பத்மாசனம் செய்யும் முறையை பார்த்தோம். பத்மாசனம் செய்வதால் செரிமானம் சீராகிறது. இடுப்பு மற்றும் கால் பகுதிகள் நன்கு இழுக்கப்படுவதால், சதை இறுக்கங்கள் நீங்குகின்றன. முதுகுத்தண்டு, வயிறு உள் உறுப்புகள் வலிமை பெறுகின்றன. வயிறு, முதுகு பகுதிகளில் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. மாதவிடாய் கோளாறுகள் சரியாகின்றன. மன அமைதி கிடைக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தவும், சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், தியானம் செய்யவும் ஏற்ற ஆசனம் இது.
அதிகப்படியான இடுப்பு, முட்டி, கணுக்கால் வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம். அவ்வளவாக தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாதவர்கள், இந்த ஆசனத்தில் அமர்வது சிரமம். எனவே, அவர்களும் தவிர்ப்பது நல்லது. அல்லது, ஒருசில விநாடிகளுக்கு மட்டும் இருக்கலாம்.
இது மன அமைதிக்கான ஆசனம். அதனால், சிரமமின்றி அமர வேண்டியது அவசியம். கால்கள் நன்கு இழுக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, வலியோடு செய்யக் கூடாது. சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு கால்களோடு மல்லுக்கட்டக் கூடாது.
தொடக்கத்தில், ஒரே ஒரு காலை மட்டும் மடக்கி தொடை மீது வைத்துக் கொள்ளுங்கள். 1-10 எண்ணுங்கள். பிறகு, காலை மாற்றிக் கொண்டு 1-10 எண்ணுங்கள். இது அர்த்த பத்மாசனம். இப்படி எளிதாக பயிற்சியை தொடங்கி, கால்களை பழக்கிய பிறகு, இரு கால்களையும் மடக்கி வைத்து பத்மாசனம் செய்வது சிறப்பு.
நாளை – சாப்பிட்ட பிறகு யோகா செய்யலாமா?