிரேஸ்லெட் போன்றவற்றை கழற்றிவிடுவது நல்லது. ரிலாக்ஸாக குப்புற படுத்துக் கொள்ளவும். ஒரு முறை மூச்சை நன்கு இழுத்து விடவும். அடுத்து, கை கட்டை விரல்களையும் அதன் பிறகு மற்ற விரல்களையும் மூடிக்கொள்ளவும். கைகளை மடக்கி, மணிக்கட்டு பகுதியை தொடைகளுக்கு கீழே வைத்துக் கொள்ளவும். மடக்கியுள்ள கை முட்டி பகுதி தரையிலும், மூடியுள்ள விரல்கள் பகுதி தொடை பக்கமாகவும் இருக்கட்டும். தாடை நன்கு தரையில் பதிந்திருக்கட்டும்.
இப்போது மூச்சை மெதுவாக இழுத்தபடி, கால் முட்டி மடங்காமல் இடது காலை மட்டும் உயர்த்தவும். 1-5 எண்ணவும். மூச்சை விட்டபடியே இடது காலை கீழே இறக்கவும். இதேபோல, வலது பக்கமும் செய்து ரிலாக்ஸ் செய்து கொள்ளவும்.
அர்த்த சலபாசனம் செய்வதால் முதுகுப் பகுதி உறுதி பெறுகிறது. தொடை, இடுப்பு, உட்காரும் பகுதியில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைகின்றன. கால்கள் நன்கு இழுக்கப்படுவதால், தோள் முதல் கால் வரை நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.
நாளை – முழு வெட்டுக்கிளி