குறள் கதை 85: மனை
ஆசியாவிலேயே பெரிய சினிமா ஸ்டுடியோ வாகினி. 14 படப்பிடிப்புத் தளங்களில் ஒரே சமயத்தில் சாதாரணமாக 10 படங்களின் ஷூட்டிங் நடக்கும்.
நாகிரெட்டியார்தான் ஸ்டுடியோ அதிபர். திலீப்குமார், தேவ் ஆனந்த், அசோக்குமார் என்று அந்நாளைய ஹிந்தி ஹீரோக்கள் -நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ் - என தெலுங்கு ஹீரோக்கள் -எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி என தமிழ் ஹீரோக்கள் -பானுமதி, பத்மினி, சாவித்திரி, அஞ்சலிதேவி என அந்நாளைய ஹீரோயின்கள் என எப்போதும் திருவிழா கூட்டம்தான்.
1975-க்குப் பிறகு வெளிப்புறத்தில் படப்பிடிப்புகள் கொஞ்சம், கொஞ்சமாக நடக்க ஆரம்பித்தது. ‘அன்னக்கிளி’, ‘பதினாறு வயதினிலே’ போன்ற படங்கள் முழுக்க, முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் உருவானவையே. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரெட்டியாரின் ஸ்டுடியோ தளங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவற்றில் சில தளங்களை மாற்றி விஜயா மருத்துவமனையாக்கினார். பின்னர் விஜயா ஹெல்த் சென்டர் என்று விரிவுபடுத்தினார்.
கடைசித்தளங்கள் ஐ.டி. கம்பெனிகளுக்கு விற்கப்பட்டன. விஜயசேஷ மகால், விஜயராணி மகால் -திருமண மண்டபங்களையும் ஐ.டி.கம்பெனிகள் விழுங்கிக் கொண்டன. ஆரம்பக் காலத்தில் ரெட்டியாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபோது நாகி ரெட்டியார் துணைவியார் தன் நகைகள் அத்தனையையும் கழட்டிக் கொடுத்து கடனை அடைக்கச் சொன்னவர். அவர் நினைவாக விஜயசேஷமகால் மண்டபத்தைக் கட்டியிருந்தார்.
கட்டடங்கள் வரிசையாக இடிக்கப்பட்டு சாஃப்ட்வேர் நிறுவனங்களாக மாறிக் கொண்டிருந்தன. ரெட்டியார் வயது 91-ஐக் கடந்து விட்டவர். நிறுவனத்திடம் எல்லா தளங்களையும் இடித்துக் கட்டிக் கொள்ளுங்கள். என் மனைவியின் நினைவாக உருவாக்கிய சேஷ மகாலை மட்டும் கடைசியாகத் தகர்த்து புதுக் கட்டடம் எழுப்புங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.
புல்டோசர் விஜயசேஷமகாலுக்கு வந்து கட்டடத்தை முட்டியது. அன்றிரவே ரெட்டியார் உயிர் பிரிந்துவிட்டது.
மனைவிக்கும் அவருக்குமான உறவு உயிர். உடலைப் போன்றதல்லவா? இதைத்தான் வள்ளுவர்:
‘உடம்பொடு உயிரிடை என்ன- மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு’ என்கிறார்.
................
குறள் 86: கள் நஞ்சு
சென்னை ஹார்பர் ஏரியா, விளம்பரப் பலகைகள் வரையும் தொழில் செய்யும் இளைஞன். படிப்பறிவு பெரிதாக இல்லை. அப்பா இருந்தவரை கட்டுப்பாடாக இருந்தான். அவர் இறந்தபின் கேட்பதற்கு ஆளில்லை. தெருவுக்கு இரண்டு ‘டாஸ்மாக்’ கடைகள். போவோர் வருவோரைக் கண்சிமிட்டி வா வா என்று அழைக்கின்றன.
விட்டில் பூச்சி விளக்கொளியில் மாட்டி இறந்து விடுவது போல, ஒரு தடவை டாஸ்மாக் உள்ளே சென்று ருசி பழகிவிட்டால் அந்தச் சனியன் பிறகு யாரையும் விடவே விடாது.
சோறு இருக்கிறதோ இல்லையோ, 400 மில்லி கிடைத்தால் அடித்துவிட்டு மட்டையாகி விடுவான் இளைஞன். கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடுவான் என்று குடிசைப் பகுதியிலேயே பெண் பார்த்து தேதி நிச்சயம் செய்தனர். முகூர்த்த நாள் அதிகாலையிலேயே அளவுக்கு அதிகமாகக் குடித்து அவனால் எழுந்து நிற்கவும் முடியவில்லை. நடக்கவும் முடியவில்லை. கைத்தாங்கலாகப் பிடித்து வந்து மணவறையில் அமர்த்தினார்கள். மணப்பெண் தோளில் சாய்ந்தானே தவிர, தாலியைக் கையில் வாங்கி பெண்ணின் கழுத்தில் கட்டும் நிதானம் இல்லை.
மாப்பிள்ளைத் தோழன்தான் இவன் சார்பில் 3 முடிச்சு போட்டான். அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். இதுதான் சாக்கு என்று அம்மா செத்துப் போயிட்டா; அடக்கம் பண்ண காசு வேணும் என்று முதலைக்கண்ணீர் வடித்து கடைவீதியில் காசு வசூலித்து ஒரு வாரம் ரோட்டோர பார்க் ஒன்றில் குடித்துக் கிடந்தான்.
நிதானம் வந்து வீடு சென்றபோது அம்மா குத்துக்கல் மாதிரி குடிசைக்குள் உட்கார்ந்திருந்தாள். பொய் சொல்லி காசு வசூலித்து குடிக்கச் செலவழித்த விஷயம் அறிந்த அந்த குடிசைவாழ் மக்கள் அவனைத் துடைப்பத்தாலும், முறத்தாலும் அடித்து விரட்டி விட்டனர்.
இந்தக் கோரக்காட்சியை கண்ணால் பார்த்த அதிர்ச்சியில் தாயார் உண்மையிலேயே இறந்துவிட்டார். தூங்குபவனுக்கும், இறந்து கிடப்பவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தினம் கள் குடிப்பவன் சாவை நோக்கி நஞ்சு உண்பவனே என்கிறார் வள்ளுவர்.
‘துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்- எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்’
---
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in