வலைஞர் பக்கம்

தினம் தினம் யோகா 02: நேரம் நல்ல நேரம்

எஸ்.ரவிகுமார்

யோகாசனப் பயிற்சியை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் முடிப்பது சிறப்பு. அப்போதுதான் வெயில், தூசு, புகை இருக்காது. மாலைப் பொழுதும் (5 – 6 மணி) ஓகேதான். எனினும், பகலில் பணியால் ஏற்பட்ட சோர்வு இருக்கும் என்பதால், புதிதாக பயிற்சியை தொடங்குபவர்களுக்கு அதிகாலையே சிறந்தது. காற்றோட்டமான அறை, மொட்டை மாடி, பூங்கா என சுகாதாரமான எந்த இடமும் ஏற்றதே. ஏசி, மின்விசிறியை தவிர்ப்பது நல்லது.

யோகா செய்வதற்கு, வழுக்காத ஏதோ ஒரு விரிப்பு போதும். 6, 8, 10 மி.மீ. தடிமனில் கிடைக்கும் யோகா மேட்களை வாங்கியும் பயன்படுத்தலாம்.

யோகாவுக்கு வயது தடை இல்லை. மறைந்த யோகா பாட்டி ‘பத்ம’ நானம்மாள் 99 வயது வரை யோகா செய்தார். பள்ளிக் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் வயதுக்கேற்ற பயிற்சிகளை செய்யலாம்.

முழுமையாக சிறுநீர், மலம் கழித்து, வெறும் வயிற்றில் யோகா செய்வது அவசியம். டீ, காபி அருந்தினால் அரை மணிக்கு பிறகும், டிபன் சாப்பிட்டால் 2 மணி நேரம் கழித்தும், முழு உணவு சாப்பிட்டால் 4 மணி நேரம் கழித்தும் யோகாசனம் செய்யலாம். நீண்ட பயணம், இரவு தூக்க குறைவு, காய்ச்சல் இருந்தால் யோகாவை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று யோகாசனம் செய்யலாம்.

நாளை - நிமிர்ந்து நில்

SCROLL FOR NEXT