புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர்
கவிதை இலக்கியத்துக்கான புலிட்ஸர் விருதுகளை 4 முறை பெற்ற அமெரிக்க கவிஞர் ராபர்ட் ஃப்ராஸ்ட் (Robert Frost) பிறந்த தினம் இன்று (மார்ச் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் (1874) பிறந்தார். இவரது தந்தை பள்ளி ஆசிரியர். பத்திரிகை ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். அவர் இறந்த பிறகு, மசாசூசெட்ஸில் உள்ள தாத்தா வீட்டில் குடும்பம் குடியேறியது.
# அங்குள்ள லாரன்ஸ் ஹைஸ்கூலில் பயின்றார். அங்கு தன் முதல் கவிதையை எழுதினார். டார்ட்மவுத் கல்லூரியில் சேர்ந்தார். படிக்க விருப்பமின்றி, 3 மாதங்களிலேயே ஊர் திரும்பினார். அங்கு பள்ளி ஆசிரியர், பத்திரிகையாளராக வேலை செய்தார்.
# ‘மை பட்டர்ஃபிளை: ஆன் எலஜி’ என்ற தனது முதல் கவிதையை 15 டாலருக்கு விற்றார். இது ‘நியூயார்க் இண்டிபெண்டன்ட்’ இதழில் 1894-ல் பிரசுரமானது. ஹார்வர்டில் இளங்கலை பயின்றார். குடும்பச் சுமை அதிகரித்ததால், படிப்பு பாதியில் நின்றது.
# நியூஹாம்ப்ஷயரில் தங்களுக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் 9 ஆண்டுகள் வேலை செய்தார். பண்ணை வேலைக்காக அதிகாலையிலேயே எழுந்துவிடுபவர், ஏராளமான கவிதைகள் எழுதினார். அவை பின்னர் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தன.
# நியூஹாம்ப்ஷயர் நார்மல் பள்ளியில் 5 ஆண்டுகாலம் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். 1912-ல் பண்ணையை விற்றுவிட்டு குடும்பத்துடன் இங்கிலாந்து சென்று, லண்டனில் குடியேறினார். அடுத்த ஆண்டில் ‘எ பாய்ஸ் வில்’ என்ற இவரது முதல் கவிதை நூல் வெளிவந்தது.
# இங்கிலாந்தில் எட்வர்ட் தாமஸ், டி.இ.ஹியூம் உள்ளிட்ட பிரபல கவிஞர்களுடன் நட்பு ஏற்பட்டது. இவரது கவிதைகளை பிரபலப்படுத்தவும், வெளியிடவும் அவர்கள் உதவினர். 1914-ல் ‘நார்த் ஆஃப் பாஸ்டன்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்து மகத்தான வெற்றியை ஈட்டியது.
# பிரிட்டன் முதல் உலகப்போரில் களம் இறங்கியபோது அமெரிக்கா திரும்பினார். மசாசூசெட்ஸில் விரைவுரையாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து எழுதி வந்தார். அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான கவிஞர் என்ற அந்தஸ்து பெற்றார்.
# இவரது படைப்புகள் இலக்கியத் தரத்துடனும், அதே சமயத்தில் மிகவும் எளிமையாகவும் இருந்தன. இவர் வளர்ந்தது நகரங்களில்தான். ஆனால், கிராமப்புற வாழ்க்கையின் எதார்த்த அம்சங்கள், சமூக சிக்கல்கள், தத்துவார்த்த விஷயங்களை தன் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தினார். அமெரிக்க வழக்கு மொழியை தன் படைப்புகளில் கையாண்டார்.
# முதன்முறையாக 1924-ல் ‘நியூஹாம்ப்ஷயர்: எ போயம் வித் நோட்ஸ் அண்ட் கிரேஸ் நோட்ஸ்’ என்ற கவிதைப் படைப்புக்காக புலிட்ஸர் விருது பெற்றார். தொடர்ந்து, ஒரு கவிதைத் தொகுப்பு (1931), ‘எ ஃபர்தர் ரேஞ்ச்’ (1937), ‘எ விட்னஸ் ட்ரீ’ (1943) ஆகியவற்றுக்காக புலிட்ஸர் விருதுகளைப் பெற்றார். இவரது படைப்புகள் மசாசூசெட்ஸில் உள்ள ஜோன்ஸ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
# கல்லூரியில் பட்டம் பெறாதவர். ஆனால், பிரின்ஸ்டன், ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட 40 பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டு இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இறுதிவரை தொடர்ந்து எழுதிவந்த ராபர்ட் ஃப்ராஸ்ட் 89-வது வயதில் (1963) மறைந்தார்.