வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 18: பார்ஸ்வ கோணாசனம்

செய்திப்பிரிவு

கால்களை முக்கோண வடிவில் வைத்து செய்கிற ஆசனங்கள் பல உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அதில் அடுத்தது, பார்ஸ்வ கோணாசனம்.

கால்களை நன்கு அகலமாக வைத்துக் கொள்ளவும். வலது காலை பக்கவாட்டில் திருப்பி வைக்கவும். இடது கால் அந்த நிலையிலேயே இருக்கட்டும். மெதுவாக, கால் விரல்களும், முட்டியும் நேராக வரும் அளவுக்கு வலது கால் முட்டியை நன்கு மடிக்கவும். இடது கால் முட்டி நேராக இருக்கட்டும்.

ஒரு முறை மூச்சை நன்கு இழுக்கவும். இப்போது, மூச்சை விட்டபடி, வலது பக்கமாக சாய்ந்து வலது கை முட்டியை, வலது கால் முட்டி மீது வைக்கவும். முக்கியமாக, கை முட்டியை கால் மீது லேசாக ஊன்ற வேண்டும். அழுத்தி ஊன்றினால், கை, கால் முட்டிகளில் வலி ஏற்படக்கூடும்.

மெல்ல, இடது கையை மேலே உயர்த்தி, இடது காது வரை கொண்டுவரவும். கை, தலையை சேர்த்து வலது பக்கமாக நன்கு சாயவும். கை முட்டி இப்போது மடங்காத நிலையில், காதை ஒட்டியவாறு, தரைக்கு இணையாக இருக்கிறதா, நீங்கள் செய்வது சரிதான். 1-10 எண்ணவும்.

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இதேபோல இடது பக்கம் செய்யவும்.

கால்கள் நன்கு நீட்டப்படுவதால், முட்டிகள், கணுக்கால், தொடை, முதுகுத்தண்டு பலம் பெறுகின்றன. செரிமானம் சீராகிறது. மைக்ரைன், தலைவலி, ரத்த அழுத்த மாறுபாடு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

நாளை – கோணத்தில் ஒரு ‘ட்விஸ்ட்’

SCROLL FOR NEXT