வலைஞர் பக்கம்

கோபர்நிகஸ் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

புகழ்பெற்ற போலந்து வானியலாளர்

உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் (Nicolaus Copernicus) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# போலந்து நாட்டின் தோர்ன் நகரில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் (1473) பிறந்தார். தந்தை வணி கர். 10 வயதில் தந்தையை இழந்து மாமாவின் பராமரிப்பில் வளர்ந் தார். இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலையில் படித்தபோது, ‘நிகோலஸ் கோபர் நிகஸ்’ என்று மாற்றிக்கொண்டார்.

# கிரேக்க கவிதைகளை லத்தீனில் மொழிபெயர்த்தார். 18 வயதில் கிராக்கோவ் பல்கலைக்கழகத்தில் வானியல், கணிதம், தத்துவம், புவியியல், அறிவியல் பயின்றார். இங்கு இவரது ஆசிரியர் ஆல்பர்ட் ப்ரட்ஜூஸ்கியின் மீதான தாக்கத்தால் வானியலில் ஆர்வம் பிறந்தது. அதுகுறித்து ஏராளமான நூல்களை படித்தார்.

# கத்தோலிக்க தேவாலயங்களின் சட்ட விதிமுறைகள் குறித்து படிக்குமாறு கூறி இத்தாலிக்கு இவரை அனுப்பினார் மாமா. பொலோனா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர், தனது பெரும்பாலான நேரத்தை வானியல் ஆராய்ச்சிகளில் செலவிட்டார்.

# போலந்து திரும்பியவர் வார்மியாவில் உள்ள தேவாலயத்தில் பணி புரிந்தார். மாமாவின் செயலாளராகவும் அவரது தனிப்பட்ட மருத்துவ ராகவும் இருந்தார். மதப் பணிகளையும் செய்து வந்தார். ஒரு பொருளாதார வல்லுநராக அரசுப் பணிகளையும் மேற்கொண்டார்.

# மீண்டும் இத்தாலி சென்று, வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். 1514-ல் தான் எழுதிய கையெழுத்துப் பிரதி நூலை பல்வேறு வானியலாளர்கள், நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

# எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சி கள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப் பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கணித அடிப்படையில் இந்த ஆராய்ச்சிகளை இவர் மேற்கொண்டார். 7 பகுதிகள் கொண்ட சுழற்சிக் கோட்பாட்டை உருவாக்கினார். அனைத்து கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன என்பதுதான் அதில் முக்கியமானது.

# சூரியனை மையமாகக் கொண்டே பூமி உள்ளிட்ட கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

# அவர் வாழ்ந்த காலத்தில் இந்த கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள் பெரிதாக கொண்டாடப்படவில்லை. இவரது காலத்துக்குப் பிறகே இவரது கோட்பாடுகளை கலிலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டு, அதுபற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இவரது சூரிய மையக் கோட்பாடுகள் வானியல் வளர்ச்சிக்கு வித்திட்டன.

# ‘ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ்’ என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய இந்த நூல், இவர் மரணப் படுக்கையில் இருந்தபோதுதான் வெளியானது.

# வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசுத் தூதர் என பல்வேறு களங்களில் செயல்பட்ட நிகோலஸ் கோபர்நிகஸ் 70-வது வயதில் (1543) மறைந்தார்.

SCROLL FOR NEXT