வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 39 - ‘ஜானு’ ஆசனங்கள்

எஸ்.ரவிகுமார்

ஜானு சிரசாசனம், பரிவிருத்த ஜானு சிரசாசனம் ஆகியவை எப்படி செய்வது என அறிந்தோம். அவற்றின் பயன்கள், யார் தவிர்க்க வேண்டும் என பார்க்கலாம்.

ஜானு சிரசாசனம் செய்யும்போது, நெற்றியால் கால் முட்டியை தொடுவதுதான் ஆசனத்தின் இறுதி நிலை. நெற்றி தொடவில்லை என்பதற்காக, முட்டியை மடக்கக் கூடாது. முட்டியை நேராக வைத்து இயன்ற வரை முயற்சியுங்கள். மூச்சை இழுத்து ஒவ்வொரு முறை வெளியே விடும்போதும், மெல்ல மெல்ல நெற்றியை கால் முட்டியை நோக்கி கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். நாளடைவில் நிறைவு நிலையை எட்ட முடியும்.

ஜானு சிரசாசனம் செய்வதால் சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரலின் இயக்கம் சீரடைகிறது. செரிமானம் நன்கு நடைபெறுகிறது. இந்த ஆசனத்தில் அதிக நேரம் இருப்பதால், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் சரியாகிறது. அதிகப்படியான முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

தொடர்ந்து, இடுப்பை திருப்பி செய்கிற பரிவிருத்த ஜானு சிரசாசனத்தை அறிந்துகொண்டோம். முந்தைய ஆசனத்துக்கான அனைத்து பலன்களும் இதற்கும் உண்டு. தவிர, இது முதுகுத்தண்டு பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. முதுகு வலி குறைகிறது. பரிவிருத்த ஜானு சிரசாசனம் உடலை வலுவாக்கி, மிகுந்த சக்தியை தருகிறது. அதிகப்படியான முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள், குடல் பிரச்சினை, ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

நாளை – ‘கொக்கி’ குமாரு/ரி ஆகணுமா?

SCROLL FOR NEXT