பிரபல தொழிலதிபர், சமூக சேவகர்
பிரபல தொழிலதிபர், சமூக சேவகரான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் (N.Mahalingam) பிறந்த தினம் இன்று (மார்ச் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாதாரண விவசாய குடும்பத்தில் (1923) பிறந்தார். மாட்டு வண்டியில் தொழில் தொடங்கிய இவரது தந்தை, ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளராக உயர்ந்தார். இது பின்னர் சக்தி குழும நிறுவனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
# பொள்ளாச்சியில் பள்ளிக் கல்வியை முடித்த மகாலிங்கம், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பிய லில் பட்டம் பெற்றார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் பயின்றார். தந்தை வழியில் தொழிலில் ஈடுபட்டவர், பல்வேறு தொழில், வணிக திட்டங்களைத் தொடங்கினார். சக்தி குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார்.
# சர்க்கரை ஆலை, மென்பானங்கள், சோயா ஆலை, ஆட்டோமொபைல்ஸ், நிதி, ஏபிடி டிரான்ஸ்போர்ட், பார்சல் சர்வீஸ் என தொழில் சாம்ராஜ்யத்தை தனது உழைப்பால் விரிவுபடுத்தினார். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதோடு, தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
# ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என விரும்பினார். மாணவர்களுக்கு கல்வியோடு, தொழில் பயிற்சியும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
# காங்கிரஸ் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர். சி.சுப்ரமணியம் இவரது அரசியல் வழிகாட்டி. 1952, 1957, 1962-ல் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தினார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் செயல்படுத்தப்படுவதில் முக்கியப் பங்காற்றினார்.
# 1969 முதல் அரசியலில் இருந்து விலகி, சமூகப் பணிகளில் கவனம் செலுத்தினார். தொழிற்கல்விப் பாடத்திட்டத்துடன் கூடிய மேல்நிலைப் பள்ளியை நிறுவினார். கோவையில் குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி, பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி, என்ஜிஎம் கலை, அறிவியல் கல்லூரி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் உட்பட பல கல்வி நிறுவனங்களை தொடங்கினார்.
# ஆன்மிக ஈடுபாடு மிக்கவர். வள்ளலார் மீதான பக்தியால், சமரச சுத்த சன்மார்க்க அமைப்புக்கு பல வகைகளிலும் உதவினார். சச்சி தானந்த சுவாமிகளிடமும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆழியாறு பகுதி யில் அறிவுத் திருக்கோவிலை உருவாக்க வேதாத்ரி மகரிஷிக்கு நிலத்தை வழங்கினார். ‘ஓம்சக்தி’ என்ற ஆன்மிக இதழை நடத்தி வந்தார்.
# சித்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பல வகையில் ஆதரவு அளித்தார். தமிழில் சங்ககால, பக்தி இலக்கியங்களை வெளியிட பல பதிப்பகங்களுக்கு நன்கொடை வழங்கினார். நல்ல எழுத்தாளருமான இவர் தமிழ், ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.
# இவரது சமூக சேவையைப் பாராட்டி அண்ணா, பாரதியார், காஞ்சி சங்கராச்சாரியார் பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின. பத்மபூஷண், இந்திரா காந்தி ஒருமைப்பாட்டு விருது, மொரீஷியஸ் அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
# அரசியல், ஆன்மிகம், சமூகம், தொழில் உட்பட பல்வேறு துறைகளில் இவரது சாதனைகள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ‘அருட்செல்வர்’ என அழைக்கப்பட்ட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் 2014-ல் காந்தி ஜெயந்தியன்று ஆன்மிக நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 91.