கால்கள் இடையே சற்று இடைவெளி விட்டு, நேராக நிமிர்ந்து நிற்கவும். கைகள், உடம்பை ஒட்டி இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும். மூச்சை இழுத்தபடியே கைகளை மேலே உயர்த்தவும். உள்ளங்கைகள் முன்பக்கம் பார்த்தபடி இருக்கட்டும். கைகள் காதை ஒட்டியபடி இருக்கட்டும்.
ஒரு முறை நன்கு மூச்சை இழுக்கவும், மூச்சை விட்டபடியே முன்னோக்கி குனியவும். முதுகை கூன்போடாமல், இடுப்பில் இருந்து குனிவது அவசியம். தொடர்ந்து, கைகள் காதை ஒட்டியே இருக்கட்டும். இன்னும் நன்றாக குனிந்து, கால் விரல்களை தொடுவதற்கு முயற்சிக்கவும்.
கீழே குனிந்த நிலையில், சுவாசம் சீராக இருக்கட்டும். காலை தொட வேண்டும் என்பதற்காக, முட்டிகளை மடக்கக் கூடாது. முட்டிகள் நேராக இருத்தல் அவசியம். ஒவ்வொரு முறை மூச்சை வெளியே விடும்போது, இன்னும் நன்கு குனிய முயற்சிக்க வேண்டும். இந்த நிலையில், 1-10 எண்ணுங்கள். மூச்சை இழுத்தபடியே, நேராக நிமிர்ந்து நில்லுங்கள். ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்.
‘‘கையால் காலை தொடுவதாவது.. இரண்டும் நெருங்கவே இல்லை’’ என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. எளிதுபோல தெரிந்தாலும், இது சற்று கடினமான ஆசனமே. அதேபோல, பலனும் அதிகம்.
வயிற்றுப் பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைப்பதால், செரிமானம் நன்கு நடக்கும். கல்லீரல், மண்ணீரல் இயக்கம் சீராகும். வயிறு உப்புசம், வாயு கோளாறுகள் சரியாகும். முதுகு டிஸ்க் பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
நாளை – ‘வாயுவே வெளியேறு’ இயக்கம்