வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 12: சேது பந்தாசனம்

எஸ்.ரவிகுமார்

மகனுக்கு செல்போன் - மகளுக்கு டூவீலர். ஆபீஸ் டூர் – குடும்பத்துடன் சுற்றுலா. பங்காளி சைடுக்கு கைமாத்து - மச்சான் சைடுக்கு கடன்.. இப்படி பார்த்துப் பார்த்து பேலன்ஸ் செய்வதுபோல, உடம்பையும் பேலன்ஸ் செய்வது அவசியம் அல்லவா.

முதுகை வளைத்து பவன முக்தாசனம் செய்தோம். அந்த கணக்கை சரிக்கட்டுவதற்கு முதுகை உல்ட்டாவாக வளைத்து ஒரு ஆசனம் செய்யப் போகிறோம். அது சேது பந்தாசனம்.

கால் நீட்டி மேல்நோக்கி படுத்துக் கொள்ளுங்கள். கைகள், உடம்பை ஒட்டி இருக்கட்டும். கால்களை மடித்து வையுங்கள். பாதங்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளால் தொடும் அளவுக்கு குதிகாலை, உடம்பை ஒட்டி நெருக்கமாக வையுங்கள். தலை, கழுத்து, தோள்பட்டை தரையில் பதிந்திருக்கட்டும்.

சுவாசத்தை இழுத்தபடி, இடுப்பை நன்கு தூக்குங்கள். மார்பு பகுதி, கழுத்தை ஒட்டி இருக்கட்டும். சுவாசத்தை விட்டபடி இடுப்பை கீழே இறக்குங்கள்.

இதுபோல 3 முறை செய்யுங்கள். கடைசி முறை செய்யும்போது, இடுப்பை நன்கு உயர்த்தி 1-15 எண்ணுங்கள். சுவாசம் சீராக இருக்கட்டும். சுவாசத்தை விட்டபடி, இடுப்பை கீழே இறக்குங்கள். காலை நீட்டி ரிலாக்ஸ் செய்யுங்கள்.

இடுப்பு, முதுகு உறுதியும், நெகிழ்வும் அடைகின்றன. செரிமானம் நன்கு நடைபெறுகிறது. வயிறு, இடுப்பு சதைகள் குறைகின்றன. முதுகு வலி தவிர்க்கப்படுகிறது. கழுத்து வலி, ஸ்பாண்டிலிடிஸ், கால் மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்கலாம்.

நாளை – சும்மா உட்கார்வது எப்படி?

SCROLL FOR NEXT