வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 07: விவேகப் பந்து வீசலாமா?

எஸ்.ரவிகுமார்

உடலை யோகாசனத்துக்கு தயார்படுத்தும் முன்னோட்டப் பயிற்சிகளை பார்த்து வருகிறோம். முதுகை முன்பின்னாக, பக்கவாட்டில் வளைத்தோம். இந்த வரிசையில் அடுத்த பயிற்சி. கால்கள் இடையே சற்று இடைவெளி விட்டு நிமிர்ந்து நிற்கவும். கைகளை கூப்பி, மார்பை ஒட்டி வைக்கவும்.

விரல் நுனிகளை மட்டும் சேர்த்து, முழங்கை பகுதியை தோள்பட்டை வரை உயர்த்தவும். அதாவது, இரு கைகளும் இப்போது உங்கள் எதிரே ராமேசுவரம் பாம்பன் தூக்கு பாலம்போல இருக்கும். மூச்சை விட்டபடியே, இடுப்போடு நன்கு திருப்பி இடது பக்கமாக திரும்பி பின்னால் பார்க்கவும்.

வலது கை, மார்பை ஒட்டியிருக்க, இடது கை மட்டும் நம் பார்வையோடு சேர்ந்து பின்பக்கமாக நகரட்டும். மூச்சை இழுத்தபடி சமநிலைக்கு வாருங்கள். அதேபோல வலப் பக்கம். இப்படி மாறி மாறி 5 முறை செய்யவும். இடுப்பு திரும்பும்போது, கால்களையும் சேர்த்து திருப்பக் கூடாது. கால்கள் உறுதியாகதரையில் பதிந்திருக்க வேண்டும்.

அடுத்தது, தோள் மூட்டுக்கான பயிற்சி. கிரிக்கெட்டில் பந்து வீசுவதுபோல இடது கையை முன்புறமாக 3 முறை, பின்புறமாக 3 முறை சுற்றுங்கள். அதேபோல வலப் பக்கமும் செய்யுங்கள். பும்ரா போல, வேகப்பந்து வீச வேண்டாம். விவேகமாக ‘ஸ்லோபால்’ வீசி, அவருக்கு சவால் விடலாம்.

அடுத்து, கைகளை மடக்கி, தோள் மீது விரல்களை வைத்துக் கொள்ளுங்கள். முழங்கையை நன்கு விரித்தும், மடக்கியும் மாறி மாறி 5 முறை செய்யவும்.

நாளை – வானத்தை பார்த்தேன்.. பூமியை பார்த்தேன்..

SCROLL FOR NEXT