வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 43: கோமுகாசனம்

எஸ்.ரவிகுமார்

அதிக ரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கத்தை குறைக்கக்கூடியது கோமுகாசனம். இது தொடை, இடுப்பு, முதுகு, தோள், கைகள் உட்பட உடலின் பல பகுதிகளையும் உறுதியாக்கும். நீண்ட நேர வாகனப் பயணம் அல்லது இடத்தைவிட்டு நகர முடியாத அலுவலகப் பணி காரணமாக ஏற்படும் தோள்பட்டை, கழுத்து வலியை குணமாக்கும்.

இந்த ஆசனம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

சாதாரணமாக உட்காரவும். வலது காலை மடித்து வைக்கவும். இடது காலை மடித்து அதன்மீது வைக்கவும். இப்போது வலது கால் முட்டியும், அதன் மீதுள்ள இடது கால் முட்டியும் ஒன்றன் மீது ஒன்று நன்கு பொருந்தி, முக்கோண வடிவில் இருக்கட்டும். (இரு கால்களின் முட்டியும் முக்கோண வடிவில் மாட்டின் முகம் போல இருப்பதால் ‘கோ’, ‘முக’ ஆசனம் என்ற பெயர்.)

வலது கையை மெல்ல உயர்த்துங்கள். குழந்தைகள் வந்தால், மிட்டாயை மறைத்துக் கொள்வதுபோல, இடது கையை பின்பக்கமாக கொண்டு செல்லுங்கள். இரு கைகளின் முட்டிகளை மடக்கி, இரு கை விரல்களையும் இணைக்க முயற்சியுங்கள். இணைக்க முடிந்தால், விரல்களை கோத்து, நன்கு இழுக்க முயற்சியுங்கள். வலது கை, காதை ஒட்டி இருக்கட்டும். பார்வை நேராக, சுவாசம் சீராக இருக்கட்டும். 1-10 எண்ணி ரிலாக்ஸ் செய்யுங்கள். கை, கால்களை மாற்றிக்கொண்டு அடுத்த பக்கமும் இதேபோல செய்யுங்கள்.

நாளை – சோர்வை போக்கஎன்ன வழி?

SCROLL FOR NEXT