காந்தி பெரிதாக ஒண்ணும் சாதித்து விடவில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளியில்லாமல் வாழ்ந்தார். அதுவே அவரை மகாத்மா ஆக்கியது.
அவருக்கு கம்பீரமான தோற்றமில்லை. கனமான குரல் வளம் இல்லை. அடுக்கு மொழியில் பேசத் தெரியாது.
எளிமையின் வடிவமாக இடுப்பிலே 4 முழத்துண்டு, தரையில் படுக்கை, வேர்க்கடலையும், ஆட்டுப்பாலும்தான் உணவு -இப்படி வாழ்ந்த மகான்.
தீண்டாமையை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து பார்த்தார். நாடு பிரிவினை வேண்டாம் என்று கெஞ்சிப் பார்த்தார். யாரும் கேட்கவில்லை.
61 வயதில் 79 பேரை அழைத்துக் கொண்டு 200 மைல் தண்டியாத்திரை போனார்.
இந்திய விடுதலைப் போரில் 2089-நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து 249 நாள் சிறை சென்றார்.
தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறும்போது ஜெனரல் ஸ்மட்சுக்கு ஒரு ஜோடி செருப்பு தைத்துக் கொடுத்தார்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகான் செய்த செருப்பை பயன்படுத்துவது பாவம் என்று -நெடியகாலம் வைத்திருந்து இந்தியாவுக்கே திருப்பி அனுப்பி விட்டார் ஸ்மட்ஸ்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஹரிஜன் என்று பெயர் வைத்தார். தனது பத்திரிகைக்கு ‘ஹரிஜன்’ என்று பெயர் சூட்டினார்.
தான்பென் என்ற ஹரிஜனப் பெண்ணை ஆசிரமத்தில் கஸ்தூரிபாவுக்கு ஒத்தாசை செய்ய சேர்த்துக் கொண்டார்.
அவர் மகள் லட்சுமியை தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டார். தனக்கு காபி, டீ பிடிக்கவில்லை என்ற போதும் கஸ்தூரிபாவுக்கு பிரியமாக டீ, காபி போட்டுத் தந்தார்.
பால்ய விவாகம் செய்து கன்னி கழிவதற்குள் கணவன் இறந்தால் அந்தப் பெண் மறுமணம் செய்து கொள்ளலாம் என்றார்.
22 வயதில் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து பத்து வருடம் வாழ்ந்த பின் கணவனோ- மனைவியோ இறந்து விட்டால் அவர்கள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்றார்.
‘மக்கள் பெருக்கம் பெருமைக்குரியது அல்ல!’ என்றார்.
‘கடவுளுக்கு வடிவமில்லை. ஆண் பெண் பால் பேதமில்லை. வாதம் செய்து கடவுளை நிரூபிக்க முடியாது. கடவுள் இந்த உலகத்தில் தோன்ற வேண்டும் என்றால், பசித்தவனுக்கு உணவு- வேலை வடிவத்தில்தான் தோன்ற வேண்டும்’ என்றார்.
‘நான் அசரீரி கேட்டதில்லை. தெய்வதரிசனம் பார்த்ததில்லை. கடவுள் உங்களுக்கு அளவற்ற செல்வம் கொடுத்திருப்பது உங்கள் குடும்பத்திற்குப் போக மீதியை சமுதாயத்துடன் பங்கு போட்டுக் கொள்ளத்தான்; இல்லாவிடில் ஒரு நாள் பொறுமை போய், அத்தனை பேரும் உன் வீட்டுக்குள் நுழைந்து அடித்து நொறுக்கி அத்தனையையும் எடுத்துப் போய் விடுவார்கள்!’ என்றார்.
ஒரு மதம்; ஒரு கடவுள் இருக்கலாமா?
ஒரு மரம்; ஒரு இலை இருக்க முடியுமா? ஏகப்பட்ட மதங்கள், ஏகப்பட்ட சாமிகள் இருந்தாலும் அவை அனைத்தும் சங்கமிக்கும் இடம் ஒரே கடவுள்தான் என்றார்.
தன் மனைவி, தன் மகன் என்பதற்காக மறந்தும் அவர்களுக்கு வாழ்நாளில் எந்த சலுகையும் அவர் காட்டவில்லை.
‘இப்படி ஒரு மனிதன் இந்த மண்ணில் வாழ்ந்தானா என்று வருங்கால உலகம் அதிசயக்கும்!’ என்றார் ஐன்ஸ்டின். அந்த மனித தெய்வத்துக்கு பொருந்தும் குறள்:
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்- வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
----------
குறள் கதை 31 நன்றி
என்னுடைய இளையமகன் கார்த்தி வண்டலூர் கிரசண்ட் எஞ்சினீரிங் காலேஜில் 4 ஆண்டுகள் பி.இ., படித்தான்.
அவனுக்கு உலக நடப்பு தெரியவேண்டும் என்பதற்காக தேனாம்பேட்டை பஸ் ஸ்டேண்டில் ஏற்றிவிட்டு, அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில்தான் தினமும் பயணம் செய்வான்.
கட்டிட வேலை செய்வோர், மீன் வியாபாரம் செய்வோர், காய்கறி விற்பவர்கள், ஊசி-பாசி விற்பவர்கள் எல்லோருடனும் அவன் பயணம் செய்ததை மகிழ்ச்சியுடன் சொல்வான்.
3 ஆண்டுகள் ஓடி விட்டன. அதற்குள் சூர்யாவும் நடிக்க ஆரம்பித்து பிரபலம் ஆகி விட்டான். ஒரு நாள் கார்த்தி சிரித்துக் கொண்டே கேட்டான்.
‘மூணு வருஷம் கவர்ன்மெண்ட் பஸ்ல போயிட்டேன். இன்னும் ஒரு வருஷம் போறது ஒண்ணும் சிரமமில்லே. உங்கப்பா சினிமாவுல நடிக்கிறாரு. இப்ப உங்கண்ணனும் ஹீரோ ஆயிட்டான். இன்னும் பஸ்ல வர்றியேடா. வெக்கமா இல்லையா?’ன்னு பசங்க கேக்கறாங்க.
எனக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு கெளரவப் பிரச்சனைன்னா ஒரு சின்னக் கார் வாங்கிக் குடுங்க!’ என்று கேட்டான். ஜென்- கார் வாங்கித் தந்தோம். கார்த்திக்கு நிறைய நண்பர் பட்டாளங்கள் உண்டு.
சைதாப்பேட்டை பாலத்திடம் ஒருவன், கிண்டி ரயில் நிலையம் அருகே ஒருவன், கத்திபாரா ஜங்ஷனில் ஒருவன், பல்லாவரத்தில் ஒருவன் என்று கார் தாங்கும் அளவுக்கு மேல் ‘ஓவர் லோடு’ செய்து போவான்.
ஒருநாள் தாம்பரம் பஸ்நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த ஓர் இளைஞன் மீது லாரி மீது மோதி ரத்தவெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டான்.
நண்பர்களை பஸ்ஸில் போகச்சொல்லி விட்டு அடிபட்ட இளைஞனை தன் காரில் ஏற்றி- பக்கத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்து விட்டு கல்லூரி சென்றான் கார்த்தி.
மூன்று நாள் கழித்து ஒரு பெரியவர் கார்த்தி வீட்டு விலாசம் கேட்டு எங்கள் இல்லம் வந்தார்.
‘தாம்பரத்தில் தனியார் கல்லூரி நடத்துகிறேன். 2500 மாணவர்கள் படிக்கிறார்கள். எனக்கு ஒரே மகன். நேற்று முன்தினம் தாம்பரம் பஸ் ஸ்டேண்ட் அருகே ஒரு விபத்தில் அடிபட்டு விட்டான். உங்கள் மகன் மட்டும் உரிய நேரத்தில் அவனை எடுத்துப் போய் ஆஸ்பத்திரியில் சேர்க்காமலிருந்தால் என் மகனை நான் இழந்திருப்பேன். எங்கள் எதிர்காலமே சூன்யம் ஆகியிருக்கும். கார்த்திக்கு எங்கள் கல்லூரி மாணவர்கள் முன் ஒரு பாராட்டு விழா நடத்த விரும்புகிறேன். அதற்கு அவரை நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும்!’ என்றார்.
ஆபத்தில் உதவுவது அடிப்படை மனிதப் பண்பு. அதற்கு இப்படி பாராட்டெல்லாம் வைத்தால், ஏதோ செயற்கரிய செயல் செய்து விட்டோம் என்ற கர்வம் அவனுக்கு வந்து விடும். அதனால் பாராட்டெல்லாம் அவசியமில்லை. நீங்கள் புறப்படுங்கள் என்றேன்.
‘உங்களுக்கு இது சாதாரண விஷயம் சார். என்னைப் பொறுத்தவரை, என் மகனுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் உங்கள் பிள்ளை!’ என்றார்.
அவரின் உணர்வை வெளிப்படுத்தும் குறள்:
‘காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது!’
---
கதை பேசுவோம்.
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in