வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 4: மூட்டுப் பயிற்சி

செய்திப்பிரிவு

முழு மீல்ஸ் சாப்பிடத் தொடங்கும் முன்பு ‘சூப்’பில் ஆரம்பிப்பது இல்லையா.. அதுபோல, யோகாசனங்களை தொடங்குவதற்கு முன்பு உடம்புக்கு சின்னச் சின்ன பயிற்சிகளை அளிப்பது முக்கியம். அப்போதுதான், இறுகிப் போயிருக்கும் தசைகள் சற்று நெகிழ்வாகி, தொடர்ந்து நாம் செய்யப்போகும் ஆசனங்களுக்கு ஒத்துழைக்கும்.

கால் பாதத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மூட்டுகளாக பயிற்சிக்கு தயார்படுத்த வேண்டும். அத்தகைய பயிற்சிகளையே தற்போது தொடங்கியுள்ளோம். அதன் தொடக்கம்தான் குதிகாலை உயர்த்தி செய்த ‘தாடாசனம்’.

அடுத்து, கணுக்கால் பகுதி. பாதங்களை சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்கவும். முட்டி மடங்காமல், இடது காலை சற்று உயர்த்தவும். கணுக்காலை வலச்சுற்றாக 3 முறை, இடச்சுற்றாக 3 முறை சுற்றவும். பார்ப்பதற்கு, காலால் சாக்பீஸை கவ்விக்கொண்டு, ஸ்லேட்டில் ஜீரோ போடுவதுபோல இருக்கிறதா, நீங்கள் செய்வது சரிதான். இடது காலை கீழே இறக்கிவிட்டு, அடுத்து இதேபோல வலதுகாலை பயன்படுத்தி செய்யவும்.

அடுத்து, கால் முட்டிக்கான பயிற்சி. நேராக நில்லுங்கள். இரு உள்ளங்கைகளையும் இரண்டு கால் முட்டிகளில் வைத்துக் கொள்ளுங்கள். பாதங்கள் சேர்ந்து இருக்கட்டும். முட்டிகள் சேர்ந்து இருக்கட்டும். அதே நிலையில் இருந்தபடியே, இரு முட்டிகளையும் சேர்த்து நிதானமாக வலப்பக்கமாக 3 சுற்று, இடப்பக்கமாக 3 சுற்று. மூட்டு வலி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

நாளை - ‘சூப்பர் பிரெய்ன் யோகா’

SCROLL FOR NEXT