பிரதிநிதித்துவப் படம். 
வலைஞர் பக்கம்

மழைநீர் பள்ளங்கள்: சாலைப் பாதுகாப்பில் அதிகாரிகளுக்கும் பங்குண்டு 

செய்திப்பிரிவு

மத்திய அரசால் வெளியிடப்படும் பல்வேறு தரவரிசை மற்றும் ஆண்டறிக்கைகளில் தமிழகம் முதலிடம் பெறுவது அனைவரும் பெருமை கொள்ளக்கூடியதுதான். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் சாலை விபத்து குறித்த ஆண்டறிக்கைகளில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெறுவது கொண்டாடத் தகுந்த ஒன்றல்ல.

கடந்த நவம்பர் 1ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த முகமத் யூனுஸ் சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி, அருகில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றது. சம்பவத்திற்குப் பிறகு அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளத்தைத் தார் கொண்டு பூசி தற்காலிகமாகச் சரி செய்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாலையில் இருக்கும் பள்ளங்களில் சிக்கி நிலை தடுமாறி ஏற்படும் விபத்து, உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளே பெரும்பாலும் காரணமாக இருப்பது கசப்பான உண்மை. மழைக் காலங்களில் சாலைகள் சேதமடைவதும் அதுகுறித்த புகார்களுக்கு, நடவடிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் தற்காலிகமாகப் பள்ளத்தை மூடுவதையே நிரந்தரத் தீர்வாகக் கருதுகின்றனர். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தொடர் மழையால் அந்தச் சாலை மீண்டும் குண்டும் குழியுமாகவும் பயணிக்க ஆபத்தானதாகவும் மாறிவிடுகிறது.

சாலைப் பாதுகாப்பு குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 11% விபத்துகளாலேயே நிகழ்கிறது. 2018ஆம் ஆண்டுக்கான சாலைகள் குறித்த உலகளாவியப் புள்ளி விவரங்களின்படி சாலை விபத்தால் ஏற்படும் மரணங்களில் ஏனைய உலக நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடிக்கிறது.

அதிகமான சாலை விபத்துகளோடு இந்திய அளவில் சுமார் 7 ஆண்டுகளாக தமிழகமே முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழகத்தின் வாகன அடர்த்தியைக் கணக்கில் கொண்டால் அது இரண்டாம் அல்லது மூன்றாம் இடம்தான் பிடிக்கும் என்று மழுப்புவோரும் உண்டு. ஆனால் அதனால் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இந்தியா அளவில் சாலை பள்ளத்தில் ஏற்படும் விபத்துகள் 2018-ஐக் காட்டிலும் 2019இல் 6.2% அதிகரித்திருக்கிறது.

வாகனத்தின் மொத்த விலையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சாலை வரியாக வாங்கும் அரசு, தரமான சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டியது முழுமுதற் கடமை. தரமற்ற சாலைகளாலும், தனியார் மற்றும் அரசுத் துறைகள் தோண்டும் பள்ளங்கள் முறையாக மூடப்படாததாலும், புகார் குறித்த அதிகாரிகளின் மெத்தனப் போக்காலும், நடவடிக்கை என்ற பெயரில் சாலைப் பள்ளத்தை ஒட்டுப் போடுவதும் கண்டிக்கத்தக்கது.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி பல குழந்தைகள் உயிரிழந்த பிறகே அரசுக்கும் மக்களுக்கும் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. அதுபோல் இன்னும் எத்தனை முகமத் யூனுசுகளை காவு கொடுத்தால் சாலையில் ஏற்படும் பள்ளத்தின் உண்மையான ஆபத்தை அரசும் மக்களும் புரிந்து கொள்வார்கள்?

மனோஜ்கிரண். ம
டிஜிட்டல் மாணவப் பத்திரிக்கையாளர்.

SCROLL FOR NEXT