கால்களை நேராக நீட்டி, நிமிர்ந்து உட்காரவும். கைகளை பக்கவாட்டில் தோள்பட்டை வரை உயர்த்தவும். உள்ளங்கைகளை மேல் நோக்கி திருப்பி, கைகளை மேலே உயர்த்தவும். உள்ளங்கைகள் முன்னோக்கி இருக்கட்டும். இடுப்பில் இருந்து எல்லா ஜாயின்ட்களையும் மேல் நோக்கி உயர்த்துங்கள். நன்கு ஒரு முறை மூச்சை இழுக்கவும். பின்னர், மூச்சை வெளியே விட்டபடியே, இடுப்பில் தொடங்கி முன்னோக்கி குனியுங்கள். கால்களையும் தாண்டி கைகளை வெளியே நீட்டுவதற்கான முயற்சி இருக்கட்டும்.
அடுத்து, இரு கை ஆள்காட்டி விரல்களால், இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல மாட்டி பிடித்துக் கொள்ளவும். அவ்வாறு பிடித்த பிறகு, கை முட்டிகளை சற்று மடக்கி, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில், மூச்சை நன்கு இழுத்து விடவும். 1-10 எண்ணிவிட்டு, மூச்சை இழுத்தபடியே நிமிர்ந்து, கைகளை தளர்த்தி ரிலாக்ஸ் செய்யவும்.
தொடக்கத்தில், கைகளால் கால்களை பிடிப்பது கடினம். அதனால், கால் முட்டிகளுக்கு கீழே எங்கே பிடிக்க முடிகிறதோ, அங்கு பிடித்துக் கொள்ளவும்.
இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகள் முழுமையாக நீட்டப்படுவதால், உடலில் தேவையற்ற இறுக்கங்கள் நீங்கி, நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். படபடப்பு, டென்ஷன் நீங்கி மன அமைதி உண்டாகும். குடல் புண், ஆஸ்துமா, அதிக முதுகு வலி உள்ளவர்கள் தவிர்க்கவும். வயிறு பெரிதாக இருப்பவர்கள் குறைவான நேரம் இருக்கலாம்.
நாளை – ‘உன் பேர் சொல்ல ஆசைதான்’