வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 24: வஜ்ராசனம்

எஸ்.ரவிகுமார்

பொதுவாக, சாப்பிட்டதும் யோகாசனங்கள் செய்யக் கூடாது. ஆனால், வஜ்ராசனம் விதிவிலக்கு.

நண்பர்கள் ட்ரீட், பண்டிகை, விசேஷ நாட்களில் கொஞ்சம் ஓவராக சாப்பிட்டுவிட்டீர்கள். என்ன செய்யலாம்? 5 – 15 நிமிடங்களுக்கு வஜ்ராசனத்தில் அமர்ந்து பாருங்கள். அடுத்த பந்திக்கு ஆயத்தமாகிவிடுவீர்கள்.

இப்போது, ஆசனம் செய்ய தயாராகலாம். விரிப்பின் மீது நிமிர்ந்து உட்காரவும். வலது காலை நன்கு மடித்து, அதன் மீது தொடை பதியுமாறு உட்காரவும் அடுத்து, அதேபோல இடது காலையும் நன்கு மடித்து அதன் மேல் உட்கார்ந்து கொள்ளவும். கால் கட்டை விரல்கள் சேர்ந்து இருக்கட்டும். குதிகால் பகுதியை விலக்கி வைத்துக் கொள்ளவும். விரல் – குதிகாலுக்கு இடைப்பட்ட பாதம் பகுதியில் நன்கு பதியுமாறு உட்காரவும்.

கைகளை கால் முட்டி மீது வைக்கவும். உடல், கை, கால்கள் ரிலாக்ஸாக இருக்கட்டும். ஆழ்ந்து மூச்சை இழுத்து, நிதானமாக வெளியே விடுங்கள். கண்களைமூடிக் கொள்ளுங்கள். மூக்கு வழியே சுவாசம் உள்ளே சென்று வருவதை கவனியுங்கள். பின்னர், இடது காலையும், வலது காலையும் படிப்படியாக விடுவித்து ரிலாக்ஸ் செய்யவும்.

இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூலம், குடலிறக்கம், குடல்புண், மாதவிடாய் கோளாறுகள் சரியாகின்றன.

அதிகப்படியான கால், கணுக்கால், மூட்டு வலி, இடுப்பு வலி உள்ளவர்கள், தசைநார் (லிகமென்ட்) பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

நாளை – மடித்தல் பாதி.. நீட்டல் பாதி..

SCROLL FOR NEXT