வலைஞர் பக்கம்

பேனர் கலாச்சாரத்தின் வரலாறு தெரியுமா?

செய்திப்பிரிவு

தமிழக முதல்வரின் பேனர் கலாச்சாரம் குறித்தான பேச்சு சமூக ஊடகங்களில் விவாதத்தை எழுப்பியுள்ளது. காலந்தோறும் புற்றீசல் போல் ஆங்காங்கே உருவாகி வரும் இந்த பேனர் கலாச்சாரம் ஆண்டிற்கு சராசரியாக இரண்டிலிருந்து ஐந்து உயிர்களை பலிவாங்குகிறது.

இந்தப் பதாகை கலாச்சாரத்தின் வடிவம் வேண்டுமானாலும் தற்போது மாறி இருக்கலாம். ஆனால், இந்தக் கலாச்சாரம் இப்போது தோன்றியதல்ல. இது ஏறத்தாழ 4500 ஆண்டுகள் பழமையானது. ஈராக்கில் பாக்தாத் நகருக்குத் தெற்கில் பண்டைய மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இடுகாட்டில் அரச குடும்பத்தின் "ஊர் நகரப் பதாகை" என்பதுதான் உலகின் மிகப் பழமையான பதாகையாகும். அதனைத் தொடர்ந்து எகிப்தினர் பாப்பிரஸ் எனும் பசையைப் பயன்படுத்தி சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பதாகைகளை உருவாக்கினர்.

மேலும், பண்டைய காலத்து விளம்பர வகைகளில் சுவர் மற்றும் பாறை ஓவியங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். இதற்கான சான்றுகள் இன்றும் ஆசிய ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கின்றன. சுவர் ஓவிய பாரம்பரிய நாகரிக வழக்கத்தை இந்தியப் பாறை ஓவியங்களில் நாம் காணலாம்.

அதனைத் தொடர்ந்து தொழில் புரட்சி, நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நகரங்களும் பெருநகரங்களும் வளர்ந்து வந்த நிலையில் மற்றும் வாசிக்கத் தெரியாத மக்கள் மத்தியில் தங்களது பொருட்களைக் கொண்டுபோய் சேர்க்கும் பொருட்டு புகைப்படங்களைப் பதாகைகளில் சேர்க்கும் வழக்கம் உருவானது. கல்வி அத்தியாவசியத் தேவையான பிறகு வாசித்தல் மேலும் அச்சடித்தல் வளர்ந்தபின் விளம்பரங்களில் மலர்ச்சியும் மிக வேகமாக இருந்தது. 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் விளம்பரங்கள் வாரப் பத்திரிகைகளில் வரத் தொடங்கின.

பின்பு 1090களில் முக்கிய விடுமுறைகளின்போது கேன்வாஸில் பிரகாசமான படங்கள் வரையப்பட்டு பேனர் கலாச்சாரம் தொலைதூரக் காலத்திலிருந்து நவீன உலகத்திற்கு வந்தது. இதன் விளைவாக விளம்பர அடையாளங்கள் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்கள் தெருக்களில் தோன்றின. புரட்சிகரப் பதாகைகள் 1918க்குப் பிறகு நடைமுறைக்கு வந்தன. முதலில் அவை சதுர வடிவில் கட்சிக் கட்டிடங்களுக்கு அருகில் அமைந்து இருந்தன. இன்று ஒவ்வொரு தெருக்களிலும் ஒவ்வொரு கடைக்கும் முன்னாலும் பலவிதமான வாசகங்களை ஏந்திய பதாகைகள் உள்ளன.

டிஜிட்டல் கேமரா மற்றும் கணினி தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு பதாகைகளின் உருவாக்கம் வேறு தளத்திற்கு பரிணமித்தது. நம் தமிழகத்தில் முற்காலத்தில் கோயில் விழாக்களில் தேரோட்டத்தில் தோரணம் போன்று பல பதாகைகள் அலங்காரமாகக் கட்டுவார்கள். இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது. இருந்தாலும் அது வளர்ந்து விளம்பரமாக மாறி போஸ்டர்கள், பிரசுரங்கள் என்று வளர்ந்து சினிமா விளம்பரங்கள் பிடித்த கதாநாயகன் பட வெளியீட்டு கட் அவுட்கள் என்று வளர்ந்து இன்று கண்ணீர் அஞ்சலி, கல்யாண விளம்பரம் ஆகி அனைத்து நிகழ்வுகளுக்குமாக பேனர் இல்லாத இடங்களைக் காண முடியாது.

பட வெளியீட்டின்போது அந்தக் கதாநாயகனின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது பக்தியை வெளிப்படுத்துவதில் அவ்வளவு பரவசம் அடைகிறார்கள் ரசிகர்கள்.

30 வருடங்களுக்கு முன் நம் தமிழக அரசியலில் கட்சிகள் வளர்ந்ததே இந்தப் பதாகை கலாச்சாரத்தால்தான். இன்று தனது ஆள் பலத்தையும் அரசியல் செல்வாக்கையும் காட்டும் ஒரு தூதராகவே செயல்பட்டு வரும் இந்த பேனர் கலாச்சாரம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறது என்பது விடை தெரியாத புதிராகவே உள்ளது.

கட்டுரையாளர்: வேல்.ஷாருக்,

டிஜிட்டல் மாணவப் பத்திரிகையாளர்.

SCROLL FOR NEXT