வலைஞர் பக்கம்

திருக்குறள் கதைகள் 76-78: பெருவலி

சிவகுமார்

குறள் கதை 78- பெருவலி

தமிழ் நடிகர்கள் வரலாற்றில் தங்க பிளேட், தங்க டம்ளரில் சாப்பிட்டவர் எம்.கே.டி. பாகவதர். 1910- மார்ச் 1-ந்தேதி கிருஷ்ணமூர்த்தி மாணிக்கத்தம்மாளுக்கு தஞ்சையில் பிறந்து, பின்னாளில் திருச்சியில் குடியேறினார்.

பள்ளிப்படிப்பு ஏறவில்லை. திருப்புகழ், தேவாரம் பாடுவதில் மகிழ்ச்சியடைந்தார். ரயில்வே அதிகாரி எஃப்.ஜி. நடேசய்யர், ரசிக ரஞ்சனிசபா என்ற நாடகக்குழு வைத்து இளம் நடிகர்களை நடிக்க வைத்து பிரபலமாக்கினார்.

அவரது, ‘ஹரிச்சந்திரா’வில் லோகிதாசன் வேடம் ஏற்று முதன்முதல் நடித்தார். 16 வயதில் திருச்சி கம்மாளத்தெருவில் -பொன்னுவய்யங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயிற்சி எடுத்து அரங்கேற்றம்.

நாடகங்களில் ஆண்களே பெண் வேடமேற்ற காலம் போய் -ரத்னாபாய் சரஸ்வதிபாய் - என்ற பெண்மணிகள் மேடையில் நடிக்க வந்தனர்.

தன்னோடு அப்படி நடிக்க வந்த பெண் கமலாவையே மணந்து கொண்டார் பாகவதர். ‘மதுரை வீரன்’ படத்தின் தயாரிப்பாளர் லேனா செட்டியார், அந்தக்காலத்தில் பாகவர் ஒரு நாடகம் போட 50 ரூபாய் வீதம் 50 நாடகங்கள் நடத்த ஒப்பந்தம் போட்டார்.

50-வது நாடகம் முடிந்ததும் ஃபோர்டு கார் ஒன்று வாங்கி பரிசளித்தார். வள்ளிதிருமணம் நாடகம்- பாகவதரும் எஸ்.டி.சுப்புலட்சுமியும் நடித்து ஹிட் ஆகி விட்டது.

ஆலத்தூர் சகோதரர்கள், பாபநாசம் சிவன், திருவாவடுதுறை ராஜரத்னம் பிள்ளை போன்ற சங்கீத வித்வான்கள், பாடலாசிரியர்கள், நாதஸ்வர மேதைகள் இவர்களை மெச்சினார்கள்.

1934-ல் ஏஎல்ஆர்எம்- செட்டியார் ‘பவளக்கொடி’ -படத்தை தயாரித்தார். பாகவதருக்கு ரூ.750 சம்பளம். எஸ்.டி.சுப்புலட்சுமிக்கு ரூ 1000, டைரக்டர் கே.சுப்பிரமணியத்திற்கு ரூ.500- கொடுத்து 51 பாடல்களுடன் படமாக்கியது. ஹிட்டாகி விட்டது.

கொச்சின் எக்ஸ்பிரஸ் ஈரோடு வருகிறது என்று தெரிந்தால் பிளாட்பாரத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடி விடுவார்கள். அவர் இறங்கி வணங்கி கையசைத்துப் புறப்படுவார்.

1937-ல் ‘சிந்தாமணி’ -‘ஒய். வி.ராவ் இயக்கினார். நடிகை லட்சுமியின் தந்தை இவர். படம் ஹிட்டாகி வருடக்கணக்கில் பல தியேட்டர்களில் ஓடியது. அதே 1937 -ல் எல்லீஸ் ஆர், டங்கன் இயக்கத்தில் வெளிவந்த ‘அம்பிகாபதி-யும் சூப்பர் ஹிட்.

1939-ல் சொந்தமாக தயாரித்த ‘திருநீலகண்டர்’ -ராஜா சாண்டோ இயக்க இளங்கோவன் வசனத்தில் வந்த படம். 50 வாரங்கள் ஓடின.

1943-ல் பட்சிராஜா ‘சிவகவி’ என்ற படம் எடுத்தது. அதுவும் ஹிட். 1944-ல் வெளிவந்த ‘ஹரிதாஸ்’ - 3 தீபாவளிகளைக் கண்டது. 14 படங்களே நடித்து தமிழக ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்தவர் பாகவதர்.

இரண்டாவது உலக யுத்தநேரம். யுத்த நிதிக்கு நாடகங்கள் நடத்தித்தர சென்னை கவர்னர் ஆர்த்தர் ஹோப் கேட்டார். இவர் பல நாடகங்கள் நடத்தி வசூல் செய்து கொடுத்தார். யுத்தம் முடிந்த பின் திருச்சி மலை மீது நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை 100 ஏக்கர் நிலப்பரப்பை சன்மானமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் கவர்னர்.

‘என் நாட்டைப் பிரித்து கூறு போட்டு எனக்குத் தருகிறாயா? முழு நாட்டையும் கொடு!’ என்று சொல்லி விட்டார்.

இன்று திருவரம்பூர் என்ற ஊராக அது வளர்ந்துள்ளது. திருச்சியிலிருந்து எழும்பூர், ரயிலில் பாகவதர் வருகிறார் என்றதும் பிளாட்பாரம் டிக்கட் 10 பைசா கொடுத்து வாங்கி பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி விட்டனர். 1000 ரூபாய் டிக்கட் வசூல் போலீஸ் பட்டாலியன் பாதுகாப்புக்கு வந்தது.

அண்ணாவும் பாகவதரும் நெருங்கிய நண்பர்கள். திருச்சி போனால் பாகவதர் வீட்டில் அண்ணா தங்குவார். காஞ்சி போனால் அண்ணா வீட்டில் இவர் தங்குவார். ஆனாலும் அண்ணா எழுதிய ‘சொர்க்கவாசல்’ -நாத்திக கதை என்பதால் நடிக்க மறுத்து விட்டார்.

1941-ல் ‘அசோக்குமார்’ படத்தில் ராஜா சாண்டோ டைரக் ஷனில் நடித்தார். எம்ஜிஆருக்கு ஒரு துண்டு வேஷம் தரப்பட்டது.

ராஜஸ்தானிலிருந்து ஐவ்வாது வாங்கி உடம்பெல்லாம் தடவிக் கொண்டு ‘கமகம’ வாசனையோடு நியூடோன் ஸ்டுடியோ படப்பிடிப்புக்கு வருவார்.

பாகவதர் -டி.ஆர்.ராஜகுமாரியுடன்

இரவெல்லாம் தன்னைப் பார்க்க, ஸ்டுடியோ வாசலில் நின்றிருக்கும் ரசிகர்களுக்கு நடைபாதையில் ஏழைப்பெண்கள் சுட்டு கூடைகளில் அடுக்கி வைத்திருக்கும் இட்லியை வாங்கி வந்து, தையல் இலை கொடுத்து அவரே பரிமாறி சாப்பிட வைத்து பின் படப்பிடிப்புக்குப் போவார்.

சேலத்தில் காந்தியடிகளைப் பார்க்க வந்த கூட்டத்தை விட பாகவதரைப் பார்க்க அதிக கூட்டம் வந்தது. ‘நாங்கள் வெறும் காட்சிப் பொருள். அவரே வணங்கத்தக்க தலைவர்!’ என்றார்.

நேருவும், காமராஜரும் மாலை மரியாதை பெற்றுக்கொண்டு பாகவதரிடம், ‘அரசியலில் சேர்ந்து கொள்ளுங்கள்!’ என்றனர். ‘அரசியலுக்கும் எனக்கும் வெகுதூரம்!’ என்று பதிலளித்தார்.

செட்டிநாட்டில் திருமணம் ஒன்றிற்குப் போனவர் அரண்மனை போன்ற அந்த செட்டியார் வீட்டைப் பார்த்து தன் தாயாருக்கு 90 கிரவுண்டில் திருச்சியில் ஒரு மாளிகை கட்டி குடி வைத்தார்.

1944- டிசம்பர் பாகவதர், கலைவாணர், பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதியானார்கள்.

2 வருடம், 2 மாதம் 13 நாள் சிறைவாசம் முடிந்து திரும்பினார் பாகவதர். ‘ராஜமுக்தி’ என்ற சொந்தப்படம், அவர்தான் ஹீரோ. பாகவதர்-பானுமதி- எம்ஜிஆர் கூட நடித்து வெளிவந்தது. படம் ஓடவில்லை.

1957-ல் ‘புதுவாழ்வு’ எடுத்தார். அதுவும் தோல்வி.

காரைக்குடி ரயில் நிலையத்தில் எப்போதும் ரயில் நிற்காது. பாகவதர் வருகிறார் என்று தெரிந்ததும் ரயில் அங்கே நின்று அவரை ஏற்றிக் கொண்டு சென்னை வந்தது ஒரு காலம்.

இப்போது திருச்சியில் 3-வது வகுப்பு பெட்டியில் பவானி ஜமுக்காள படுக்கை பெட்டியுடன் கண்பார்வை இழந்து சென்னை வந்து இறங்கியபோது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.

1959 நவம்பர் 1-ந்தேதி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அனாதை போல் இறந்து விட்டார்.-தயாரிப்பாளர் எம்.ஏ. வேணு செய்தி கேள்விப்பட்டு வந்து உடலை திருச்சி எடுத்துப் போய் அடக்கம் செய்தார்.

இதுபோன்ற சோதனைகள் மனிதனுக்கு வரும்போது நமக்கு நினைவுக்கு வரும் குறள்:

‘ஊழின் பெருவலியாவுள -மற்றொன்று

சூழினும் தாம் முந்துறும்!’

---

குறள் கதை 77 துணிவு

டைரக்டர் கே.பாலச்சந்தர் அவர்கள் கதை, வசனம், தயாரிப்பு, டைரக் ஷன் என ஏதோ ஒரு வகையில் 100 திரைப்படங்களில் சம்பந்தப்பட்டவர்.

கிட்டத்தட்ட 60 படங்கள் கதை வசனம் எழுதி, டைரக்ட் செய்தவை. அவற்றில் இயக்குநர் சிகரத்துக்கு பிடித்தவை 5 படங்கள். அவற்றில் ஒன்று ‘அக்னிசாட்சி’.

அக்னிசாட்சி சரிதாவுடன்

காதல் கணவன் மனைவிக்கு இலக்கணமாக சரிதாவும், நானும் நடித்த உணர்வுப்பூர்வமான படம்.

‘நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்

நிழலையோ பூஜிக்கிறேன் -அதனால்தான்

உன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட

என் நெற்றியில் நீரு போல் திருநீரு போல்

இட்டுக் கொள்கிறேன்!’ என்று சரிதா சொல்வார்.

‘குமரி உருவம் குழந்தை உள்ளம்

ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ

கணவன் மடியில் மகளின் வடிவில்

தூங்கும் சேயோ’ என்று நான் பாடுவேன்.

பாலச்சந்தர்

கே.பி.ரொம்பவும் ரசித்து எடுத்த படம். எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும்? என்று சலித்து ஆறுமாதம் படுக்கையில் விழுந்து விட்டார். இது ஒரு மல்யுத்த மேடை மாதிரிதானே? மீண்டும் சிலிர்த்து எழுந்தார். சிந்துபைரவி என்ற ஒரு ஹிட் படம் கொடுத்தார். வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றால் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் துன்பத்தை சகித்துக் கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்:

‘துன்பம் உறவரினும் செய்க -துணிவு ஆற்றி

இன்பம் பயக்கும் வினை’

---

குறள் கதை: 78 உழவு

வள்ளுவர் காலத்தில் உழுதுண்டு வாழ்ந்தவர்கள் மேன்மையானவர்கள். வணக்கத்துக்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள்.

இன்றைக்கு பருவமழை தவறி பெய்கிறது. மழையை பார்க்காத பிரதேசங்களும் ஆங்காங்கே உள்ளன. அதனால் பூமியில் எதுவும் விளைவதில்லை. மூலதனம் போட்டு செய்கின்ற விவசாயத்திற்கு -விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயம் செய்பவனை நாலாந்தர குடிமகனாக பெருவாரியான மக்கள் நினைக்கிறார்கள்.

அவன் தலையிலடித்துக் கொண்டு விவசாயம் செய்கிறான். விளைந்ததை நமக்கு குறைந்த விலையில் தர வேண்டியது அவன் தலைவிதி.

தூற்றல்

5 நட்சத்திர ஓட்டலில் ‘டிப்ஸ்’ 500 ரூபாய் வைப்போம். ஆனால் மார்க்கட்டில் 50 ரூபாய் கறி காய்க்கு 10 நிமிடம் பேரம் பேசுவோம்.

இந்த கொடுமையெல்லாம் சகிக்க முடியாமல் கிராமப்புறங்களிலிருந்து அகதிகள் போல் படைபடையாய் மக்கள் கிளம்பி வந்து -கூவம் ஆற்றோரம் குடிசை போட்டு தங்கிக் கொண்டு, பட்டணத்தில் கூலி வேலை செய்கின்றனர்.

பெய்யும் மழை நீரை வீணாக்காமல், ஆற்றில் போகும் நீரை ஏரிகளிலும், குளங்களிலும் தேக்கி வைத்து, நவீன முறையில் படித்த இளையதலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட்டால் கிராமத்துக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும். அப்போதுதான் வள்ளுவர் சொன்னது போல..

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் -மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்’

என்ற நிலை ஏற்படும்.

-----

கதை பேசுவோம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

SCROLL FOR NEXT