வலைஞர் பக்கம்

பிரான்சிஸ் கிருபா மறைவு: நிழலைத் தவிர ஏதுமற்றவன் நினைவாகிப் போனான்

செய்திப்பிரிவு

கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா நேற்று இரவு சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவு செய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்.

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய மிக முக்கியமான படைப்புகளுக்குச் சொந்தக்காரர். கவிதை மட்டுமன்றி வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கர்ம வீரர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'காமராஜ்' திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார்

கன்னி எனும் புதினத்திற்கு 2007 ஆம் ஆண்டில் விகடனின் சிறந்த புதினம் என்ற விருதையும், 2008ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார்.

அப்பாவுக்காக ஏதாவது எழுத வேண்டும் என்று எழுதத் தொடங்கியவர், கண்ணதாசனின் புகைப்படம் கண்டு கவியாக வேண்டும் எனக் கனவு கண்டார். கவிதைகள் எழுதத் தொடங்கினார். கவிதை எழுதுவது ஒரு மயக்கம். அது அவருக்கு ஒரு மன விடுதலையைத் தந்ததாம். பம்பாயில் மராத்தி முரசு மற்றும் சில இதழ்ளிலும் அவரது கவிதைகள் பிரசுரமாயின.

கவிஞனை உடைத்த கைது நடவடிக்கை

ஒரு கொலை வழக்கு தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினரால் 2019ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த வழக்கில் அவர் குற்றவாளி அல்ல. வலிப்பு நோய் காரணமாக கீழே விழுந்து அடிபட்டு துடித்துக் கொண்டிருந்த ஒருவரைக் கண்டு பதறி, தன் மடியில் வைத்த பிரான்சிஸ் கிருபா, அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயன்றார். இதனை சிசிடிவி கேமரா மூலம் தெரிந்துகொண்ட காவல்துறையினர் உடனே அவரை விடுதலை செய்தனர்.

முகம் தெரியாதவர்களின் அன்பும், இயக்குநர் லெனின் பாரதி, பத்திரிகையாளர் கவின்மலர், கவிஞர் யூமா வாசுகி, நடிகர் ராமச்சந்திரன், சமூகச் செயற்பாட்டாளர் ஆன்மன் போன்ற நண்பர்களின் அரவணைப்பும் அவருக்குள் இருந்த வெற்றிடத்தை இட்டு நிரப்பியது.

ஒரு நாள் முடிய
இன்னும் ஒரே ஒரு வினாடியே மீதமிருக்கிறது
ஒரு இரவு விடிய
சேவலின் ஒரே ஒரு கூவல் மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு கனவு கலைய
இன்னும் ஒரே ஒரு பார்வை மட்டுமே மீதமிருக்கிறது
ஒரு உறவு முறிய
இன்னும் ஒரே ஒரு சொல் மாத்திரமே மீதமிருக்கிறது

மண்டியிட்டால் மன்றாடினால்
உன் கடிகாரப் பைக்குள் கை நுழைத்து
அள்ளி எறியக்கூடும்
சில சில்லறை வினாடிகளை...
வேண்டாம்...

ஒரு வாழ்வு முடிய
இன்னும் ஒரு உயிர் மீதமிருக்கிறது - ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா

நிழலைத் தவிர ஏதுமற்ற கவிஞன் இப்போது நினைவாகிப் போனதுதான் பெருந்துயரம்.

- வேல்.ஷாருக்,

டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.

SCROLL FOR NEXT