சோ-வுடன் 
வலைஞர் பக்கம்

திருக்குறள் கதைகள் 58 - 59: சிலேட்டு வரிகள்

சிவகுமார்

குறள் கதை 58: சிலேட்டு வரிகள்

சோ- மூத்த பத்திரிகையாளர், வழக்கறிஞர் நாடகாசிரியர், அரசியல் விகடகவி, சிறந்த நகைச்சுவை நடிகர்.

1934 அக்டோபர் 5-ம் தேதி சீனிவாசன்- ராஜலட்சுமி தம்பதிக்குப் பிறந்தவர். பி.எஸ்.சி.,பி.எல். படித்து, 1957 முதல் 1962 வரையில் வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். பின்னர் டி.டி.கிருஷ்ணாமாச்சாரி நிறுவனத்தின் சட்ட ஆலோசகரானார்.

1960-ல் திருமணம். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கல்லூரியில் படிக்கும்போதே நாடகங்களின் மீது காதல். தானே நாடகங்கள் எழுதி நடித்தார்.

'நேர்மை உறங்கும்', 'நேரம் இறைவன் இறந்து விட்டானா', 'உண்மையே உன் விலை என்ன', 'சரஸ்வதியின் சபதம்' எல்லாம் ஹிட் ஆன நாடகங்கள்.

'உண்மையே உன் விலை என்ன', 'முகம்மது பின் துக்ளக்', 'யாருக்கும் வெட்கமில்லை', 'மிஸ்டர் சம்பத்', 'சம்போ சிவ சம்போ' போன்ற அவரது நாடகங்களை திரைப்படங்களாக அவரே டைரக்ட் செய்து, நடித்து வெளியிட்டார். ‘யாருக்கும் வெட்கமில்லை’ படத்தில் ஜெயலலிதா அம்மையாருடன் நானும் நடித்தேன்.

சோ- பாலசந்தர் -இது ராஜபாட்டை அல்ல விழாவில்

'முகம்மது பின் துக்ளக்' 1000 முறைகளுக்கு மேல் மேடையில் நடிக்கப்பட்ட வெற்றி நாடகம். அதனால்தான் தன் பத்திரிகைக்கு ‘துக்ளக்’ என்ற பெயர் சூட்டினார்.

1971-ல் 'முகம்மது பின் துக்ளக்' கதை, வசனம் நடிப்பு ஹிட். பின்னர் 'தேன் மழை' 'நினைவில் நின்றவள்', 'மனம் ஒரு குரங்கு', 'பொம்மலாட்டம்', 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' 'ஆயிரம் பொய்' படங்களுக்கு வசனம் எழுதினார்.

1999 -ல் ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆருடன் 12 படங்களிலும், சிவாஜியுடன் 7 படங்களிலும், பின்னர் நானும், அவரும் 6 படங்களிலும் நடித்திருக்கிறோம். வால்மீகி ராமாயணம், மகாபாரதம், இந்து மகா சமுத்திரம் -அவரின் புராண இலக்கியப் புதையல்கள் என்னுடைய ராமாயண, மகாபாரத உரையைக் கேட்டு உச்சி மோந்து கொண்டாடிய ஒரே கலைஞர் அவர்தான். நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், டிவி பெட்டி வரவழைத்து 2 மணி 20 நிமிட உரையை முழுதாகப் பார்த்து அவர் - தொண்டையில் துவாரம் போட்டு சுவாசக்குழாய் பொருத்தப்பட்ட நிலையிலும் -சிலேட்டில் எழுதிய வரிகள் என் வாழ்நாளில் மறக்க முடியாதவை.

‘ரொம்பவும் எமோஷனல் ஆக்கி விட்டாய். மிக நன்றாக இருந்தது. நான் முழுவதும் பார்த்தேன். ‘BORE’ அடிக்கவேயில்லை. வியாச பாரதத்தில் இல்லாத நிறைய விஷயங்கள் உன் பேச்சில் இருந்தன. உன்னுடைய ஞாபக சக்தி அபாரம். UNIQUE. வேறு யாருக்கும் வந்தது இல்லை. வராது. ஒரு NOTES இல்லை. ஒரு PROMPTING இல்லை. கடகடன்னு தட்டுத் தடங்கல் இல்லாமல் பொரிந்தது CONGRATS.. சோ...!’

இவருடைய தாத்தா இவரை விடப் பெரிய வழக்கறிஞர். அனைத்தையும் துறந்து துறவியாக வாழ்ந்து மறைந்தவர். மனைவி குழந்தைகள் இருந்தும் இல்லறத்தில் துறவி போல சோ வாழ்ந்ததற்கு அவரது தாத்தா ராமநாத அய்யர் ரத்தம் முக்கியக் காரணம்.

திறமைசாலியான வழக்கறிஞராக தொழில் செய்தவரிடம் தெற்கத்திய ஆசாமி ஒருவன் -ஏகப்பட்ட நிலபுலன்களுக்குச் சொந்தக்காரன், பாளையைச் சீவுவது போல ஊருக்குள் மூன்று பேரை சீவி விட்டு வந்து, ‘சாமி. எத்தனை லட்சம் செலவானாலும் சரி. எனக்கு விடுதலை வாங்கித் தரணும்!’ என்று கெஞ்சியிருக்கிறான்.

தர்மதேவதையை சாட்சியாக வைத்து சட்டம் படித்தது இந்தக் கொலைகாரனை காப்பாற்றத்தான் பயன்படப் போகிறதா என்று நினைத்தவர் இனி சாகும் வரை கோர்ட் வாசலை மிதிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டார்.

LAW LEXICAN - என்று சட்ட நுணுக்கங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதினார் ராமநாத அய்யர்.

சோவின் தாத்தா- ராமநாத அய்யர்

சோ பிறந்து ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது வெள்ளிப் பிடிபோட்ட சந்தனத் தொட்டிலில் வெல்வெட் துணி மீது குழந்தையைப் படுக்க வைத்து பெண்கள் லாலி பாடியிருக்கிறார்கள்.

வீட்டுக்குள் எட்டிப் பார்த்த தாத்தா தெரியாமல் ஏதோ மகராசா வீட்டுக்குள் வந்து விட்டேன் என்று கூறி விட்டு புறப்பட்டுப் போனவர் காஞ்சி மடத்துக்குப் போய்விட்டு நேரே காசிக்குப் போய்விட்டார்.

கடைசிவரை பிச்சை எடுத்து சாப்பிட்டு 5 அடிக்கு 5 சதுர அடி அறையில் சுருண்டு படுத்து இறந்து கிடந்தார். உறவினர் போய்ப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். எல்லாம் இருந்தும் அனைத்தையும் துறந்து துறவி போல் வாழ்ந்து மறைவது அசாதாரணமான விஷயம்.

இதைத்தான் வள்ளுவர்:

‘வேண்டாமை அன்ன விழுச் செல்வம் -ஈண்டில்லை

யாண்டும் அஃது ஒப்பது இல்’’என்கிறார்.

----

குறள் கதை 59: ஓவல் டின்

என்னுடைய பெரியம்மா ஒருத்தி சந்தை நாட்களில் மிளகாய் வியாபாரம் செய்வார். சூலூரில் வெள்ளிக்கிழமை சந்தை நாள் பல்லடத்தில் திங்கள் கிழமை சந்தை நாள். ஊருக்குள் சென்று யார் தோட்டத்தில் மிளகாய் விளைகிறதோ அவர்களிடம் குறைந்த விலைக்கு மிளகாயை வாங்கி சந்தையில் கொஞ்சம் கூடுதலான விலைக்கு விற்பார்.

சந்தை என்பது சுற்று வட்டாரத்தில் 10 மைல் தூரத்திலுள்ள கிராமத்து மக்கள் ஒரு வாரத்துக்கு சமையலுக்கு வேண்டிய காய்கறிகள், பழ வகைகள், தானியங்களைத் தங்கள் நிலத்தில் விளைய வைத்ததை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து சந்தை என்கிற திறந்த வெளி மார்க்கெட்டில் விற்பார்கள்.

விவசாயக் கூலிகள், மற்ற தொழில் செய்பவர்கள் அந்தக் குறிப்பிட்ட நாளில் சந்தைக்குப் போய் ஃபிரஷ்ஷாக -கடலை, பொரி, வெள்ளரிக்காய், வாழைக்காய், தக்காளி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை எல்லாம் வாங்கி வந்து சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.

பெரியம்மா நினைவு தெரிந்த நாளிலிருந்து வெள்ளைச் சேலையில்தான் காட்சியளிப்பார். மிளகாய்க்கார பெரியம்மா என்று ஊருக்குள் அழைப்பார்கள்.

பெரியம்மா

பால்யத் திருமணங்கள் 100 ஆண்டுகளுக்கு முன் சர்வசாதாரணமாக நடக்கும். அப்படி 7 வயதில் திருமணம் செய்து, நீச்சலடிக்கும்போது கணவன் அகால மரணமடைய 9 வயதிலேயே விதவையாகி, வெள்ளை ஆடை அணியத் தொடங்கியவர்.

13 வயதில் அவர் வயதுக்கு வந்தும், குடும்ப வாழ்க்கை, குழந்தை குட்டிகள் எதையும் காணாமல் 90 வயது வரை வாழ்ந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்.

கிராமப்புறங்களில் பெரும்பாலும் ராகி, கம்பு, சோளம், தினை, வரகு, தானியங்கள்தான் உணவு. ஆகவே அந்தச் சோற்றின் மீது சிறுவயதில் எனக்கு வெறுப்பு.

பெரியம்மா ஊரின் கிழ கோடி, வடக்கு மூலையில் 3 அங்கணமுள்ள சின்ன வீட்டில் தனியே குடியிருந்தார். வெள்ளை மாடு ஒன்று வைத்துப் பால்கறந்து ஊற்றி அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

என் மீது கொள்ளைப் பிரியம். மாலையில் நான் அங்கு சென்றால் வெள்ளை மாட்டில் பால் கறந்து, தண்ணீர் கலக்காமல் காய வைத்து- கரும்புச் சர்க்கரைக்கு பதில் அஸ்கா சர்க்கரை (வெள்ளைச் சர்க்கரை- வசதி படைத்தவர்கள் மட்டும் பயன்படுத்திய காலம்) போட்டு ஆற்றி ஓவல் டின் கலந்து என்னை மடியில் அமர்த்திக் குடிக்க வைப்பார்.

சிறுவயதில் தந்தையை இழந்த எனக்குப் பெரியம்மா காட்டிய அன்பும், பரிவும், அவர் கொடுத்த ஓவல் டின் கலந்த பாலும் தேவாம்ருதமாக இருக்கும்.

பெரியம்மா- அம்மா- என் திருமண விழாவில்

அன்பே வடிவமான நடமாடும் தெய்வம் போலக் காட்சியளித்தார். 1974-ல் எனது திருமண வரவேற்புக்கு அவரை முதன்முதல் சென்னைக்கு அழைத்து வந்து ஊரைச் சுற்றிக் காட்டியபோது சொர்க்கத்துக்கு வந்திருப்பதாக உணர்ந்து நெகிழ்ந்தார்.

பெரியம்மாவின் அன்பு, கருணை வடிவத்திற்கு நான் தேர்வு செய்த குறள்:

‘அன்பின் வழியது உயிர்நிலை- அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு’

---

கதை பேசுவோம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

SCROLL FOR NEXT