வலைஞர் பக்கம்

மக்களே உங்கள் பொன்னான வாக்குகளை..

வெங்கி

வந்துவிட்டது தேர்தல். அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கு தயாராகி வருகிறார்கள் தலைவர்கள். அதற்கு முன்பு ஒரு கற்பனை ரிகர்சல்...

கருணாநிதி

உடன்பிறப்பே! காட்டாட்சியில், கடலிடை நெருப்பில், காரிருளில் தத்தளிக்கும் உன்னையும் கலித்தொகை காணா தனித்தொகை தேடித் தந்த கனி… இல்லை, தனிமொழியையும் காப்பாற்றிக் கரை சேர்த்திட எனது உள்ளம் உழன்று துடிப்பதை நீ அறிவாய்! ஆனால் புல்லுருவிகள், நான் குடும்பத்துக்கு சேர்த்ததாய் புறங்கூறினால் அதை நீ நம்பமாட்டாய் என்பதை அறிவேன். அநீதி அழிந்திட, அராஜகம் ஒழிந்திட நமது சின்னத்தில் உனது ஓட்டைப் பதித்திடு!

ஜெயலலிதா

அனைவருக்கும் வணக்கம். உங்களுக்காகவே நான் சேவை செய்யக் காத்திருக்கிறேன். எனக்கென உடன்பிறவா சகோதரி மட்டுமே இருந்தாலும் நான் உங்களுக்காகவே இருக்கிறேன். புயல், மழை, வெள்ளம், பஞ்சம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், வாழ்க்கையிலே போராட்டம், எதிரிகளின் கரகாட்டம் என எத்தனை துயர் வந்தாலும் நீங்கள் ‘அம்மா’ என ஒருமுறை அழைத்தால் கண நேரத்தில் காணொலியில் காட்சியளிப்பேன். எனது தலைமை தரும் நல்லாட்சி! காணொலிக் காட்சியே அதற்கு சாட்சி!

விஜயகாந்த்

மக்களே பாருங்க எனக்குப் பேசத் தெரியாது. நடிக்க தெரியாது. ஆனா, ஊழலை ஒழிக்கத் தெரியும். ஆங், என்ன கேட்டீங்க? அதப்பத்தி எனக்குத் தெரியாது. கைக்குள்ள என்ன வெச்சிருக்கேன்னு கேக்குறீங்க. தொறந்து காட்டத்தானே போறேன். இப்பவே காட்டச் சொன்னா எப்படி? எனக்கு நீங்களா சம்பளம் கொடுக்குறீங்க? அப்புறம் எனக்குக் கோவம் வந்துடும். மத்தபடி கிளம்புங்க. ஆனா, ஓட்டை மட்டும் மறக்காம எங்க கட்சிக்கு போடுங்க.

வைகோ

மத்திய சர்க்கார் தமிழ்நாட்டுக்கு துரோகம் பண்ணுது. மீத்தேன், கெயில், கூடங்குளம், நியூட்ரினோ, டாஸ்மாக், திமுக, அதிமுக எல்லாத்தையும் ஒழிக்கணும். அப்பதான் நாங்க ஆட்சி அமைக்க முடியும். தமிழகமும் முன்னேறும். இல்லைன்னா அவனவன் பொண்டாட்டி, புள்ளக் குட்டியெல்லாம் ரோட்டுல நிக்கும். அதுக்கு எங்க கூட்டணிக்கு நீங்க ஓட்டு போடணும்.

ராமதாஸ்

அன்புமணிதான் அடுத்த முதல்வர்ன்னு எங்க கட்சிக்காரங்க மட்டும் முணுமுணுக்கிறது கேட்குதா? அதுதான் மாற்றம், முன்னேற்றம். நாங்க 150 தொகுதிகளில் ஜெயிக்கப் போறோம். எப்படின்னு கேட்குறீங்களா… அதை அன்புமணியே சொல்லிட்டாரு. நாங்க ஆட்சிக்கு வந்தா இலவச ரேசன், இலவச பஸ், இலவச பெட்ரோல், இலவச மின்சாரம், அத்தனையையும் நிறுத்திடுவோம். உழைப்பால் உயரணும்.

இளங்கோவன்

எங்க கோஷ்டி பூசலை நெனைச்சி ஓட்டு போடாம இருந்திடாதீங்க. அந்தம்மா ஆட்சிய அகற்றுவதே எங்கள் முதல் இலக்கு. அது எங்களால முடிகிற காரியமில்லை! அதனாலதான் கலைஞரோட கை கோத்திருக்கோம். எங்களுக்கு ஓட்டு போட்டா காங்கிரஸுல கோஷ்டியே இல்லாம ஒழிச்சிடுவேன்னு உறுதி அளிக்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. வெள்ள நிவாரணப் பணிகள் நன்றாக நடைபெற்றது. எங்களுக்கு ஓட்டு போட்டா ஊழலையும் வெள்ளத்தையும் ஒழிச்சிடுவோம். கூட்டணிக்காக யாரிடமும் கையேந்தும் நிலையில் நாங்கள் இல்லை. விஜயகாந்த் எங்கள் அணிக்கு வந்தால் முதல்வர் பதவியே தருவோம். அன்புமணி வந்தா அவருக்கும் தருவோம். பச்சமுத்து அவர்களையும் பரிசீலிப்போம்.

திருமாவளவன்

மக்கள் நலக் கூட்டணியே வெல்லும். அதனை காலம் சொல்லும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று எங்கள் கூட்டணிதான். சிலர், அரசியலுக்காக ஜாதியை பயன்படுத்துகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதி என்ற வார்த்தையையே ஒழித்திடுவோம்.

SCROLL FOR NEXT