வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 41: பரிவிருத்த பச்சிமோத்தாசனம்

எஸ்.ரவிகுமார்

கால்களை நீட்டி அமர்ந்து, முன்னால் குனிந்து கைகளால் கால்களை தொடும் பச்சிமோத்தாசனம் பார்த்தோம். உடம்பை கொஞ்சம் ட்விஸ்ட் செய்து, இதேபோல செய்வதுதான் பரிவிருத்த பச்சிமோத்தாசனம்.

கால் நீட்டி உட்காருங்கள். நன்கு ஒரு முறை மூச்சை இழுத்து விடவும். வலது கையால் இடது கால் கட்டை விரலை பிடிக்கவும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்தவும். கை, காதை ஒட்டி இருக்கட்டும். மெல்ல இடது பக்கம் திரும்பியவாறு முன்னோக்கி குனியவும். உயர்த்திய இடது கையாலும் இடது கால் கட்டை விரலை பிடிக்க முயற்சிக்கவும். இதே நிலையில் 1-10 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே கைகளை விடுவித்துக் கொண்டு சமநிலைக்கு வரவும்.

அடுத்து, அதேபோல இடது கையால் வலது கால் கட்டை விரலை பிடிக்கவும். வலது கையை உயர்த்தி, வலது பக்கம் திரும்பி, முன்னோக்கி குனியவும். வலது கையாலும் வலது கால் கட்டை விரலை பிடிக்க முயற்சிக்கவும். 1-10 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே சமநிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தின் மூலம் வயிற்று பகுதியில் இருக்கும் அனைத்து உள் உறுப்புகளின் இயக்கமும் சீரடைகின்றன. செரிமானம் சீராகிறது. முதுகுத் தண்டு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், முதுகுவலி குறைகிறது. இடுப்பு பகுதி இழுக்கப்பட்டு, ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், இனப்பெருக்க சுரப்பிகளின் இயக்கம் சீரடைந்து, எதிர்ப்பு சக்தி, உயிர்ச் சக்தி அதிகரிக்கிறது.

நாளை – நீரிழிவை விரட்டுவோம்!

SCROLL FOR NEXT