வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 36: ஜானு சிரசாசனம்

எஸ்.ரவிகுமார்

‘ஜானு’ என்றதும் ‘96’ திரைப்படம் ஞாபகம் வந்திருக்குமே.. அந்த கதையில் எப்படியோ இருக்கட்டும்; இங்கு நம் கதையில், ‘ஜானு’வையும் ‘சிரசை’யும் சேர்த்தே ஆகவேண்டும். அதுதான் ஜானு சிரசாசனம். ‘ஜானு’ என்றால் கால் முட்டி, ‘சிரசு’ என்றால் தலை.

இப்போது இந்த ஆசனம் எப்படி செய்வது என பார்க்கலாம். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். கால்கள் நீட்டி இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும்.

மெல்ல, வலது காலை மடித்து உடம்பை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். வலது பாதம் இடது தொடையை ஒட்டி இருக்கட்டும். இப்போது, வலது கால் மடித்தும், இடது கால் நீட்டியும் இருக்கும். இடது கால் விரல்கள் மேல் நோக்கி இருக்கட்டும்.

மூச்சை இழுத்தபடியே கைகளை மெல்ல தலைக்கு மேலே உயர்த்துங்கள். கை கட்டை விரல்களை கோத்துக் கொள்ளுங்கள். நன்கு மூச்சை இழுங்கள். மூச்சை விட்டபடியே, மெல்ல குனியுங்கள். முதுகை கூன்போடாமல், இடுப்பில் இருந்து குனிய வேண்டியது அவசியம். இரு கைகளாலும் இடது கால் விரல்களை பிடித்துக் கொள்ளுங்கள். அல்லது, கால் முட்டிக்கு கீழே எந்த இடத்தை பிடிக்க முடிகிறதோ, அந்த இடத்தை பிடித்துக் கொள்ளுங்கள்.

மூச்சை நன்கு இழுத்துவிட்டபடியே 1-10 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே, மெல்ல நிமிர்ந்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இதுபோல இடது காலை மடித்து, வலது காலை நீட்டிவைத்து செய்யவும்.

நாளை – ‘ஜானு’ க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்!

SCROLL FOR NEXT