குறள்
பொருள்:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றை அவனுக்குக் கொடுக்கும்.
விளக்கம்:
என் தாயார் ஒரு நாள் மாலையில் தொழுகை செய்து கொண்டிருந்தார். என் சகோதரியும் என் அண்ணியாரும் கூடத்தில் கட்டியிருந்தத் தூளிகளுக்கு அருகில் சென்று, குழந்தைகள் அழுதுவிடக் கூடாதே என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளால் தாயாரின் தொழுகை தடைபடக் கூடாதே என்கிற தவிப்பு அவர்களுக்கு. குழந்தைகள் அழுது விடக்கூடாதே என்று குழந்தைகளை அவர்கள் தொட்டவுடன், தாயின் ஸ்பரிசத்தில் குபீரென்று குழந்தைகள் சிரித்தனர். நாங்கள் எல்லோரும் தொழுதுகொண்டிருந்தத் தாயாரைத் திரும்பிப் பார்த்தோம். அவர்கள் முகத்தில் அபரிமிதமான சாந்தம்.
இன்னொரு சம்பவம். ஒருநாள் எனது சகோதரர்களும் சகோதரிகளும் அமர்ந்து ரேஷன் கடை கோதுமையில் செய்த சப்பாத்திகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நான் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி நிறைய சாப்பிட்டுவிட்டேன். சாப்பிட்டு முடித்தவுடன், என்னுடைய சகோதரர் என்னை ஓரமாக அழைத்துச் சென்று, என் தாயாருடைய பங்கையும் சேர்த்து நான் சாப்பிட்டுவிட்டேன் என்று என்னைக் கண்டித்தார். அம்மாவிடம் ஓடிச் சென்று என்னை மன்னித்துவிடுங்கள் என்று வேண்டினேன். அம்மா சிரித்தபடியே என்னை அணைத்துக்கொண்டார். இதுபோன்ற
என்றைக்கும் அன்பு குறையாத உறவுகளை நான் கொண்டிருந்ததால்தான், அது என்னை மேன்மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதாக நான் கருதுவேன். இந்தக் குறளும் இதையே எனக்கு நினைவூட்டுகிறது.
குறள்
பொருள்:
தன்னுடைய குடிமக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்ப ஆட்சி செய்யும் தலைவனின் கட்டளையை நாட்டு மக்கள் ஏற்று வாழ்வார்கள்.
விளக்கம்:
சமீபத்தில் ராமகிருஷ்ண இயக்கத்தைச் சேர்ந்த துறவி சமர்பண் எழுதிய ‘Tiya : A Parrot’s Journey Home’ என்ற புத்தகத்தைப் படித்தேன். சில புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை, எனக்கு மிகவும் நெருக்கமானவை. அந்தப் புத்தகங்கள் எனது தனிப்பட்ட நூலகத்தை அலங்கரிக்கும். அப்படி ஓரு புத்தகமான இந்தப் புத்தகம் மனசாட்சியைப் பற்றியதாக இருப்பதால் ஓவ்வொருவரையும் தொடும். இதை மிக அழகாக எழுதியிருக்கிறார் துறவி சமர்பண். அதாவது தியா என்ற பச்சைக்கிளியின் வாழ்க்கை பயணத்தில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை, அருமையாக விளக்கி உள்ளார்.
மனசாட்சி என்பது மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஓரு பேரொளி. நேர்மைக்கு புறம்பாக சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். ஓரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் அது தண்டனை.
அப்படிப்பட்ட நேர்மையான மனசாட்சி கொண்ட தலைவர்களால் மட்டுமே இந்த நாட்டை வளமான நாடாக மாற்ற இயலும். அப்படிப்பட்ட தலைவர்கள்தான் தனது குடிமக்களின் கருத்தையும், நலனையும் அறிந்து ஆட்சி புரிவார்கள்.
- நல்வழி நீளும்…