வலைஞர் பக்கம்

மன்னா... என்னா? - வாத்தியார்கள் போராட்டம்

எஸ்.ரவிகுமார்

அரசவை வாத்தியார்கள் 5 பேர். குறைவான வேலை, நிறைவான சம்பளம், இஷ்டத்துக்கு விடுமுறை என்று சுகமாய் ஓடிக்கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை. ஆனாலும், அவர்களுக்கும் சிலபல கோரிக்கைகள். அதை மன்னர் கண்டுகொள்ளவே இல்லை. டென்சனான அவர்கள், ஒரு தீர்மானத்துடன் சாமியானா பந்தலைப் போட்டு உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டார்கள்.

குடுகுடுவென்று மன்னரிடம் ஓடிய மந்திரி, ‘‘ஏற்கெனவே நிலைமை சரியில்லை. அவர்களை முதலில் சமாதானப்படுத்தி, உண்ணாவிரதத்தை முடித்துவையுங்கள்’’ என்று காதைக் கடித்தார்.

ஜூஸ் கொடுத்த மன்னர், ‘‘உண்ணாவிரத களைப்பு தீர, விருந்தினர் மாளிகையில் 5 நாட்களுக்கு ஓய்வெடுங்கள்’’ என்று அவர்களை அனுப்பிவைத்தார்.

வேளாவேளைக்கு தூக்கம், ஓய்வு என்று 5 நாட்கள் கழிந்தது. 5 ஆசிரியர்களும் புறப்பட்டனர். அல்பத்தனமாக அவர்களிடம் ஒரு பில்லை நீட்டினார் மன்னர்.

‘விருந்தினர் மாளிகை வாடகை 5 ஆயிரம் வராகன்.’

‘‘மன்னா! நீங்கள்தானே தங்கச் சொன்னீர்கள். அதுமட்டுமின்றி, விருந்தினர் மாளிகையில் ஒரு ஓரத்தில் தங்கியதற்கு 5 ஆயிரம் வராகனா? 500 வராகனாக குறைத்துக்கொள்ளுங்கள்’’ என்றனர்.

‘‘மாளிகையில் பிரம்மாண்ட நீச்சல் குளம், குதிரைப் பயிற்சி, மல்யுத்த பயிற்சிக் களம் இப்படி பல வசதிகள் இருக்கிறதே. அதற்கெல்லாம் சேர்த்துதான் இத்தொகை’’ என்றார் மன்னர்.

‘‘அதையெல்லாம் நாங்கள் பயன்படுத்தவில்லையே’’ என்றனர் ஆசிரியர்கள்.

‘‘வசதிகளை பயன்படுத்திக்கொள்ளாதது உங்கள் தவறு’’ என்றார் மன்னர்.

மன்னரை அவரது வழியிலேயே மடக்க முடிவு செய்த தலைமை ஆசிரியர், ‘செக்’கில் ‘0 வராகன்’ என்று எழுதிக் கொடுத்தார்.

‘‘எனக்கே முட்டை போடுகிறீர்களா?’’ என்றார் மன்னர் கோபத்துடன்.

தலைமை ஆசிரியர் சொன்னார். ‘‘நான் தமிழாசிரியர். மற்றவர்கள் கணினி, உடற்பயிற்சி, இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள். கடந்த 5 நாட்களில் மாமன்னர் எங்களுக்கு தரவேண்டிய டியூஷன் பீஃஸ் 5,000 வராகன். அதற்கும் விருந்தினர் மாளிகை வாடகைக்கும் கழிந்துவிட்டது’’ என்றார்.

‘‘நான் டியூஷன் படிக்கவே இல்லையே’’ என்றார் மன்னர்.

‘‘டியூஷனுக்கு வராதது உங்கள் தவறு’’ என்று கூறிவிட்டு நடையைக் கட்டினர் ஆசிரியர்கள்.

SCROLL FOR NEXT