படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க அரசு பல்வேறு உதவிகள் செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களைக் கொண்டு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மூலம் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு வங்கிக் கடன் மூலம் சுயதொழில் தொடங்கவும் உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாவட்ட தொழில் மையப் பணிகள், அவை அமைந்துள்ள இடங்கள், எந்தெந்த தொழில்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது, அதில் மானியம் எவ்வளவு என்பது குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்டத் தொழில் மைய மேலாளர் க.ராசு.
மாவட்ட தொழில் மையங்கள் எங்கு உள்ளன?
மாவட்ட தொழில் மையம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. அந்தந்த மாவட்ட தலைமையிடத்தில் குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.
மாவட்டத் தொழில் மையத்தின் முதன்மைப் பணி என்ன?
அதன் அடிப்படை நோக்கம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குதல். இதன்மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பது உறுதிசெய்யப்படுகிறது. இன்னொரு பக்கம், சுயதொழில் செய்வதை மாவட்டத் தொழில் மையங்கள் ஊக்குவிக்கின்றன. படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கை வழங்கப்படும். அதுபோல, கைவினைத் தொழில், குடிசைத் தொழில் நிறுவனங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதற்கு எந்தெந்த திட்டங்கள் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது?
தமிழக அரசின் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களின் கீ்ழ் சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
சுயதொழிலுக்காக வழங்கப்படும் வங்கிக் கடனில் மானியம் உள்ளதா?
நிச்சயமாக உண்டு. உதாரணமாக தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடனில் 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மாவட்ட தொழில் மையம் மூலம் சுயதொழில் பயிற்சி, கடனுதவி வழங்குவது குறித்து மக்களுக்கு எந்த வகையில் தெரியப்படுத்தப்படுகிறது?
கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியந்தோறும் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதுகுறித்த அறிவிப்பு நாளிதழ்களில் வெளியிடப்படுகிறது.