புதுமைகளைப் புகுத்தி சுறுசுறுப்பும் விறுவிறுப்புமாக சுழன்று ஆடிய ஜி.அபிராமியின் நடனம், சென்னை மயிலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில், அண்மையில் நடைபெற்றது. இந்நடன நிகழ்ச்சியில் ஜெயந்தி சுந்தர்ராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
லக்னோவில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அபிராமி, அலகாபாத்தில் உள்ள பிரயாக் சங்கீத் சமிதி நடத்திவரும் பரதக்கலையின் உயரிய பட்டயப்படிப்பான, ஆறு ஆண்டுகள் நடத்தப்படும் 'விஷாரத்' படிப்பை இந்த இள வயதிலேயே முடித்து உள்ளார். நடனத்தை எட்டு வயதில் கற்கத் தொடங்கிய அவர், லக்னோவில் நடைபெற்ற மகாஉற்சவம், முத்தமிழ் சங்கம், நாராயணா கல்சுரல் மிஷன், கேரள சமாஜம், சிஎஸ்எஸ்ஐஆரின் தேசிய கருத்தரங்கம், லக்னோ ராணுவ மையம் நடத்திய பன்னாட்டு மருத்துவர் கூட்டம் ஆகியவற்றில் நடன நிகழ்ச்சிகளை அளித்துள்ளார்.
லிம்கா சாதனை நிகழ்ச்சி மற்றும் மார்வலஸ் வேர்ல்ட் ரிகார்ட் ஆகியவற்றின் உலகிலேயே மிகப் பெரிய நடன நிகழ்ச்சி என்ற வகையில், நடந்த நிகழ்வில் பங்கு கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார் அபிராமி. மேலும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகள் பெற்ற, நடனக் கலைஞர் டாக்டர் சரோஜா வைத்தியநாதன், நிகழ்த்திய நடன பட்டறைகளில் பங்கு கொண்டு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிராமியின் இந்நிகழ்ச்சிக்கு வழக்கம் போல் வாய்ப்பாட்டு, நட்டுவாங்கம் அவரது தாய் மற்றும் குரு லலிதா கணேஷ். தஞ்சையில் சங்கீத சிரோன்மணி பட்டம் பெற்ற இவர், லக்னோவில் உள்ள பாத்கான்டே மியூசிக் இன்ஸ்ட்யூட், நிகர்நிலை பல்கலைகழகத்தில் துணை வாய்ப்பாட்டு ஆசிரியராகப் பணிபுரிகிறார். நடனமணி சரோஜாவின் சிஷ்யர் ஞானேந்திர தத் பாஜ்பாய், லலிதாவின் நடன குரு. மேலும் இசையில் இவரது குரு சங்கீத கலாநிதி பி, ராஜம் ஐயர். வயலின் இசையைத் தேனாக வடித்த பத்ரிநாத், நந்திகேஷ்வராக, கனமாக மிருதங்கம் வாசித்த சுதிர், தீர்க்கமான துணை வாய்ப்பாட்டு தந்த சுபஸ்ரீ, ஆகியோர் இணைந்த இந்த இசைக்குழு நிகழ்ச்சியை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றது என்றால் மிகை இல்லை. நாட்டை ராகம், அதி தாளத்தில் அமைந்த புஷ்பாஞ்சலியுடன் தொடங்கியது நடன நிகழ்ச்சி, அலாரிப்பைத் தொடர்ந்து, ஷப்தம். ராகமாலிகாவில் அமைந்த மகாபாரதம், முத்துசாமி தீட்சதரின், கல்யாணி ராகம் மற்றும் ஆதி தாளத்தில் அமைந்த சிவ காமேஸ்வரி, ஆதி தாளம் மற்றும் ராகமாலிகாவில் அமைந்த தசாவதார அஷ்டபதி, மையா மூரி எனத் தொடங்கும் பீம்ப்ளாஸ் ராகம், ஏக தாளத்தில் அமைந்த சூர்தாஸ் பஜன் ஆகியவை தொடர்ந்து வர முத்தாய்ப்பாக பெகாக் ராக, ஆதி தாள தில்லானா அரங்கில் அற்புதமாக வலம் வந்தது.
பிரபல நடனக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனின் சிஷ்யை ஜெயந்தி சுந்தரராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்பொழுது, அபிராமியின் நடன நிகழ்ச்சி குறித்து, அவர் கூறியதாவது: நாட்டிய சாஸ்த்திரத்தில், நாட்டியம் படிக்கணும் என்றால் ஓரு குழந்தைக்கு என்னவெல்லாம் தேவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும். நடனமணி மேடையில் தோற்றும்போதே அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாமுத்திரிகா லட்சணங்கள் வெளிப்பட வேண்டும். ஆரம்ப நொடிகளிலேயே அபிராமிக்கு இதற்காக `டிக்` மார்க் கிடைத்துவிட்டது என்றே சொல்லலாம்.
நடனத்தைப் பொறுத்தவரை பக்கவாத்தியம் மிக முக்கியம். அவங்க பாட்டுக்கு வாசிக்காமல் இவங்களோட பாட்டுக்கு மிகத் துல்லியமாக வாசித்தார்கள்.
அபிராமி இரண்டாவதாக ஆடிய `ஷப்தம்` என்ற உருப்படி இப்பொழுதெல்லாம் மேடையில் ஆடப்படுவதில்லை. இது நடனத்தை புரிந்து கொள்ளும் நிலையில் உள்ள `அபிநயம்`. இதனை தற்போது மேடையில் கொண்டு வந்து, நிகழ்த்திக் காட்டியது புதுமை. மகாபாரதம் குறித்த ஷப்ததுல மிகக் குறைந்த கால அவகாசத்தில், மகாபாரதத்தில் உள்ள பல நிகழ்வுகளை அபிநயம் பிடித்தது பிரமாதம், ஒவ்வொரு அயிட்டத்துலயும் புதுமைகள் வெளிப்பட்டன. குறிப்பாக தில்லானாவில் பஞ்ச நடையை `ஜதி` யாகச் சொல்லி ஆட வைத்தது பெருமைக்குரியது. ஜெயதேவரின் அஷ்டபதியின் நிறைவில் ஜதியில் தசாவதாரத்தை அபிராமி அபிநயம் பிடித்தது அற்புதம் என்றார்.