ஒரு கிரேன் வைத்து நம்மை தூக்குவது போல நினைத்துக் கொண்டு, கால் முட்டிகள், இடுப்பு உட்பட எல்லா ஜாயின்ட்களையும் மேல்நோக்கி இழுத்து செய்கிற தாடாசனத்தை தொடக்கத்தில் பார்த்தோமே, இதுவும் அதே வகையறாதான். ‘காற்றில் ஆடும் பனைமரம்’ போல இருப்பதால் ‘திர்யக’ என்ற சொல் சேர்ந்திருக்கிறது.
நேராக நிமிர்ந்து நின்று, தோள்பட்டையைவிட அகலமாக, அதாவது சுமார் 2 அடி இடைவெளியில் கால்களை அகட்டி வைத்துக் கொள்ளவும். கண்ணுக்கு நேராக உள்ள அசையாத பொருள் நோக்கி பார்வை இருக்கட்டும். கைகளை மேல்நோக்கி உயர்த்தி, விரல்களை கோத்துக்கொண்டு, உள்ளங்கையை வானத்தை நோக்கி திருப்பவும். கைகள் காதை ஒட்டி இருக்கட்டும்.
ஒரு முறை மூச்சை நன்கு இழுக்கவும். மூச்சை வெளியே விட்டபடியே இடுப்பில் இருந்து இடதுபக்கமாக சாயவும். முன்னால் குனிவதோ, பின்னால் சாய்வதோ, இடுப்பை திருப்புவதோ கூடாது. பக்கவாட்டில் சாய்வது அவசியம். மூச்சை இழுத்தபடியே சமநிலைக்கு வாருங்கள். அடுத்து, மூச்சை விட்டபடியே வலதுபக்கமாக சாயவும். மூச்சை இழுத்துக்கொண்டே சமநிலைக்கு வரவும். இவ்வாறு இடதும், வலதும் மாறி 5 முறை செய்யவும். நிறைவாக, இடது பக்கமாக சாய்ந்து 1-5 எண்ணவும். அதேபோல, வலது பக்கமாக சாய்ந்து 1-5 எண்ணவும். கைகளை விடுவித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவும்.
இடுப்பின் பக்கவாட்டு பகுதிகள் நன்கு இழுக்கப்படுவதால், அப்பகுதியில் இறுக்கம் நீங்குகிறது. கூடுதல் சதைகள் குறைகின்றன.
நாளை – பூச்சிக் கடி அல்ல.. இது புது கடி