உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை.
கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது.
"இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு" என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.
"என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்களே. என் அப்பா பேரும் இதுதான், தாத்தா பேரும் இதுதான். 60 வருஷமா அய்யர் பொட்டலக் கடை என்கிற பேர்ல கடை நடத்திக்கிட்டுவர்றோம்."
சுவையும் தரமும் தனித்தன்மையும் மிகுந்த இவர் கடையின் இனிப்பு, கார வகைகளுக்கு கலெக்டர், நீதிபதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், பெரிய பெரிய சங்கீத வித்வான்கள், கலைஞர்கள் எல்லாம் வாடிக்கையாளராக இருப்பது இது வெறும் கடை மட்டுமல்ல, கிராமியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதையே உணர்த்துகிறது.
“எங்க கடையில பட்சணம் வாங்கிச் சாப்பிடுற குழந்தைக்கு எந்த விதமான வயிற்றுக் கோளாறும் வரக் கூடாது. கலப்படம் கிடையாது, தரம்தான் எங்க கடையின் ‘தாரக மந்திரம்’. ஆனாலும், அந்தக் காலத்து பட்சணத்தின் தினுசே வேற சார். இப்போ இருக்க விலைவாசியில தரத்தைக் காப்பாத்த படாதபாடு படவேண்டியிருக்கு" எனும் பொட்டலக் கடை அய்யருக்கு தற்போது 80 வயதாகிறது. தாடியும் மீசையுமாக ஒரு யோகிபோலக் காட்சிதருகிறார்.
"அந்தக் காலத்தில் பட்சணம் செஞ்சபோது ஒரு மூட்டை கடலைப் பருப்பு (அதாவது 64 படி) விலை ரூபாய் 56, ஒரு டின் கடலை எண்ணெய் (16 கிலோ) ரூபாய் 18, ஒரு வீசை பட்டாணி 13 அணா, ஒரு வீசை மந்தாரை இலை பத்தணா, ஒரு வீசை சக்கரை (1,400 கிராம்) 13 அணா” பழைய விலைவாசியை நினைவிலிருந்து சொல்லிக்கொண்டே போகிறார்.
பட்சணக் கடையின் உட்புறமுள்ள வீட்டுக்குள் அழைத்துக் காண்பித்தார். நீண்ட முற்றத்தின் ஒரு பகுதியைத் தடுத்து, அதிலே நட்டுவைத்திருக்கும் ருத்திராட்ச மரங்களைக் காண்பித்தார். 150 அடி வரை வளரக்கூடிய இம்மரங்களைத் தரிசிப்பது 100 கோயில்களை தரிசிப்பதற்கு இணையாகும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்.
வீடெங்கும் பட்சணத் தயாரிப்பின் நறுமணத்தோடு பக்தி மணமும் கமழ்கிறது. கூடம் ஏறக்குறைய ஒரு தியான மண்டபம்போல் இருக்கிறது. நூற்றுக் கணக்கான சாமி படங்கள், சிலைகள். எல்லாவற்றுக்கும் மாலைகள்.
பேச்சின் நடுவே டபரா டம்ளர்களில் காப்பி வந்தது. பிரமாதமான காப்பி. "எங்களுக்குப் பேராசை கிடையாது, ஸ்வாமி இவ்வளவு குடுத்திருக்கார் பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக, திருப்தியாக இருக்கோம், இது போதும்"
-தூணில் சாய்ந்துகொண்டு மூக்குத்தி மினுங்க மாமி சொன்னார்.
அந்தத் திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் அந்தத் தம்பதியர் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
தஞ்சாவூர் கவிராயர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com