பெரியார் 1879-செப்டம்பர் 17-ந்தேதி ஈரோட்டில் பிறந்தவர். அப்பா வெங்கடப்ப நாயக்கர், அம்மா சின்னத்தாய் முத்தம்மாள். அண்ணன் கிருஷ்ணசாமி. இரு சகோதரிகள் கண்ணம்மை -பொன்னுத்தாய்.
5 வயது வரை பள்ளி -பின் 12 வயதிலேயே அப்பாவின் வாணிபத்தில் சேர்ந்து கொண்டார். அப்பாவின் ஏற்பாட்டில் வீட்டில் நடக்கும் வைணவ கதாகாலட்சேபங்களை ரசித்து, கூர்ந்து கவனிப்பார். அந்தச் சிறுவயதிலேயே புராணக்கதைகளில் நம்ப முடியாத சம்பவங்கள், மூடத்தனமான விஷயங்கள் இருப்பதைக் கண்டு கொண்டார்.
19 வயதில் திருமணம். ஒரு பெண் குழந்தை பிறந்து 5 மாதத்தில் இறந்து விட்டது. முதல் மனைவி நாகம்மை. 1933-ல் மரணமடைந்தார். இரண்டாவதாக 1949-ல் மணியம்மையை மணந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 68. இந்தியாவில் மதம் என்பது சாதியிலுள்ள ஏற்ற தாழ்வுகளை நியாயப்படுத்தி, அப்பாவி மக்களை ஏமாற்றி அடிமைப்படுத்தும் கவசம் என்று உணர்ந்து மூடப்பழக்கங்களையும், சாமியார்களையும் எதிர்த்தார்.
1904-ல் காசி விஸ்வநாதர் கோயிலைப் பார்க்க வாரணாசி போனார். அங்கே புனித கங்கையில் பிணங்களை வரிசையாக மிதக்க விடும் அசிங்கத்தையும், தெய்வ சந்நிதானத்தின் முன் பிச்சையெடுப்போரையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
கையில் காசில்லை. பசி தாங்க முடியவில்லை. பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்கும் விடுதிக்குப் போனார். உள்ளே நுழைய ஒரு தந்திரம் செய்தார். ஒரு நூலை தோளில் பூணூல் போல் போட்டுக் கொண்டு போனார். உள்ளே போய் கையில் உணவுப் பொட்டலம் வாங்கும்போது காவலாளி ஒருவன் ஓடி வந்து இவர் மீசையைப் பார்த்து வேஷம் போட்டு வந்தவன்; இவன் பிராமணனல்ல என்று கழுத்தைப் பிடித்து தரதரவென்று இழுத்துப் போய் வெளியே தள்ளினான்.
பசி உயிர்போகிறது. வேறு வழியில்லை. நாய்களை விரட்டி விட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருந்த எச்சிலைகளை எடுத்து அதில் ஒட்டியிருந்த சாதத்தை வழித்து சாப்பிட்டார்.
இப்படி ஆரம்பத்தில் வாழ்ந்தவர் முதலில் சாதியை ஒழிக்க வேண்டும் என்று முடிவு கட்டி 1924-ல் செப்டம்பரில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் நாயக்கர் என்ற சாதிப் பெயரை இனி என் பெயரோடு சேர்க்க மாட்டேன் என்று அறிவிப்பு செய்தார்.
தீண்டாமைக்குக் காரணம் சாதிப்பிரிவுகள். வர்ணாசிரமம் என்பது பிராமணன், சத்திரியன், வைஷ்ணவன், சூத்திரன் என்று சாதிப்பிரிவைச் சொல்வது. அந்த வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிப்பது மதம். மதத்தை தூக்கி நிறுத்துவது கடவுள். ஆகவே கடவுளை வெறுத்து -கடவுள் மறுப்பைக் கோஷமாக முழங்கினார்.
‘கடவுளை கற்பித்தவன் முட்டாள்
பரப்புகிறவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி’
- என்று பிரகடனப்படுத்தினார்.
தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும் அடுத்தவர்கள் நம்பிக்கையை மதிக்கும் உயர்ந்த குணமுடையவர்.
குன்றக்குடி அடிகளாரைச் சந்திக்கப் போனபோது அவர் கொண்டு வந்து இட்ட விபூதியை தன் நெற்றியில் பணிவுடன் வாங்கிக் கொண்டார்.
தமிழ்தென்றல் திருவிக- வரதராஜூலு நாயுடு- பெரியார் மும்மூர்த்திகளாக விளங்கினர். முதலியார் (திருவிக), நாயுடு (வரதராஜூலு) நாயக்கர் (பெரியார்) என்று செல்லமாக கூப்பிட்டுக் கொள்வார்களாம்.
ஒரு முறை ஈரோடு வந்த திரு.வி.கல்யாணசுந்தரனார் பெரியார் வீட்டில் தங்கினார். அவர் குளித்து விட்டு வெளியே வந்தபோது பெரியார் விபூதித் தட்டோடு எதிரே நின்றாராம்.
எந்த நிகழ்ச்சியிலும் கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் ஒலிக்கும் போது மரியாதை நிமித்தமாக அனைவருடன் எழுந்து நின்று கொள்வார்.
ஐந்து வயதுச்சிறுவன் தன்னைப் பார்க்க வந்தாலும் ஐம்பது வயது மனிதன் வந்தாலும் அவர்களை எழுந்து நின்று வரவேற்பார்.
இன்று ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள், பெண்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ்-களாக உருவாக அன்றைக்கு விதைபோட்டு நீர் ஊற்றியவர் பெரியார்.
இவரைப் போன்ற மனிதர்களை கெளரவிக்க வள்ளுவர் எழுதிய குறள்:
‘‘செயற்கரிய செய்வார் பெரியர்- சிறியர்
செயற்கரிய செய்க லாதார்’’
---
குறள் 49 மயிலிறகு
எங்கள் ஊருக்கு பக்கத்தில் 4 பர்லாங் தூரத்தில் உள்ளது கலங்கல் கிராமம். அங்குதான் கல்யாணசாமி நாயுடு என்கிற ஆசிரியரிடம் தனிநபர் பள்ளியில் -கல்மண்டபத்தில்- ஒண்ணாம் வகுப்பு முதல் 4 முடிய படித்தேன்.
அந்த ஆசிரியருக்கு 2 பிள்ளைகள். ஒரு பெண். இரண்டாவது மகன் உத்தமன் என் வயதொத்தவன்.
ஒரு நாள் பகல் உணவுக்கு என் கிராமத்துக்குப் போய் திரும்பும்போது உத்தமன் பிணமாகக் கிடந்தான். பள்ளி மாணவர்கள் அத்தனை பேரும் அதிர்ந்து போய் விட்டோம்.
கிராமப்புறங்களில் பருத்தி வெடித்ததும், அதைச் செடியிலிருந்து பறித்து காற்றுப்புகாத 10 அடிக்கு பத்து அடி அளவுள்ள சதுரமான அறையில் கொட்டி, காலால் மிதித்து அம்பாரம் செய்வார்கள்.
4 அடி உயரமுள்ள பருத்தி பொதி மீது ஏறி மிதித்தால் அது இறுகி 2 அடி உயரமாக குறைந்து விடும். 8 அடி உயரம் பரவலாக பருத்தியை கொட்டி ஏறி மிதித்தால் அது 6 அடியாக -இறுக்கமாக அம்பாரமாகி விடும்.
இப்படி பருத்தியை கொட்டி இறுக்கமாக மிதித்து 8 அடி உயரம் செய்யப்பட்டிருந்த அம்பாரத்தின் மீது, கண்ணாம்பூச்சி விளையாட உத்தமன் தாவி ஏறி நடுப்பகுதியில் ஒரு ஆள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு பஞ்சைத் தோண்டி எடுத்து குழி செய்து வைத்திருந்தான்.
அன்று பகல் உணவுக்குப் பிறகு, கண்ணாம்பூச்சி ஆட்டம் துவங்கியது. ‘ஜூட்’ என்று சொல்லி விட்டு வேகமாக அம்பாரத்தின் மீது தாவி ஏறி ஒளிந்து கொள்ள அந்த குழியில் குதித்தான். அளவு கடந்த இறுக்கம் காரணமாக அம்பாரத்திலிருந்த பஞ்சுப்பொதி ‘கப்’பென்று அவனை உள்வாங்கி மூடிக் கொண்டது. என்ன முயன்றும் அவன் மேலே வர முடியவில்லை. மூன்று நிமிடத்தில் கதை முடிந்து விட்டது.
வீடு பூராவும் உத்தமனைத் தேடி -சந்தேகத்தின் பேரில் அம்பாரத்தைப் பார்த்தனர். தோண்டிப் போட்ட பஞ்சு மீது சந்தேகம் கொண்டு விலக்கிப் பார்த்தபோது பிணமாகிக் கிடந்தான் உத்தமன்.
மயில் இறகாக இருப்பினும் அளவுக்கு மீறி வண்டியில் பாரம் ஏற்றினால் அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும் என்கிறார் வள்ளுவர்.
இங்கு லேசான பஞ்சாக இருப்பினும் அளவுக்கு மீறி அழுத்தி வைத்திருந்ததால் ஒரு சிறுவன் உயிரை அது பறித்து விட்டது.
‘‘பீலிபெய் சாகாடும் அச்சு இறும் -அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்‘‘.
---
கதை பேசுவோம்...