குறள் கதை 54 - நேர்மை
மொரார்ஜி தேசாய் 1896- பிப்ரவரி 29-ம் தேதி குஜராத்தில் பிறந்தவர். அப்பா பள்ளி ஆசிரியர். உள்ளூரில் பள்ளிப்படிப்பு முடித்து பம்பாய் சென்று கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். ஐசிஎஸ் முடித்து டெபுடி கலெக்டராக கொஞ்சநாள் பணியாற்றியிருக்கிறார்.
விடுதலைப் போராட்டத்தில் காந்திஜி அணியில் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார்.
1934- 37 தேர்தலில் போட்டியிட்டு வென்று பம்பாய் மாகாணத்தின் நிதியமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் 1952-ல் பம்பாயின் முதன் மந்திரி ஆனார். 1964-ல் நேரு மறைந்ததும் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராகத் தேர்வானார். அவர் மறைவுக்குப் பின் இந்திரா பிரதமர் ஆனார். 1969- வரை இந்திரா மந்திரிசபையில் துணைப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தார்.
1971- தேர்தலில் இந்திரா மாபெரும் வெற்றி பெற்றார். 1975- 77 எமர்ஜென்சியில் மொரார்ஜி, சகாக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1977-ல் காங்கிரஸ் அல்லாத கட்சியின் முதல் பிரதமராக தேர்வான மொரார்ஜி 79 -வரை பதவியில் இருந்தார்.
பிரதமராக இருந்த காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாகக் கொண்டு வந்து மக்களின் சுமையைக் குறைத்தவர்.
தாலி செய்வதற்குக் கூட தங்கம் வாங்க முடியாத அந்தக் காலத்தில் தங்கத்தின் விலையைப் பன்மடங்கு குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று செய்து காட்டியவர்.
மொரார்ஜி தேசாய் பிளவுபடாத பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரது மகள் இந்து மருத்துவக்கல்லூரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். ரேங்கில் தேர்ச்சி பெறுவேன் என்று தோழிகளிடம் சொல்லி இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி என்று ரிசல்ட் வந்தது. எப்படி இது நடந்தது என்று அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தோழிகளும் நம்பவில்லை. மறுகூட்டல் செய்தால் நிச்சயம் பாஸ் ஆகி விடுவார் என்று தோழிகள் ஆலோசனை கூறினர்.
இரண்டு நாள் தூக்கமில்லை. சரியாகச் சாப்பிடவில்லை. ‘ஏனம்மா இப்படி இருக்கிறாய்?’ என்று அப்பா மொரார்ஜி கேட்டார். ‘தேர்வு முடிவு தந்த அதிர்ச்சி’ என்று மகள் விளக்கினாள்.
‘‘அம்மா! நான் முதல்வர் பதவியில் இருக்கிறேன். ஒரு வார்த்தை சொன்னால் மறுகூட்டல் போட்டுப் பார்த்து விடுவார்கள். நீ நிச்சயம் பாஸ் ஆகி விடுவாய். ஆனால் அப்பா அதைச் செய்ய முடியாது. ஊரும், உலகமும் மொரார்ஜி தன் செல்வாக்கைப் பயன்படுத்தி -தோல்வியடைந்த பெண்ணைத் தேர்ச்சி அடையச் செய்துவிட்டார் என்று பேசும். அப்பா அதைச் செய்ய மாட்டேன். நீ அடுத்த முறை கவனமாக எழுதி பாஸ் ஆவதுதான் நல்லது!’’ என்றார்.
உலகம் தெரியாத பெண். அறிவுரை சொல்ல சரியான ஆள் இல்லை. ‘நம் வாழ்க்கை இப்படியாகி விட்டதே!’ என்ற சோகத்தில் அவள் தற்கொலை செய்துகொண்டாள்.
மகளைத் துடிக்கத் துடிக்கப் பறிகொடுத்த அந்தக் கணத்திலும், ‘நான் நேர்மையாக வாழ்வதற்கு என் மகளைப் பறிகொடுத்துத்தான் ஆக வேண்டும் என்றால் என் மகளை இழக்கத் தயங்க மாட்டேன்!’’ என்றார்.
‘ஊழிக்காலம் வந்து கடல் பொங்கி பூமி முழுவதும் கடலுக்குள் மூழ்கினாலும் நேர்மை தவறாதவர்கள் அதர்மமான வழிகளில் செல்ல மாட்டார்கள்’ என்கிறார் வள்ளுவர்.
‘ஊழி பெயரினும் தாம்பெயரார் -சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுபவர்’
---
குறள் கதை 55- சான்றோர்
‘நீதிமன்றத்தில் எனக்கு டவாலி வேண்டாம்.
நீதிபதியின் சுழல் விளக்கு கார் எனக்கு வேண்டாம்.
கோர்ட்டுக்குள் என்னை யாரும் ‘மை லார்டு’ என்று அழைக்க வேண்டாம்.
பூங்கொத்து, பழக்கூடை, சால்வை மரியாதை எதுவும் எனக்கு யாரும் செய்ய வேண்டாம்...!’ என்றெல்லாம் உத்தரவிட்டவர் தம் 7 ஆண்டு பதவிக் காலத்தில் 96 ஆயிரம் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு சொன்னவர்.
பதவி முடிந்த அன்று அரசு காரைப் பயன்படுத்தாமல் நீதிமன்றத்திலிருந்து 2 பர்லாங் தூரத்திலுள்ள கடற்கரை ரயில் நிலையத்துக்கு நடந்து சென்று மின்சார ரயிலில் பயணம் செய்து வீட்டுக்குப் போனார்.
பதவி ஏற்பதற்கு முன்னரும், பதவி முடிந்த பின்னரும் தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டவர்.
பெண்களும் கோயிலில் அரச்சகராகலாம்...
எல்லா சாதியினருக்கும் ஒரே மயானம்...
மதிய உணவுக்கூடங்களில், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களும், சமையல் செய்ய வாய்ப்பு தரவேண்டும்.
- என்பன போன்ற அதிரடி தீர்ப்புகள் வழங்கியவர். அவர்தான் வணங்கத்தக்க நீதிபதி சந்துரு அவர்கள்.
சான்றோர்களின் நேர்மை, சத்தியத்தினால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பண்பு தவறினால் இந்த உலகம் தாங்காது என்கிறார் வள்ளுவர்.
‘சான்றவர் சான்றாண்மை குன்றின் - இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை’
----
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in