இந்திய அரசியலமைப்பின் கட்டுமானம் "வேற்றுமையில் ஒற்றுமை" என்னும் சாராம்சத்தை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்டதுதான். சாதி, மதம், மொழி, இனம் என்று பலநூறு கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் ஒருமைப்பாட்டையும் குடிமக்களிடையே ஒற்றுமையையும் நிலைநிறுத்துவது இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் கொண்டிருக்கும் இறையாண்மைதான்.
16-ஆம் நூற்றாண்டுக்கு முன் “இறையாண்மை” என்ற சொல் கிடையாது. நாடுகள் உருவாகத் தொடங்கியபோது உருவான சொல்தான் இறையாண்மை. பல இனங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில், அந்தந்த இனங்களுக்கான மொழி, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு என அனைத்தும் காக்கப்பட்டு சம உரிமை வழங்கப்படுவதே அந்த நாட்டின் இறையாண்மை. இது மன்னனுக்கோ, அரசுக்கோ உரியதல்ல, மக்களுக்கானது. ஐரோப்பாவில் தோன்றிய இறையாண்மை இன்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை.
ஐரோப்பாவில் ஜனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இறையாண்மை, 19ஆம் நூற்றாண்டில் ஏற்கப்பட்டு, தனித்திருந்த பல இனக்குழுக்கள் ஒன்றிணைந்து ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் உருவாக்கப்பட்டன. இனங்கள் ஒன்றிணைந்து நாடுகளை உருவாக்கும் என்பதும், அந்த நாட்டில் உள்ள இனமக்களின் இறையாண்மை காக்கப்படும் என்பதும்தான் இன்று உலகளாவிய அரசுமுறைகளின் சாராம்சம். அந்த இறையாண்மையை அரசுகள் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கே ஜனநாயகம்.
ஐநூறுக்கும் மேற்பட்ட தனி சமஸ்தானங்களாகப் பிரிந்து இருந்த பிராந்தியங்களை சுதந்திரத்திற்குப் பின்னர் ஒன்றிணைத்து எவ்வித பேதமுமின்றி எல்லோருடைய கலாச்சாரமும் காக்கப்பட்டு சம உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு கொண்ட நாடக "இந்தியா" உருவானது. இந்திய நாடென்பது "இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடு" என்று சொல்கிறது, இந்திய அரசியலமைப்பு.
ஆனால், இந்திய அரசியலமைப்பில் மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரபூர்வமாகவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் களம் ஒன்று உண்டு என்றால், அது மொழி. பிரிந்திருந்த பல பிராந்தியங்களை ஒன்றிணைத்து ஒரு குடியரசாகக் கட்டமைக்கும் காலம் முதல் இன்றுவரை மொழி சமத்துவத்துகான வலியுறுத்தலும் அதற்கு எதிரான குரல்களும் தொடர்ந்து கொண்டே வருக்கின்றன. அரசு நடத்தும் ரயில் நிலையம், அஞ்சலகம், வங்கி முதல் பள்ளிக்கூடங்கள், போட்டித் தேர்வுகள், பணி வாய்ப்புகள் வரை எங்குமே தாய்மொழி சேவை வழங்கப்படவும் இல்லை, உரிமை என்று கேட்டும் பெற முடியவில்லை என்றால் அதற்குப் பின்னால் இருப்பது அரசின் ஒரு குறிப்பிட்ட மொழி சார்ந்த ஆதிக்க உணர்வுதான்.
இந்திய அரசியலமைப்பு தன் குடிமக்களுக்கு எதிரான மத பாகுபாட்டைத் தடை செய்கிறது. ஆனால், 2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் அரசினால் நிறைவேற்றப்பட்டது. மக்கள் இச்சட்டத்தை எதிர்ப்பதன் அடிப்படைக் காரணமே இது மதச்சார்பற்ற அரசியலமைப்பிற்கு எதிராக அமைந்திருப்பதே. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கெளதம் பாட்டியா, “புலம் பெயர்ந்தவர்களை முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பிரிப்பதன் மூலம், இச்சட்டம் நமது நீண்டகால அரசியலமைப்பிற்கு எதிராகவும் வெளிப்படையாகவும் மத பாகுபாட்டைச் சட்டத்தில் இணைக்கிறது” என்கிறார்.
ஜனநாயக முத்திரை கொண்ட ஒரு அரசு இப்படி சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், உரிமைகளைக் கேட்போரை அதே சட்டங்கள் கொண்டு அடக்குவதும் ஜனநாயகம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அதிகாரமே. இந்திய அரசிடம் வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட மொழி மற்றும் மதம் சார்ந்த இந்த ஆதிக்க உணர்வுதான் தன்னியல்பாக நாட்டில் உள்ள அந்தக் குறிப்பிட்ட மதத்தையும் மொழியையும் சார்ந்த கணிசமானவர்களிடம் வெளிப்படுகிறது.
இது இயல்பாகவே மக்களிடையே உள்ள ஒற்றுமையையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும்.
“வேற்றுமையில் ஒற்றுமை” என்பதை அடிநாதமாகக் கொண்ட ஒரு ஜனநாயக அரசியலமைப்பில் செயல்படும் அரசு தங்கள் சுய லாபத்தையும், அரசியல் நோக்கத்தையும் பிரதான எண்ணமாகக் கொண்டு செயல்படாமல், நாட்டின் முன்னேற்றத்தையும் அதற்கு வழி செய்யும் மக்கள் நல்லிணக்கத்தையும் முதன்மைப்படுத்திச் செயல்படவேண்டும். இறையாண்மையும், ஒற்றுமையும், நாட்டின் வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடயவை. பல கலாச்சாரங்கள் கொண்ட இனங்கள் வாழும் நாட்டில் தங்களின் இறையாண்மை உறுதி செய்யப்பட, மக்களிடையே ஒற்றுமை பெருகும் இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிசெய்யும்.
சிலைகள் நிறுவி ஒற்றுமை தினம் அறிவிப்பதாலோ, மேடைகளில் “அனைவரும் ஒருங்கிணைந்தால் மட்டுமே வளர்ச்சி” என்று முழங்குவதாலோ மட்டும் இங்கு ஒற்றுமையை நிலைநிறுத்த முடியாது. தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது வெளிப்படுத்தும் எதிர்ப்புக் குரல்கள் மற்றும் போராட்டங்களின் வழியே மக்கள், தாங்கள் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதையே சொல்கிறார்கள். ஒற்றுமையை நிலைநிறுத்த விரும்பும் அரசானது குடிமக்களின் இறையாண்மைக்கு முன்னுரிமை கொடுத்து நுண்ணுணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் உரிமைக் குரலுக்கு மதிப்பளித்து ஆட்சி நிகழ்த்த வேண்டும்.
கட்டுரையாளர்: வசந்த்
டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.