‘புஜங்’ என்றால் பாம்பு. அது படமெடுப்பது போல, தலையை நன்கு உயர்த்தி செய்யும் ஆசனம் ‘புஜங்காசனம்’. அந்த ஆசனத்தின் சற்று எளிமையான வகைதான் ‘சரள புஜங்காசனம்’. சரள என்றால் ஈஸி.
குப்புற படுத்துக் கொள்ளுங்கள். நெற்றி தரையில் பதிந்திருக்கட்டும். கால்கள் சேர்ந்தும், குதிகால்கள் உயர்ந்தும், கால் விரல் நகங்கள் தரையில் படுமாறும் இருக்கட்டும். உடல் முழுவதும் ரிலாக்ஸாக இருக்கட்டும். இந்த நிலையில் முதலில் நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்.
பின்னர், மெல்ல இரு கைகளையும் மடக்கி, கை முட்டிகளை தரையில் ஊன்றியபடியும், முன்னங்கைகள் முன்பக்கமாக நீட்டியபடியும் வைத்துக் கொள்ளவும். கூடவே, தலையை மெல்ல உயர்த்தவும். வயிற்றுக்கு கீழ் உள்ள பகுதிகள் நன்கு தரையில் பதிந்திருக்கட்டும். மெதுவாக மூச்சை இழுத்து, விடுங்கள். 1-10 எண்ணவும். கைகள், தலையை கீழே இறக்கி குப்புற படுத்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
சரள புஜங்காசனம் செய்வதால், சுவாசம் சீராகி, உடம்பு ரிலாக்ஸாகிறது. கைகள், தோள் பகுதிகள் உறுதியாகின்றன. போதிய அசைவு கிடைக்காமல், சிலரது முதுகுப் பகுதிகளில் ஒருவித இறுக்கம் காணப்படும். அத்தகைய இறுக்கத்தை இந்த ஆசனம் சரிசெய்கிறது. அடுத்து நாம் செய்ய உள்ள புஜங்காசனத்தை எளிதாக செய்வதற்கு இந்த ஆசனம் உதவுகிறது.
நாளை – முழு படம் எடுக்கலாமா?